மதுரை ஸ்ரீ கள்ளழகர் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரசன்னா, கலையரசன், சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் ,
எம்.நாகராஜன் எழுதி இயக்கி இருக்கும் படம் காலக் கூத்து. படத்தின் கலைக் கூத்து எப்படி ? பேசலாம் .
சிறு வயது முதலே மிக நெருங்கிய நண்பர்கள் ஈஸ்வரும்( பிரசன்னா) ஹரியும் (கலையரசன்) . ஹரிக்கும் காயத்ரி என்ற பெண்ணுக்கும் ( சாய் தன்ஷிகா) காதல் .
ரேவதி என்ற ஒரு பெண் (சிருஷ்டி டாங்கே) ஈஸ்வரை விரும்புகிறாள். தன் காதலுக்கு ஹரியின் உதவியை நாடுகிறாள் . ஒரு நிலையில் அவளை ஈஸ்வரும் காதலிக்க ஆரம்பிக்கிறான் .
இந்த நிலையில் அடாவடி பெண் கவுன்சிலர் ஒருவரின் தம்பி , இந்த நண்பர்களின் நெருங்கிய நண்பனின் தங்கையிடம் தவறாக நடக்க முயல, அவனை அடி பின்னி எடுக்கிறான் ஈஸ்வர் .
கவுன்சிலர் மேயர் தேர்தலுக்கு நிற்கும் நிலையில் ஜெயிக்கும் வரை அமைதி காத்து அப்புறம் ஈஸ்வரை கொல்ல திட்டமிடுகிறது .
ஒரு சூழலில் திடீர் என்று ரேவதி, ஈஸ்வரை புறக்கணித்து அப்பா பார்க்கும் நபரை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறாள்.
இந்த நிலையில் காயத்ரி வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் . விஷயம் தெரிந்து ஹரியும் காயத்ரியும் ஈஸ்வர் உதவியுடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள,
அந்த அவமானத்தில் காயத்ரி வீட்டில் ஓர் எதிர்பாராத சம்பவம் .
அந்த கோபத்தில் அவர்கள் ஹரியையும் காயத்ரியையும் தேட, அதே நேரம் தேர்தலில் ஜெயித்த பெண் மேயர் , ஈஸ்வரை கொலை செய்ய களம் இறங்க, அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
மதுரையை களமாகக் கொண்டு பயணிக்கும் இந்தப் படத்தில் மதுரைத் தமிழை மிக அட்டகாசமாக கையாண்டுள்ளனர் . நண்பர்களின் உடல் மொழிகளிலும் அப்படி ஒரு மதுரைத்தனம்.
நிறுத்தி நிதானமாக அழுத்தமாக ஷாட் வைக்கிறார் இயக்குனர் .
அன்பறிவின் சண்டைக் காட்சிகள் பின்னிப் பெடல் எடுக்கின்றன. அபாரம் . அசத்தல் .
கலை அரசன் மிக இயல்பாகவும் பிரசன்னா மிக அழுத்தமாகவும் நடித்து உள்ளனர் .
சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே இருவரும் ஒகே .
ரேவதியின்(சிருஷ்டி டாங்கே) ஈஸ்வர் மீதான காதல் ஒரு மெல்லிய கவிதையாய் ஆரம்பித்து மலர்கிறது . படத்தின் மிக உயிர்ப்பான கேரக்டர் அதுதான் .
ஆனால் ஒரு நிலையில் அந்த கேரக்டரை சிதைத்துச் அழித்து விட்டார்கள் . படத்தின் பெரும் பலவீனம் அது .
அடுத்து என்ன நடக்கும் என்று யாராலும் யூகிக்க முடிகிற நீட்சி மற்றும் திருப்பங்கள் காரணமாக தரைக்கதை ஆகிக் கிடக்கிறது திரைக்கதை .
தேவைக்கு அதிகமாக நீளும் காட்சிகளில் பங்கப் பட்டு நிற்கிறது படத் தொகுப்பு .
பார்த்து அலுத்துப் புளித்த காட்சிகளின் தொகுப்பாக இருப்பதால்,
காலக்கூத்து … வெறும் கூத்து .