passion ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரிக்க, ஆர் எஸ் கார்த்திக், ரோகிணி, பகவதி பெருமாள் , ஆர்யா, சவுந்தர்யா நந்தகுமார், தன்யா , சுபா நடிப்பில் அருண் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் ஒளிப்பதிவில் குணா பால சுப்பிரமணியன் இசையில் பிரகாஷ் கருணாநிதி படத் தொகுப்பில் பிரபு ஜெயராம் எழுதி இயக்கி இருக்கும் படம் என்னங்க சார் உங்க சட்டம்?
படிக்காமல் ஊரைச் சுற்றிக் கொண்டு பெண்களை கரெக்ட் பண்ணிக் கொண்டு வாழும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞன் (கார்த்திக்)சாதி வெறி பிடித்து அலைந்து ஜாலியாகவும் இருப்பது போல ஒரு இயக்குனர் கதை எழுதிக் கொண்டு போய் , ஒரு தயாரிப்பாளரிடம் (பகவதி) படம் இயக்குவதற்காக சொல்ல ,
அதே கதையை அவனது நண்பன் ஒருவன் திருடிக் கொண்டு போய் அதே தயாரிப்பாளரிடம் சொல்ல, உண்மையான படைப்பாளி அதே விஷயத்தை சீரியஸ் கதையாக எழுதுகிறார் . அதில்..
அர்ச்சகர் பணி என்பது பிராமணர்களுக்கு மட்டுமே என்று செயல்படும் சில பிராமணர்கள்… தகுதி முக்கியம் என்று நினைக்கும் ஒரு மூத்த பிராமணர் ,,,,, உண்மையான தகுதியோடு அதற்கு முயலும் தாழ்த்தப்பட்ட இளைஞர்…. அரசின் அறிவிப்பை வைத்துக் கொண்டு தகுதி இல்லாமல் சண்டை போட்டு சாதிக்க முயலும் தாழ்த்தபட்ட நபர் … இது ஒரு திரைக்கதைப் பாதை .
டி என் பி எஸ் சி வழி துணை ஆணையர் பதவிக்கான நேர்முகத் தேர்வில் பிராமணர் என்பதால் வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்…. அதிக வசதி, துறை அறிவின்மை இவற்றோடு அந்த பதவிக்கு சிபாரிசு மூலமும் இட ஒதுக்கீடு மூலமும் வரும் பெண் ….
துறை குறித்த தெளிவான அறிவு , இட ஒதுக்கீடு வழியான பொருத்தம் இருந்தும் நேர்முகத் தேர்வுக்கு வரக் கூட வசதி இல்லாத ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர் … இட ஒதுக்கீட்டை மட்டும் தகுதியாகக் கொண்டு வரும் பிராமணர் அல்லாத நபர் .. இது ஒரு திரைக்கதைப் பாதை .
இரண்டிலும் என்ன நடந்தது ? என்பதே இந்தப் படம் .
உயர் சாதி சமூகம், தாழ்த்தப்பட்ட சமூகம் இரண்டு தரப்புக்கும் நியாயமாக பேசுகிறோம் என்பது போன்ற ஒரு தோற்றத்தை புத்திசாலித்தனமாக ஏற்படுத்தும் படம் .
முதல் பாதி கதை ரொம்ப சோதிக்கிறது என்றாலும் ஜெகன் கவிராஜ் எழுதி இருக்கும் ஜீரக பிரியாணி பாடல் குணா பால சுப்பிரமணியன் இசையில் அசத்துகிறது .இருவருக்கும் பாராட்டுகள் .
முதல் பகுதியில் வரும் நடிகர்களை அப்படியே இரண்டாவது பகுதிக் கதையில் முற்றிலும் மாறான கதாபாத்திரங்களில் பயன்படுத்திய வகையில் கவர்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம்
கார்த்திக், ரோகினி, ஜூனியர் பாலையா உட்பட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
இரண்டாம் பகுதியில்தான் கனமும் ரணமும்.
பொதுவாகப் பார்க்கையில் மேல் சாதி முதல் தாழ்த்தப்பட்ட சாதி வரை அனைத்து சாதியிலும் உள்ள நல்லவர்கள், கசடுகள் இரண்டு தரப்பினரையும் வைத்து வெளுத்து இருக்கிறார்கள் என்ற உணர்வு ஏற்படுவது நிஜம்.
ஆனால் இது உணர்வுப் பூர்வமாக பார்க்கப் படவேண்டிய படம் அல்ல. அறிவுப் பூர்வமாக பார்க்கப்பட வேண்டிய படம் . அறிவை உணர்வு மூட இடம் கொடுக்கக் கூடாது .
