IPL (INDIAN PENAL LAW) @ விமர்சனம்

 ராதா ஃ பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் மதன் கிருஷ்ணன் தயாரிக்க, டி டி எஃப் வாசன் , கிஷோர், அபிராமி,குஷிதா கல்லப்பு , சிங்கம் புலி, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய்,, போஸ் வெங்கட், திலீபன்,ஜனனி நடிப்பில் கருணாநிதி என்பவர் எழுதி இயக்கும் படம்.இந்தியன் பீனல்  லா. 

கேப்  டிரைவர் ஒருவர்  (கிஷோர்),  அவரது மனைவி (அபிராமி), தங்கை குஷிதா கல்லப்பு)  மகள் (ஜனனி) என்று ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். 
 
ஒருமுறை கேப்  டிரைவர் சாலையில் குறுக்கே போக,   தவறாக வண்டி ஓட்டி வரும் ஒருவன் (டி டி எப் வாசன்) அவரைக் கெட்ட வார்த்தையால் திட்டி விட்டுப் போய் விடுகிறான் . அந்த டென்சனில்  ரோட்டைக் கடக்கும் போது,   ஒரு பைக் மீது அவர் தவறாக மோதி விபத்துக்கு ஆளாகிறார் கேப்  டிரைவர். 
 
எனினும் பைக் இளைஞன் அவரை மருத்துவமனையில் சேர்த்து விட்டுப் போகிறான். தன்னை கெட்ட  வார்த்தையில் திட்டி விட்டுப் போன நபர் தன்  தங்கையின் காதலன் என்று அறிந்த கேப் டிரைவர் தங்கையிடம் அவனை மறந்து விடு என்கிறார் . 
 
இன்ஸ்பெக்டர் ஒருவர் லஞ்சம் வாங்க அதை ஒருவர் வீடியோ எடுக்க, அவரை அடித்துத் துவைத்து ஜெயிலில் தள்ளுகிறார் ஒரு இன்ஸ்பெக்டர் ( போஸ்  வெங்கட்) . அவனது போனை பிடுங்கி தான் லஞ்சம் வாங்கிய வீடியோவை அழிக்கப் பார்க்க, அங்கே இருக்கும் இன்னொரு வீடியோவைக் கண்டு அதிர்சசி ஆகிறார் . அது முதல்வரைப் பற்றிய ஓர் ரகசிய  வீடியோ.(இல்ல… அப்படி இல்ல… அப்படி இல்ல…)
 
இந்த நிலையில் வறுமை காரணமாக கேப்  டிரைவர் தனது காரை விற்று விடுகிறார் . 
 
லாக்கப்பில் அடி  வாங்கிய இளைஞன் செத்துப் போகிறான் .  போலீஸ் இன்ஸ்பெக்டர் சிக்குகிறார். அவர் தண்டனைக்கு உள்ளானால் அது முதல்வருக்கு ஆபத்து. 
 
எனவே லாக்கப் இளைஞன் மரணத்தில் கேப்  டிரைவரை  சிக்க வைத்து அவனை முதல் குற்றவாளியாக்கி , இன்ஸ்பெக்டரை அப்ரூவர் ஆக்கி ,குணசேகரனுக்கு தண்டனை வாங்கி கொடுத்து இன்ஸ்பெக்டரை விடுவிக்க முயலும் முதல்வர், 
 
அதற்காக அரசு எந்திரம், காவல் துறை, ரவுடிகள் என்று சகல அஸ்திரங்களையும் பிரயோகிக்க,கேப் டிரைவரின் சாதாரண நடுத்தகர்க் குடும்பம் என்ன ஆனது என்பதுதான் படம்.
 
சொல்லப்பட வேண்டிய கதை . 
 
கிஷோர் – அபிராமி இணை ஒரு நடுத்தரக் குடும்பத்தை சிறப்பாகப் பிரதிபலிக்கிறது. ஒரு முதல்வர் மோசமான நபராக இருந்தால் அங்கே எளிய மக்களின் கதி என்ன என்பதை விளக்கமாகச்  சொல்கிறார் இயக்குனர் கருணாநிதி. 
 
போலீஸ் சித்திரவதைக் காட்சிகளும்  கிஷோரின் நடிப்பும் மிரட்டுகிறது 
 
கல்லுப்பு மாதிரி வெள்ளையாக  இருக்கிறார் குஷிதா கல்லப்பு. அவரால் முடிந்த அளவுக்கு நடிக்கிறார். 
 
பைக் ரேசர் டி டி எஃப் வாசனுக்கு அவரது பைக் ஓட்டும் நிஜ  விசயத்துக்கு பொருத்தமான கேரக்டர். அதோடு இளம் ஹீரோ என்ற  நிலையில் நடனமும் உற்சாகமும் இருக்கிறது .  ஆனால்  நடிக்கணும் . கண்ணில் கொஞ்சம் கிளிசரின் போட்டுக் கொண்டு ‘உம்ம்ம் ..’ என்று கேமராவைப் பார்ப்பது சோக நடிப்பு ஆகாது. 
 
போஸ்  வெங்கட் கச்சிதம் .
 
எம் ஜிஆருக்கு அடுத்து எல்லா படங்களிலும்  ஒரே மாதிரி நடிப்பவர்  ஜான் விஜய்தான் . எம் ஜிஆர் கூட சுமார் பத்து படங்களில் வேறு மாதிரி முயன்று இருக்கிறார். ஆனால்  ஜான் விஜய் அது கூட செய்வதில்லை. எம் ஜி ஆரின் நடிப்பு  அவரை முதல்வர் ஆக்கியது. ஆனால்  ஜான் விஜய் நடிப்பு கடுப்பு ஆக்குகிறது. 
 
ஆடிட்டர் ஒருவரை செருப்பால் அடித்த முதல்வர் , தன்னால் முதல்வர் ஆக்கப்பட்ட ஒரு நபருக்கு  நிழல் அதிகார உச்ச்சத்தில் இருந்த  நபர் செய்த அவமரியாதை இரண்டையும் வைத்து ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குனர். 
 
சேசிங் காட்சிகளில்   சிறப்பாக  இருக்கிறது பிச்சுமணியின் ஒளிப்பதிவு. 
 
அஸ்வின் விநாயகமூர்த்தி யின் இசையில் பாடல்கள் ஓகே . மற்றபடி சோகத்தில் மட்டும் கொஞ்சம் ராகம் இசைக்கிறது அவரது பின்னணி இசை. 
 
பிரகாஷ் மாப்பு படத் தொகுப்பு மூலம் வைக்கவில்லை ஆப்பு. 
 
படத்தின் ஆரம்பத்தில் முதல் அரைமணி நேரம் ரொம்ப தொங்க விடுகிறார் இயக்குனர் 
 
தவிர இது போன்ற கதைகள் தமிழுக்கு புதுசு இல்லை. அதை மீறி மக்களைக் கவரும் அளவுக்கு காட்சிகள் அமையவில்லை. குறிப்பாக இந்தக் கதைக்கு தெறிக்க வைக்கும் வசனங்கள் முக்கியம் . அது படத்தில் இல்லை 
 
சில காட்சிகளில் அமெச்சூர் தனம் எட்டிப் பார்க்கிறது. 
 
இந்தப் படத்துக்கு பெயரே  பெரிய தப்பு. 
 
இந்தக்கால இளைஞர்களுக்கு ஐ பி எல் என்றால் கிரிக்கெட் தான் நினைவுக்கு வரும் . எனவே ஐ பி எல் கிரிக்கெட்டை வைத்து ஐ பி எல் (இந்தியன் பீனல்  லா- அதாவது இந்திய தண்டனைச் சட்டம் )  – ஐ சம்மந்தப்படுத்தி  ஒரு படம் செய்வதுதானே இந்தத் தலைப்புக்கான  நியாயம்? 
 
காவிரி ஆற்றைப் பற்றி ஒரு கவிஞர் எழுதுகிறார் . ஒரு நாவலாசிரியர் எழுதுகிறார் . அதே காவிரி ஆற்றைப் பற்றி ஒரு அஞ்சாம் வகுப்பு  புத்திசாலி மாணவனும் எழுதுகிறான்  என்று வைத்துக்  கொள்வோம். 
 
மாணவன் எழுதியதில் ஒரு தவறும் இருக்காது.  ஆனால் எது எல்லோரையும் கவருமா ?
 
ஐ பி எல் படத்தில் பெரிதாக எந்தத் தவறும் இல்லைதான் . ஆனால்  அது அஞ்சாம்  வகுப்பு மாணவன் எழுதிய ஆறு தன்  வரலாறு கூறுதல் எழுதும் அளவுக்குத்தான் இருக்கிறது 
 
ஐ பி எல் … நல்ல அணி . ஆனால் ஜெயிக்கவில்லை.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *