தேரே இஷ்க் மெய்ன் (Tere Ishk Mein) @ விமர்சனம்

டி சீரிஸ் மற்றும் கலர் யெல்லோ  புரொடக்ஷன்ஸ் சார்பில் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஹிமான்ஷு  ஷர்மா,  ஆகியோருடன் சேர்ந்து தயாரித்து ஆனந்த் எல் ராய்  இயக்க,  ஹிமான்ஷு  ஷர்மா எழுத்தில் 

தனுஷ், கிரித்தி  சனோன், பிரகாஷ் ராஜ் , பிரியான்ஷூ பைன்யுளி  மற்றும் நிறைய இந்தி நடிக நடிகையர்  நடிக்க, இந்தியில் உருவாகி இருப்பதோடு தமிழிலும் மொழிமாற்று ஆகி  வந்திருக்கும் படம் தேரே இஷ்க்  மெய்ன் (‘உனது காதலில் ‘ என்று பொருள்)
 
இந்திய விமானப்படையின்   பைலட் ஆபிசர் ஷங்கர் குருக்கள்  (தனுஷ்). இந்திய விமானப்படை அதிகாரிகளையும் மீறி சீன விமானப் படைக்கு ஆட்டம் காட்டுபவர்.  மனோ ரீதியாக சில பிரச்னைகளில் இருக்கும் அவருக்கு கவுன்சிலிங்  கொடுக்க வருகிறார், குடிப் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும்  உடல்  நலக் கோளாறும் உள்ள பெண் கவுன்சிலர் முக்தி ( கிரித்தி  சனோன்). அவரைப் பார்த்தவுடன் மேலும்  தன்னிலை இழக்கிறார் ஆபீசர். 
 
சில பல ஆண்டுகளுக்கு  முன்பு…. 
 
டெல்லியில் கல்லூரியில் படிக்கும் முக்தி , உடலும் மனமும் ரத்த வெறி பிடித்து வன்முறை செய்யும் ஒரு நபரை அகிம்சாவாதியாக மாற்றும்  புராஜெக்டில்  இறங்குகிறாள் 
 
அவள் தேர்ந்தெடுக்கும் இளைஞன்தான்  ஷங்கர் குருக்கள். மிகப் பெரிய வன்முறைகளை  கொஞ்சமும் ரத்தம் குறித்த பயம் இன்றி, சர்வ சாதாரணமாக நிகழ்த்துகிறான்  ஷங்கர் குருக்கள்.  (யார் அங்கே சிரிப்பது.?)  அவனது அப்பா ராகவ் குருக்கள் ( பிரகாஷ் ராஜ்) தம்பி வேத் ( பிரியான்ஷூ பைன்யுளி ) மூவரும் ஒன்றாக சரக்கு அடிப்பார்கள். தம் அடிப்பார்கள்.
 
முக்தியின் கல்லூரி ஆண்  புரஃபஸர் ஒருவரும் பெண் புரஃபஸர்  ஒருவரும் அருகருகில் அமர்ந்திருக்க, பெண் புரஃபஸரைக்காட்டி ஆன் புரஃபஸரிடம் “முடிச்சாச்சா?” என்கிறான்  ஷங்கர் குருக்கள். 
 
பத்து வருடம் முன்பு சென்னையில் இருந்து டெல்லி வந்த குருக்கள் குடும்பம் அது. ராகவ் குருக்கள் சென்னையில் நோட்டரி  பப்ளிக் ஆக  இருந்தவர்  டெல்லியிலும் அதே  வேலை.  பழைய  பில்டிங் ஒன்றின் குறுகலான  மாடியில் ஒரு ஒண்டுக் குடித்தன  புகை படிந்த  ஒரு நல்ல நாற்காலி கூட இல்லாத அறையில் அவர்கள் வசிக்கிறார்கள் . 
 
 ஷங்கர் குருக்களை முக்தி அணுக , குருக்களோ அவள் அழகை ரசிக்கிறான்.  ”நான் கோபத்தை மறந்து , தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு திருந்த வேண்டும் என்றால் என்னுடன் FUN  பண்ண வேண்டும்” என்கிறான்  
 
உடனே அவள் ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு  குருக்களை வர வைத்து, உடையைக் களைந்து கட்டிலில் படுத்து” வா” என்கிறாள். ஆனால் ஷங்கர்  குருக்களால் முடியவில்லை. 
 
“நீ  உன் புராஜெக்ட்டில் வெற்றி பெற உடையை அவிழ்த்து  எதற்கும் தயாராக இருக்கலாம் . எனக்கு உன் மேல் வந்த காதல் அவிழ்த்துப் போடும் உடை அல்ல. . எனவே என்னால் அப்படி முடியவில்லை” என்கிறான் . 
 
”இருவரும் சேர்ந்து புராஜெக்டில் ஈடுபடுவோம் . நான் உன்னை காதலனாக  பார்க்கவில்லை . நண்பனாகத்தான் பார்க்கிறேன். நீ வேண்டுமானால்  என்னை காதலியாக நினைத்துக் கொள்”   என்கிறாள் முக்தி . 
 
”பார்ப்போம்  யாருக்கு வெற்றி என்று ..” என்கிறான்  ஷங்கர் குருக்கள். 
 
இருவரும் நன்கு பழகுகிறார்கள். 
 
“யாரோ ஒருவரை காப்பாற்றப் போய் தனது  அம்மா நெருப்பில் வெந்ததை சொல்லும் சங்கர் குருக்கள், அடிக்கடி என் உடம்பு எரிவது போல  இருக்கும் . நீ இருக்கும்போது  அந்த தீ எரிச்சல் இல்லை “என்கிறான் ஷங்கர் குருக்கள்  முக்தி கண்ணீர் விடுகிறாள் . 
 
அந்த நேரம் பார்த்து அவளை பார்க்க வரும்  ஒருவனை அவள் அணைத்துக் கொள்ள , அவன் தனது காதலுக்கு எதிராக வருவான் என்று எண்ணி அவன் மீது தன் மீதும் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு முக்தியிடம் ”எங்கள் இருவரில் யாரவது ஒருவனை எரித்து விடு” என்கிறான்  
 
புதிதாக வந்தவன் நண்பன் தான் என்று அவள் சொல்ல  நிதானத்துக்கு வருகிறான்  
 
தனது அப்பாவை சந்திக்க வரச்  சொல்கிறாள் முக்தி . 
 
அவர் டெல்லி அரசில் இணைச்  செயலாளராக இருப்பவர் . அரண்மனை மாதிரி வீடு . 
 
அவர் ஷங்கர் குருக்களிடம், ”  செருப்புக்கு டோக்கன் போட்டு அந்தக் காசில்  பிழைக்கும் உனக்கு என் மகளைக் கொடுக்க முடியுமா? எனக்கு கீழ் நூற்றுக்கணக்கான ஐ ஏ எஸ்,  ஐ பி எஸ் ஆபீசர்கள் இருக்கிறார்கள். . நீ  UPSC  பிரிலிமினரி எக்ஸாம் மட்டுமாவது பாஸ் பண்ணிட்டு வா ” என்று சொல்லி விடுகிறார். 
 
”நான் பாஸ் பண்ற வரை எனக்கு நீ போன் பண்ணாத . பாஸ் பண்ண உடன் போன் செய்வேன். எடுக்க மறந்திடாத “என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறான் ஷங்கர் குருக்கள்.  விஷயம் தெரிந்த ராகவ் குருக்களும் வேத்  குருக்களும் , ” நீயாவது UPSC  பாஸ் செய்வதாவது?. உனக்கு அதெல்லாம் வராது” என்று ஷங்கர் குருக்களிடம் சொல்கிறார்கள். 
 
ஷங்கர் குருக்களும் பலமுறை UPSC எழுதி தோல்வி அடைய , முக்தி அமெரிக்கா போய் படித்து இன்னொருவரை காதலித்து அவரோடு மீண்டும் டெல்லி வந்து, அப்பாவின் சம்மதத்தோடு அவளது பிறந்த நாள் அன்று தனது கல்யாண முடிவை அறிவிக்க,  சங்கர் குருக்களிடம் இருந்து போன்!  அதிர்ந்து போய் பார்க்க அதே  கூட்டத்தில் போன் செய்தபடி கடும் கோபத்தில் அசுரனாக  நிற்கிறான்  ஷங்கர் குருக்கள்.  
 
பெட்ரோல்  பாம் கொண்டு வந்து முக்தியின்  வீடெங்கும் வெடி வைக்கிறான். .   அவனை  சமாதானப்படுத்த முயலும் முக்தி ஷங்கர் குருக்களிடம் , ” நான் உன்னை லவ் பண்ணவே இல்ல. அதை சொன்னா  நீ சும்மா விடமாட்ட. அதனால் நான் தான் என் அப்பா கிட்ட  UPSC  விஷயத்தை சொல்ல சொன்னேன் . ஒண்ணு  பாஸ் பண்ணாம போயிடுவ . பாஸ் பண்ணா லைஃப்ல  முன்னேறுவ என்று சொன்னேன்” என்று சொல்ல நொந்து போகிறான் ஷங்கர் குருக்கள். 
 