வெகு ஜன மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டு காலமாக ஏய்க்கப்பட்டு இழந்து ,அண்மை ஆண்டுகளில் பெற்ற இட ஒதுக்கீட்டு விசயத்துக்கு இணையாக, அர்ச்சகர் பணி என்ற , அதிகம் பேர் சம்மந்தப்படாத ஒரு பணியை சமமான தட்டில் வைத்து.. அதுக்கு இது , இதுக்கு அது என்று உருக உருக கதை சொல்வதே ஏற்க முடியாத ஒன்று.
அர்ச்சகர் பணிக்கு தகுதி மட்டுமே வேண்டும் என்று சொல்லும் நபர் மட்டுமல்ல… அர்ச்சகர் பணிக்கு பிராமணர் மட்டுமே தகுதியானவர் என்று சொல்பவர்கள் கூட தனி மனித ஒழுக்கத்தில் நல்லவர்களாக இருக்கிறார்கள் .
ஆனால் அந்தப் பணிக்கு முயலும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களில் ஒருவர் மட்டும் நல்லவராம். ஆனால் ரஞ்சித்தாசன் என்பவர் அர்ச்சகர் தேர்வுக்கு வரும்போதே முதல் நாள் போதை ஹேங் ஓவருடன்தான் வருவாராம். அவர் கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவாராம் .
பிராமண அர்ச்சகர்கள் எல்லோருமே சிரேஷ்டமாக பூஜை செய்கிறார்களா என்ன ?
காஞ்சிபுரம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஒரு பெண்ணைக் கட்டிப் பிடித்து காம பூஜை நடத்தினாரே ஒரு பிராமண குருக்கள்.. அவரையும் படத்தில் காட்டி இருந்தால் அதுதான் படைப்பாண்மை. அது பற்றி ஒரு வாக்கியம் .. ம்ஹும் .. ஒரு வார்த்தை கூட காணோமே. என்னங்க சார் உங்க நியாயம்?
சவுண்டி பிராமணர் என்பது பிராமணர்களில் தாழ்த்தப்பட்ட ஒரு பிரிவு . யார் யாரைத் தாழ்த்துவதும் சமூக அநீதிதான். அந்த தாழ்வு போக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சவுண்டி பிராமணர் விசயத்திலும் குற்றவாளிகள் அந்த உயர்சாதியினரே.
அப்படி இருக்க ஒரு சவுண்டி பிராமணர் வேலை வாய்ப்பில் பாதிக்கப்படுவதை , இட ஒதுக்கீடுக்கு எதிரான தட்டில் வைத்து சித்தரிப்பதை ஏற்க முடியவில்லை.
மேலோட்டமாகப் பார்த்தால் எல்லோரிலும் நல்லோர் தீயோர் சொல்லி பொது நியாயம் பேசுகிறேன் என்ற பிரம்மையை ஏற்படுத்தும் படம் உண்மையில் தாழ்த்தப்பட்ட பிறபடுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான உணர்வை ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மனநிலையையே உருவாக்குகிறது . அந்த வகையில் இது இனிப்பு கோட்டிங் அடித்த விஷம் .
பிற்படுத்தப்பட்ட மக்களில் இட ஒதுக்கீடு மூலம் வேலை பெறும் ஒரு நபர் அடுத்த தலைமுறையிலும் தனது குடும்பத்துக்கே அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்காமல் . தனது சமூகத்திலேயே முன்னேற்றம் அடையாத இன்னொரு குடும்பத்துக்கு அதைக் கொடுக்க வேண்டும் என்று இந்தப் படம் சொல்லும் ஒரு கருத்து மட்டுமே ஏற்புடையது .
எனில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்களே கூடாதா எனில் , தேவைதான்.
மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சீர் மரபினர், பழங்குடிகள் ஆகியோருக்கு இன்னும் சாதகமாக சமூக நீதிக் கொள்கை , இட ஒதுக்கீடு ஆகியவை மாற்றப் படவேண்டும் . நிலைமை இப்படி இருக்க இந்தப் படம் எதிர்த் திசையில் போகச் சொல்வது அநியாயம் .
இதை எல்லாம் மீறி இல்லை இல்லை இந்தப் படம் பேசுவதுதான் நியாயம் என்று தோன்றலாம் . ஒரு வாதத்துக்கு அப்படியே எடுத்துக் கொண்டாலும் கூட,
உயர்சாதி மக்களுக்காக ஆண்டுக்கு எட்ட்ட்ட்ட்ட்டு லட்ச ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களை எல்லாம் அரியவகை ஏழைகள் என்று அறிவித்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கு சாவு மணி அடிக்க ஆரம்பித்து விட்ட இந்தக் காலத்தில் இந்தப் படம் கொஞ்சம் கூட அர்த்தம் இல்லாத வாதமாகிப் போய் விட்டது .
என்னங்க சார் உங்க சட்டம் … நீலிக் கண்ணீர் … முதலைக் கண்ணீர் !