மலையாள நடிகர் டோவினோ தாமஸ் , பியா பாஜ்பை ஜோடியாக நடிக்க, பிரபு , சுகாசினி , ரோகினி உடன் நடிக்க,
உதயபானு மகேஸ்வரனின் கதை திரைக்கதைக்கு கே. சண்முகம் வசனம் எழுத , பி ஆர் விஜயலட்சுமி தயாரித்து இயக்கி இருக்கும் படம் அபியும் அனுவும்.
ஒட்டிக்கலாமா ? வெட்டிக்கலாமா ? பேசுவோம் .
ஐ டி கம்பெனி இளைஞனான அபி என்ற அபிமன்யூவுக்கும் ( டோவினோ தாமஸ் ) , புற்று நோய் விழிப்புணர்ச்சிப் பணி செய்யும் இளம்பெண் அனுவுக்கும்( பியா பாஜ்பை) இருவருக்கும் முக நூல் வழிக் காதல் .
அனு தன் அம்மாவிடமும் (ரோகினி) அபி தனது அப்பா அம்மாவிடமும் (உதயபானு மகேஸ்வரன்– தீபா ராமானுஜம்) சொல்லாமல் கூட திருமணம் செய்து கொண்டு பிறகு சொல்கின்றனர். பெற்றோரும் ஏற்கின்றனர் .
அனு கர்ப்பம் ஆகிறாள்.
இந்த நிலையில் அனுவின் அம்மாதான் வாடகைத்தாயாக உயிரணுவை ஏந்தி அபியையும் பெற்றுக் கொடுத்தவள்; ஆக, அபி அனு இருவருக்கும் அம்மா ஒருவர்தான் .
அப்பாதான் வேறு வேறு, இருவரும் உறவுப் படி அண்ணன் தங்கை என்ற உண்மை வேலைக்காரப் பெண்மணி ( கலை ராணி) மூலம் , தெரியவருகிறது .
கருவைக் கலைத்து விட்டு விவாகரத்து செய்து பணத்தைக் கொடுத்து அனுவை செட்டில் செய்து விட்டு வரும்படி அபியின் அப்பா அம்மா சொல்கின்றனர் .
ஆனால் பிள்ளையைப் பெற்றுக் கொண்டு கணவன் மனைவியாக வாழலாம் என்கிறாள் அனு.
குழப்பத்தில் அனுவின் அம்மா சாக, அவருக்கு மகனாக சடங்குகள் செய்து விட்டு, அப்பா அம்மா சொன்ன வழியில் அனுவைப் பிரிய முடிவு செய்கிறான் அபி.
”கருவைக் கலைக்க முடியாது . நான் பெற்று வளர்த்துக் கொள்கிறேன் . குழந்தை பிறக்கும்வரையாவது கூட இரு” என்கிறாள் அனு.
ஆரம்பத்தில் அபி சம்மதிக்கிறான் . பின்னர் அதிலும் பிரச்னை .
அபியின் பக்கத்து வீட்டில் வாழும் குழந்தை இல்லாத ஜோடி(பிரபு – சுகாசினி) இருவரையும் கணவன் மனைவியாக வாழ வைக்க முடிவு செய்கிறது .
அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம்
— என்று முடிக்க எல்லாம் ஒன்றும் இல்லை .
ஏனென்றால் ஒண்ணும் நடக்கல .
அனுவின் அம்மாவுக்கு மகனாக சடங்குகள் செய்ய முடிவு செய்யும் அபி அதன் மூலம் அனுவை பிரிய முடிவு செய்கிறான் என்ற ஒரு இழை மட்டும் கவனம் கவர்கிறது .
எப்போதோ ஆனந்தக் கும்மி என்ற பெயரில் வந்து இளையராஜாவின் காலத்தால் அழியாத பாடல்கள் கிடைத்தும் படு தோல்வி அடைந்த கதையை,
இப்போது ஒருத்தர் எழுதி , எந்த சுவாரஸ்யமும் இல்லாத உப்பு சப்பற்ற காட்சிகளுடன் திரைக்கதை எழுதி ,
ஏதோ ரேடியோ டிராமா கணக்காக ஒருவர் வசனம் எழுத ,
பலரும் பார்க்காத ஒரு சேனலின் பிரைம் டைம் அல்லாத நேரத்தில் அழுது வடியும் ஒரு அரைவேக்காடு சீரியல் போன்ற மேக்கிங்கில் நத்தையாக ஊர்கிறது படம் , சொத்தையாக !
தமிழ் பேசுவதாக நினைத்துக் கொண்டு மலையாள நெடி மண்டையை உடைக்க வசனம் பேசும் டோவினோ தாமஸ் இன்னொரு பக்கம் எரிச்சல் மூட்டுகிறார் .
பியா பாஜ்பை படு செயற்கை . சுகாசினி பிரபு கேரக்டர்களும் அப்படியே .
அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது எனும்போது எதற்கு அந்த கதாபாத்திரங்கள் , காட்சிகள் ?
திரைக்கதையில் ஒரு கேரக்டர் மற்றும் காட்சி வருவதற்கு ஒரு கரணம் மற்றும் விளைவு வேண்டாவா ?
ஒரு உண்மை சம்பவம் என்று சும்மாவாச்சும் கூறிக் கொள்ளும் இந்தக் கதையில் இவ்வளவு கூத்தும் அடித்து விட்டு,
கடைசியில் அனு வாடகைத்தாய் மூலம் பிறந்தவள் அல்ல . டெஸ்ட் டியூப் பேபிதான் என்று கடைசியில் ஒரு தகவல் வேறு .
என்னதான்பா சொல்ல வர்றீங்க . ? என்னமோ போங்கப்பா .