நட்சத்திரா மூவி மேஜிக் நிறுவனத்தின் சார்பில் செனித் கெலோத் தயாரிக்க கிருஷ்ணா நாயகனாகவும், வித்யா பிரதீப் நாயகியாகவும் நடிக்க,
சம்யுக்தா, விஷ்ணு, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன், மீரா கிருஷ்ணா, அஞ்சலி தேவி, கோச் ரவி, கிருஷ்ண தேவா, டாக்டர் ரியாஸ் தோஹா மற்றும் பலர் நடிக்க,
கதை, திரைக்கதை எழுதி கிரன்சாந்த் இயக்கி இருக்கும் படம் களரி. களிப்பா? கலவரமா ?பேசலாம் .
தமிழ் மூவேந்த அரசுகளில் ஒன்றான செரநாடே சேரளம் ஆகி பின்னால் கேரளம் ஆனது என்பது ஒரு பக்கம் இருக்க, காலகாலமாக கேரளா மாநிலத்தின் கட்டமைப்பில் தமிழர்களின் உழைப்புக்கு பெரும்பங்கு உண்டு .
நவீன கேரளாவின் நிர்மாணமும் அதற்கு விதி விலக்கல்ல.
அந்த வகையில் கொச்சி நகரை உருவாக்கியதில் தமிழ்நாட்டில் இருந்து போன கட்டிடத் தொழிலாளர்களுக்கு பெரும்பங்கு உண்டு . ஒரு நிலையில் அவர்கள் அங்கேரே செட்டில் ஆக, அங்கே தமிழர்களின் எண்ணிக்கை அதிகம் .
அப்படி கொச்சி நகரில் மிக அதிக எண்ணிகையில் தமிழர்கள் வாழும் வாத்துருத்தி என்ற பகுதியில் நடக்கும் கதை . குடிகார அப்பனுக்கு ( எம் எஸ் பாஸ்கர்)பிள்ளையாகப் பிறந்து அவர் அம்மாவையும் மீரா கிருஷ்ணன்) , தங்கையையும் அடிப்பதைப் பயத்தோடு பார்த்துப் பார்த்தே வளர்ந்து ,
பய உணர்ச்சியுடனே வாழ்ந்து வரும் முருகேசனுக்கு (கிருஷ்ணா) , பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் ஒரு காதலி (வித்யா பிரதீப்) .
முருகேசனுக்கு தங்கை தேன் மொழி (சம்யுக்தா) மீது கொள்ளைப் பாசம்
ஒரு மலையாள விபச்சார புரோக்கருக்கு பெண்களை அனுப்பி வைக்க, தனது டாக்சியை பயன்படுத்தும் ஓர் இளைஞனுக்கும் (விஷ்ணு) , தேன்மொழிக்கும் காதல் .
தேன்மொழியை தொழிலுக்கு கொண்டு வந்தால் நிறைய பணம் தருகிறேன் என்கிறார் புரோக்கார் .
அந்தப் பகுதி பெரிய மனிதர் ஒருவர் நிறுவனத்தில் ஓர் அநாதை இளைஞன் வேலை செய்கிறான் . அவனுக்கு தேன் மொழி மீது காதல் .
டாக்சி இளைஞன் , அநாதை இளைஞன் இருவருமே , தேன் மொழியின் தந்தைக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து தங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறார்கள் .
என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உன்னை சும்மா விட மாட்டேன் என்கிறான் காதலிப்பவன் . இருவரும் கட்டிப் பிடித்து முத்தம கொடுக்கும் பல போட்டோக்கள் அவன் கைவசம் . ஒரு நிலையில் காதலனுக்கும், குடிகார அப்பாவுக்கும் தகராறு வருகிறது . பெரிய மனிதரின் கட்டுப்பாட்டில் வளர்ந்த அநாதை இளைஞனோடு திருமணம் நடக்கிறது .
திருமணத்துக்குப் பிறகும் தங்கை காதலனுடன் ரகசியமாக பைக்கில் போவதை நாயகன் பார்க்கிறான் . தங்கை கருக் கலைப்பு செய்ய முயன்று இருப்பதும்,
அதற்கான விண்ணப்ப படிவத்தில் கணவன் என்று காதலன் பெயரை போட்டு இருப்பதும் நாயகனுக்கு தெரிய வருகிறது .
இந்நிலையில் தங்கை தற்கொலை செய்து கொள்கிறாள் .
அவளது மரணத்துக்கு காரணம் யார் என்ன என்பதை நாயகனால் கண்டு பிடிக்க முடிந்ததா ? ஆம் எனில் அதற்கு அவன் ஆற்றிய எதிர்வினை என்ன என்பதே இந்தப் படம் .
கொச்சின் பற்றிய வரலாற்றையும் அதில் தமிழர்களின் பங்களிப்பையும் கூறும் விதம் அருமை .
பயந்தாங்கொள்ளி அண்ணன் தங்கையிடம் அந்த பகுதி இளைஞர்கள் யாரும் தவறாக நடந்து கொள்ளக் கூடாது என்பதற்காக,
அவர்களுக்கு வேண்டியது எல்லாம் செய்கிறான் என்ற ஐடியா சுவாரஸ்யம் . ஆனால் சொன்ன விதத்தில் அது லாஜிக் மீறலாகவே தெரிகிறது
கிருஷ்ணா இயல்பாக நடிக்கிறார் . ஈகோ பிடித்த கல் மனசு குடிகாரன் கேரக்டரை ரசித்து செய்கிறார் எம் எஸ் பாஸ்கர் .
முகம் முழுக்க கண் வைத்து இருக்கிற வித்யாவுக்கு அதுவே பெரிய பிளஸ் . தங்கையாக நடித்துள்ள சம்யுக்தாவும் ஸ்கோர் செய்கிறார் .பிளாக் பாண்டிதான் காமெடி என்ற பெயரில் ஏதாவது பேசிக் கொண்டே இருக்கிறார் வெட்டியாக !
தீக்குளிப்பு காட்சியை சிறப்பாக படமாக்கி இருக்கிறார்கள் .
பொதுவாகவே குருதேவின் ஒளிப்பதிவு மிக சிறப்பு .
பிரசன்னாவின் இசை ஒகே .
அண்ணன் தங்கை பாசம் , தங்கைக்கு தப்பானவனுடன் காதல் என்று பயணிக்கும் திரைக்கதை திடீர் என நாயகனுக்கு ஒரு நோய் இருக்கு என்று புதுசாக சொல்லும் இடத்தில் அலுப்படைய வைக்கிறது .
வெவ்வேறு கதைகளை உதிர்த்துப் போட்டு உருட்டி பிசைந்து கொடுப்பது போல இருக்கிறது .
ஒன்று சுலபமாக யூகிக்க முடிகிற காட்சிகள் வருகின்றன . அல்லது (கிளைமாக்ஸ் ஏரியாவில்) வித்தியாசம் என்ற பெயரில் வலிந்து திணிக்கிறார்கள் .
தெளிவு குறைவான திரைக்கதை நல்ல படமாக்கலை பின் தள்ளி விட்டது .
மொத்தத்தில் களரி… இன்னும் தேவை பயிற்று!