பேஸ்ஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், நட்டி நடராஜ், அபிராமி மற்றும் பலர் நடிப்பில் , இதற்கு முன்பு குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கும் படம் மகாராஜா .
2011 ஆம் ஆண்டு நாசர் அஞ்சலி நடிப்பில் இதே பெயரில் ஒரு படம் வந்தது இந்த இரண்டாவது மகாராஜா விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வருகிறது , ஜூன் பதினான்காம் தேதி திரைக்கு .
படத்தில் முடிதிருத்தும் நபராக வருகிறார் விஜய் சேதுபதி, தவறாக முடி திருத்தியவர் காதை வெட்டி விட அதற்காக பேண்டேஜ் போட்டவர் தோற்றத்தில் வரும் இவர் திரையிடப்பட்ட முன்னோட்டத்தில் லக்ஷ்மி எங்க லக்ஷ்மி எங்க என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார் .
யார் அந்த லக்ஷ்மி என்று கேட்டால், ” அது பொண்ணா, பொன்னா , வேறு பொருளா, ஒரு கருத்தா இல்லை உணர்வா என்பது சஸ்பென்ஸ். அதை வைத்துதான் படமே” என்கிறார் நித்திலன்
“2017 ஆம் ஆண்டு நான் இயக்கிய குரங்கு பொம்மை வந்தது . அதன் பிறகு வேறு சில படங்கள் செய்யும் சூழல் வந்தது . அவற்றுக்கு எழுதியும் முடித்தேன் . ஆனால் அவை தாமதம் ஆன நிலையில் இந்தப் படம் அமைந்தது . விஜய் சேதுபதி அண்ணா முழு ஒத்துழைப்புக் கொடுத்தார் .
படத்தில் மம்தா மோகன்தாசுக்கு மிக முக்கியமான கேரக்டர் . சிறப்பாக நடித்து இருக்கிறார் . ஒரு முக்கியமான கதாபாத்திரத்துக்கு அனுராக் காஷ்யப்பைக் கொண்டு வந்தோம். முழு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு படம் நன்றாக வர வேண்டும் என்று அக்கறையும் எடுத்துக் கொண்டார் .
இந்த ஷாட் எதுக்கு எடுக்கற? தேவை இல்லாத ஷாட் எல்லாம் எதுக்கு எடுக்கற? என்று உரிமையாக கடிந்து கொள்வார் .
எனது குரங்கு பொம்மை படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்த இயக்குனர் இமயம் பாரதி ராஜா இதிலும் ஒரு குறிப்படத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
காந்தாரா படத்துக்கு இசை அமைத்த அஜனீஷ் லோகநாத் இசை அமைக்கிறார் .”என்றார்.
கதாநாயகி மம்தா மோகன்தாஸ் பேசும்போது, “மலையாளத்தில் நானெல்லாம் ஒரு படத்தில் தொடர்ந்து 27 மணி நேரம் எல்லாம் வேலை செய்திருக்கிறேன் . ஆனால் தமிழில் அப்படி இருக்காது . ஒரு நாள் ஷூட்டிங்குக்கு வந்தால் ரெண்டு ஷாட் முடித்து விட்டு இன்னிக்கு உங்களுக்கு முடிஞ்சிருச்சி போங்க என்று சொல்வது எல்லாம் நடக்கிறது . அப்போது எல்லாம் எனக்கு கஷ்டமாக இருக்கும் . நாம் வேலை செய்யத்தானே வந்தோம். இப்படி நடக்கிறதே என்று தோன்றும் .
எனவேதான் மலையாள நடிகைகள் தமிழில் ஈசியாக அசத்தி விடுகிறார்கள் .
மகாராஜா எனக்கு மிக நல்ல அனுபவம். எனது கேரக்டர் பற்றி எதுவும் சொல்ல முடியாது . ஆனால் இந்தப் படத்தில் ஒரு தேடல் இருக்கும் அது உங்களை என்கேஜ் செய்யும் ” என்றார் .
