பி டி ஜி யுனிவர்சல் சார்பாக பாபி பாலச்சந்திரன், மனோஜ் பெனோ ஆகியோர் தயாரிக்க, வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்க, விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் ஆகியோர் இயக்கி இருக்கும் படம்.
ஒரு முழு மூத்த டான் (ஷிஹான் ஹுசைனி) தனது விசுவாசியான மூத்த தாதாவிடம் ( லிவிங்ஸ்டன்) இன்சூரன்ஸ் காரணத்துக்காக தனது வீட்டிலேயே கொள்ளை அடிக்கச் சொல்ல , அந்த மூத்த தாதா தனது விசுவாசிகளான இரண்டு இளைஞர்களிடம் (வைபவ், மணிகண்டன் ) அந்த வேலையைக் கொடுக்கிறார் .
இதில் ஒருவனுக்கும் (வைபவ்) மூத்த தாதா மகளுக்கும் ( அதுல்யா ரவி) சிறு வயது முதலே காவியக் காதல் .
கொள்ளை அடித்த பணத்தோடு இளைஞர்கள் இருவரும் பாருக்குப் போக , அங்கே பண மூட்டை தொலைந்து போக, அப்போது உதவ வரும் ஒருவர் (ரெடின் கிங்ஸ்லி ) வங்கியைக் கொள்ளையடித்து அந்தப் பணம் மூலம் இழப்பை சரி செய்யலாம் என்று சொல்ல , அதற்காக இவர்கள் மெட்ரோ ரயில் பணிகளை விட வேகமாக அண்டர் கிரவுண்டில் தோண்டிக் கொண்டே வங்கி மேல் எழ,
காமெடி என்ற பெயரில் கந்தர கோலம் நடந்தால் அதுவே சென்னை சிட்டி கேங்ஸ்டர்
தமிழ் சினிமாவின் எல்லா காமெடி கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களும் இருக்கிறார்கள் . ஆனால் காமெடிதான் இல்லை.
அணுகுண்டு விழுந்து அழிந்து முடிந்த ஹிரோஷிமா போல அமைதியாக இருக்கிறது திரையரங்கம்.
ஆரம்பத்தில் ஒரு பாட்டும் நடனமும் நன்றாக இருந்தது . அப்படி யூத் புல்லாகவாவது படம் போகும் என்று நினைத்தால் அதுவும் இல்லை
ஆனால் சிறப்பான தயாரிப்பாளர்கள் . இந்த படத்துக்கு அவர்கள் செலவு செய்து இருக்கும் தொகை மிகப் பெரிது
பெண்கள் எல்லாம் ஏலியன் போல இருக்கிறார்கள் .
கல்கி , RRR, ஆதி புருஷ் , 2.O, புஷ்பா , GOAT போன்ற மகா மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கத்தான் பெரிய தைரியம் வேண்டும் என்று நினைக்கிறீர்கள் . ரொம்ப தப்பு .
உண்மையில் CHENNAI CITY GANGSTERS போன்ற படங்களைத்தான் தயாரிக்கத்தான் மாபெரும் தைரியம் வேண்டும்.
மொத்தத்தில் சென்னை சிட்டி கேங்கர்ஸ் …. ஊளை உதார் சுள்ளான்கள்