போலீஸ் ஷங்கர் குருக்களை  அடித்துப் பிளக்கிறது .   ஷங்கர் குருக்கள்  மேல் கேஸ் போடக் கூடாது என்றால் , என்  பங்களாவில் உள்ள ஒவ்வொருவர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்கிறார். முக்தியின் அப்பா. அப்படியே எல்லார் காலிலும் விழுகிறார் ராகவ் குருக்கள் . 
 
மகனை மீட்டுக் கொண்டு வரும் வழியில் விபத்தில் சிக்கி  ராகவ் குருக்கள் இறந்தும் போகிறார் . அப்பாவின் அஸ்தியைக் கரைக்க கங்கா போகும் ஷங்கர் குருக்கள் , அங்கே  தர்ப்பணம் செய்து வைக்கும் நபரின் ஆறுதலுக்கு ஆளாகிறான். . 
 
இப்போது விமானப்படை அதிகாரியாக ஷங்கர்  குருக்கள் இருக்க, முக்தி புகைப் பழக்கம் , குடிப்பழக்கம் , உடல் நோய் , வயிற்றில் குழந்தை என்று இருக்க,ஷங்கர் குருக்களுக்கு பிட்னெஸ் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறாள் முக்தி . காரணம் அப்படி கொடுததால்  ஷங்கர் குருக்கள் போரில் செத்து விடுவார்  என்று பயம். ஆனால்  சாக வேண்டும் ; அது நாட்டுக்காக நடக்கட்டும் என்பது அவரது முடிவு  (இத்தனைக்கும் அவளது கணவன் அதே போர்க்களத்தில் இருக்கிறான்.) 
 
முக்தி ஏன் அப்படி ஆனாள்? ஷங்கர் குருக்கள் பிரிந்த பின் அவளது வாழ்க்கை என்ன ஆனது? ஃ பிட்னஸ் சர்டிபிகேட் கொடுத்தாளா? ஷங்கர் குருக்களுக்கு என்ன ஆனது என்பதே இந்த தேரே இஷ்க்  மெய்ன்.
 
தனுஷ் எல்லாம் நன்றாக நடிக்கவில்லை என்றால்தான் அது ஆச்சர்யம் . ஆனாலும் இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பு அவர் வானில் ஓட்டும் விமானம் போலவே சீறிப்  பாய்கிறது. ரவுடி ,  காதலில் தோற்கும் நபர், இவற்றில் ஒரு தனுஷையும் விமானப் படை வீரராக வேறொரு தனுஷையும் பார்க்க முடிகிறது. 
 
சும்மா சொல்லக் கூடாது. மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார் ஆனந்த்  எல் ராய் . கதையின் சில திருப்பங்கள் சிறப்பு. ஒவ்வொரு காடசிக்குமான  சீன்  டீடெய்ல்கள்  பிரமாதம் . வசனம் பல இடங்களில் ஆழமும் அர்த்தமுமாக இருக்கிறது. 
 
”காதல்னா என்னன்னு புரிஞ்சு  காதலிக்கிற கடைசி தலைமுறை இதுதான்” போன்ற வசனங்கள் உணர்வுக்கு குவியல்.
 
 ஏ ஆர் ரகுமான் இசை சுமார் இரண்டே முக்கால் மணிநேரப்  படத்தை தொங்க விடாமல் தூக்கிப் பிடிக்கிறது.  படத்தை தொடர்ந்து பார்க்க வைப்பதில்  பெரும்பங்கு ஏ ஆர் ரகுமான் இசையையே சாரும்.  
 
சினேகன், பா. விஜய்,  விவேக், ஆகியோர் எழுதி இருக்கும் தமிழ் பாடல் வரிகள் அபாரம். 
 
நவீன அழகின் பிரதிபலிப்பாக இருக்கும் கிரித்தி  சனோன்  நடிப்பிலும்  பாராட்ட வைக்கிறார் . நிறுத்தி நிதானமான சின்ன சின்ன உணர்வு மாற்றங்கள் , பிரசவ காட்சியில்  வலியை  வெளிப்படுத்தும் விதம் யாவும் அருமை. 
 
துஷார் கன்ட்டி  ராயின்  ஒளிப்பதிவு வான் காட்சிகளில் வாயைப் பிளக்க வைக்கிறது. சி ஜி உள்ளிட்ட தொழில் நுட்பமும் அருமை. 
 
ஹேமல் கோத்தாரி , பிரகாஷ் சந்திர சாஹூ ஆகியோரின் படத்தொகுப்பு நீளத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றாலும் உணர்வுப் பூர்வமான காட்சிகளை தொகுப்பதில் அனாயசமாக ஜெயிக்கிறது .
 
இப்படி ஒரு படத்திலும்  கூட வரும் காவிக் காட்சிகள் தேவையற்ற திணிப்பு.   கடைசிக் காட்சியைக் கூட காவி சாயத்தில் முக்கி முடிக்கிறார்கள்.
 
இவ்வளவு பெரிய காதல், நட்பு, காதல் மாதிரி … போன்ற போராட்டங்களில் சிக்கும் முக்தி கேரக்டர் ஆரம்பத்தில் ஷங்கர் குருக்களை சம்மதிக்க வைக்க,ரூம் போட்டு உடையைக் கழற்றுகிறாள் என்பது  அந்த கேரக்டரை அசிங்கப்படுத்துகிறது . 
 
இவ்வளவு கலவரம் ரகளை  என்று நடந்த பிறகும் நான் உன்னை காதலிக்கவே இல்லை என்று முக்தி சொல்வது மிகப் பெரிய மைனஸ் . வித்தியாசமான கதை என்ற பெயரில்  நடந்த சொதப்பல் . வீட்டில் லைட், மின் விசிறி , ஏ சி , டி வி எல்லாம் இருந்தும் வீட்டுக்கு மின்சார சர்வீஸ் வாங்கவில்லை என்றால் எப்படி?
 
பிரச்னைகள்  உச்சத்தில் இருக்கும் நிலையில்  ஒரு நொடியாவது,” நான் உன்னை காதலிக்க ஆரம்பித்தபோது , நிலைமை  கை மீறிப் போய்விட்டது” என்று முக்தி அவனிடமோ அல்லது ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படி ஒரு வார்ததை  ஒரே வார்த்தை சொல்லி இருந்தால் படம் முழுக்க அந்த மின்சாரம் பாய்ந்திருக்கும்.
 
அம்மாவுக்கு அடுத்த இடத்தில் வைத்து காதலில் உருகும் ஒருவன் மேல் காதல் வரவே இல்லை என்றால்,  அவன் வாழ்வில் இவ்வளவு அலைக்கழிக்கும் உரிமையை எடுத்துக் கொள்ள முக்திக்கு உரிமை இல்லை. 
 
எல்லா இந்திப்  படங்களிலும் சென்னையில் இருந்து வரும் கதாபாத்திரம் என்றால் அது பிராமணர்கள்தான் என்று காட்டும் இந்தி சினிமாவின்  தற்குறித்தனம் இந்தப் படத்திலும் இருக்கிறது. 
 
உண்மையில் சென்னையில் இருந்து மும்பை டெல்லி நகரங்களில் முதலில் குடியேறியவர்கள்  எல்லாம் பிராமண சமுதாயம் அல்லாத  மற்ற சமூகங்களே. 
 
தனுஷை ஷங்கர் குருக்கள் என்றும் பிரகாஷ் ராஜை ராகவ் குருக்கள் என்றும் யோசிக்கவே   காமெடியாக இருக்கிறது .  அதுவும் ஷங்கர் குருக்கள் ராகவ் குருக்கள் அஸ்தியை கரைக்கும்போது  தர்ப்பணக்  குருக்கள் ஷங்கர் குருக்களைப்  பார்த்து,” ராகவ் குருக்களுக்கு இங்கே எதுக்கு அஸ்தி கரைக்கனணும் . ராகவ் குருக்களுக்கு ஷங்கர் குருக்கள் மகனா?” என்கிறார் சற்றே கிண்டலாக.. 
 
ஸ்ஸ்ஸப்பா … இதுலயும் ஒரு பாலிடிக்ஸ்!
 
கிளைமாக்ஸுக்கு முன்னால் என்ன பண்ணுவது என்பதில் குழப்பம் .  இந்த இடத்திலாவது ஒழுங்காக எழுதி இருந்தால் இந்தப் படம் வெற்றி படமாக ஆகும் வாய்ப்பு இன்னும் அதிகரித்திருக்கும். 
 
கடைசியில், ” என் கணவர் போரில் இருக்கிறார் ; ஆனால்  நீ போருக்குப்  போனால் செத்துடுவ . அதனால் போக வேண்டாம்.  ஆங்.. அப்புறம் என் வயிற்றில் உள்ள குழந்தை எனக்கும் என் கணவனுக்கும் பிறந்ததுதான் . ஆனா அது உன் குழந்தை.. ” என்று .. காதல் மாதிரி.. ஏதேதோ சொல்கிறார் 
 
எனினும் பாடகர் ஜிம் ரீவ்ஸின் முடிவை நினைவு படுத்தும் அந்த கிளைமாக்ஸ் கனம் . 
 
மொத்தத்தில் தேரே இஷ்க்  மெய்ன் …. தோடா நாராச கி மெய்ன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *