தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் சார்பில் நடிகை ஆன் ட்ரியா ஜெரிமியா தயாரித்து வில்லியாக நடிக்க, சொக்கலிங்கம் உடன் தயாரிக்க, கவின், ருஹானி ஷர்மா, சார்லி, ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் இயக்குனர் வெற்றி மாறனின் வழிகாட்டலில் விக்ரனன் அசோக் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஹேக்கிங் உள்ளிட்ட சகலவிதமான தில்லாலங்கடி வேலைகள், நானாவித பரிமள புஷ்ப அயோக்கியத்தனங்கள் மூலம் பலரின் ரகசியங்களைத் திருடி அவர்களை மிரட்டி, பணமும்… அவர்களிடம் யாருக்கு என்ன காரியம் ஆகவே ண்டுமோ, அவர்களுக்கும் அந்தக் காரியங்களை செய்து கொடுத்து அதன் மூலமும் பணம் சம்பாதித்து வாழ்கிற ஒரு நபர் (கவின்)
பார்க்கிற பெண்களுக்கு எல்லாம் ஆசைப்படும் ஜொள்ளு பார்ட்டியாக அவன் . நான் அயோக்கியன்தான்; ஆனால் எச்சை இல்லை” தன்னிலை விளக்கம் கொடுப்பவன்.
திருமணம் ஆகி மனைவி கோவித்துக் கொண்டு அப்பா வீட்டில் இருக்கும் நிலையில் மகளை மட்டுமே பார்க்க அவனுக்கு அனுமதி உண்டு. எனினும் மாமனார் (சார்லி) அவன் மீது கோபம் இல்லாமல் இருக்கிறார்.
ஜெயில் கைதியாக இருந்து, அங்கே வந்த ஓர் அரசியல்வாதியை கொலை ஆள் வைத்து, அப்போது அரசியல்வாதியை காப்பாற்றுவது போல நடித்து, அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமாகி அவன் மூலமே வெளியில் வந்து …
இளம்பெண்களை மயக்கி , காமத்துக்கு ஆசைப்படும் ஆட்களுக்கு அவர்களை அனுப்பி, அப்போது அவர்களை படம் பிடித்துக் கொண்டு வைத்துக் கொண்டு பெரிய பவர் புரோக்கராக மாறிய ஒருத்தி ( ஆண்ட்ரியா ஜெரிமியா) . இவளிடம் வன்முறை மற்றும் கொலைகள் சர்வசாதாரணம்.
புதிதாகக் கடசி ஆரம்பித்து இருக்கும் மேற்படி அரசியல்வாதி தன்னிடம் உள்ள பெரும் பணத்தை, ஓ ட்டுப் போடக் கொடுக்கும் லஞ்சப் பணமாக மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க, அவளது உதவியை நாடுகிறான்
தமிழகம் எங்கும் உள்ள தனது டிபார்ட்மென்ட் ஸ்டோர்களுக்கு அவற்றை அனுப்பி மளிகை ஜாமான்களோடு பணத்தை வைத்து மக்களுக்கு கொடுக்கும் திட்டத்தை கொடுக்கிறாள் அவள்.
ஜொள்ளு பார்ட்டி நபர், அடுத்தவன் மனைவி ஒருவனோடு பழகி அவளோடு தங்குவதற்காக அவள் புருஷன் இல்லாத நிலையில் அவள் வீட்டுக்குப் போகிறான். அப்போது ஆணுறை வாங்குவதற்காக ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் நுழைகிறான். அந்த ஸ்டோருக்குள் பவர் புரோக்கர் பெண் ஒரு குறிப்பிட்ட ஏரியாவுக்கு அனுப்பிய பணம் இருக்கிறது . அதைக் கொள்ளை அடிக்க, எம் ஆர் ராதா முகமூடி அணிந்த ஒரு குழு அங்கே இருக்கும் எல்லோரையும் துப்பாக்கி முனையில் மடக்கி வைத்துள்ளது. அதில் இவனும் சிக்குகிறான் .
பணத்தை அடித்துக் கொண்டு அவர்கள் போக, ஆணுறையோடு ஜொள்ளு பார்ட்டி அந்த அடுத்தவன் பொண்டாட்டி வீட்டுக்கு வர,அங்கே டிபார்ட்மென்ட் ஸ்டோரில் அடிக்கப்பட்ட பணம் இருக்க, சில அசம்பாவிதங்கள் நிகழ்கிறது .
பணத்தோடு வீட்டுக்கு வருகிறான் ஜொள்ளு பார்ட்டி .
பணம் கொள்ளை போன விஷயம் அரசியல்வாதிக்கும் பவர்புரோக்கருக்கும் சண்டையை ஏற்படுத்துகிறது.
வீட்டில் ஜொள்ளு பார்ட்டி வைத்த பணத்தை அவனது அப்பா எடுத்து கடன்காரனிடம் கொடுக்க , பணத்தில் ஒரு பகுதி ஜொள்ளு பார்ட்டியிடம் இருப்பது பவர் புரோக்கர் பெண்மணிக்கு தெரிய வருகிறது.
அப்புறம் என்ன நடந்தது? பணத்தை கொள்ளையடித்தது யார் ஏன்? என்பதே படம்.
ஆண்டிரியா படம் தயாரிக்க முடிவு செய்தபோது இயக்குனர் வெற்றிமாறன் வழிகாட்டியாக இருந்து கதையை ஓகே செய்து கரெக்ட் செய்து கொடுத்து அதன் பிறகு ஆன்ட்ரியா எடுத்த இந்தப் படத்தின் கதை இதுதான் .
படத்தின் ஆன்ட்ரியா ஜெரிமியாவின் நடிப்பு பிரமாதம் . ஜிவி பிரகாஷ்குமாரின் இசை சிறப்பு. ஆர் டி ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை . கவின் சர்வசாதாரணமாக நினைத்து நடிக்கிறார்.
ஆரம்பத்தில் எம் ஆர் ராதா மாஸ்க் அவரது சில வசனங்கள் எல்லாம் வந்த போது, ஆகா என்னமோ சொல்லி அசத்தப் போகிறார்கள். அதுவும் வெற்றி மாறன் வேறு இருக்கிறார் என்று ஆவலாக எதிர்பார்த்தால் ‘உன்னை யாரு எதிர்பார்க்கச் சொன்னது? இனிமே எதிர்பார்ப்பியா? எதிர்பார்ப்பியா?” என்று, அடிச்ச இடத்திலேயே மீண்டும் மீண்டும் அடிக்கிறார்கள்.
படத்தில் வரும் முக்கியக் கேரக்டர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் . கேவலமானவர்கள் . எனில் யாருக்காக இந்தப் படத்தை ஒரு ரசிகன் பார்க்க வேண்டும்.
முக்கியக் கேரக்டர்கள் அனைத்திலும் ஆபாசம் அல்லது அசிங்கம் .
இதை எதற்கு வெற்றிமாறன் ஓகே செய்ய வேண்டும்? ஆன்ட்ரியா கடன் வாங்கி (என்று அவர் சொன்னது உண்மை எனில்) இந்தப் படத்தை எடுக்க வேண்டும். டிவியில் குடும்பத்தோடு பார்க்க முடியாத படமாகவும் இருக்கிறது. இப்படி எல்லாம் படம் எடுத்ததால் அப்புறம் எப்படி தி ஷோ மஸ்ட் கோ ஆன் என்று சொல்லும் நிலையில் இருக்கும் ஆன்ட்ரியா ?
தவிர பெட்டி பெட்டியாய் மூட்டை மூட்டையாய் கட்டுக் கட்டாகப் பணம் என்ற கதையை தமிழ் சினிமா எடுத்து வாயில் போட்டு மென்று சலித்து துப்பி வாய் கொப்பளித்து துப்பி விட்டது .
அதை வைத்து இப்போது ஒரு கதையை எடுப்பது என்பது ஆபத்து.
சரி எடுத்ததுதான் எடுத்தார்கள் அதை சுவாரஸ்யமாக சொன்னார்களா? அதுவும் இல்லை.
கடைசியில் வரும் கொள்ளைக்கு காரணமான விஷயம் உண்மையில் நல்ல விஷயம். ஏழை பொது ஜனத்தின் அதிகாரம் என்ன என்பது வாக்குப்பதிவில் தெரியும் என்பார்கள் . அந்தக் காமன் மேன்களை யாரும் ஒரு பொருட்டாக நினைக்க மாட்டார்கள் என்பதை வைத்து படம் சொல்லும் விஷயம் கன்டென்ட் ஆக ஓகேதான் . ஆனால் அதை எடுத்த விதத்தில் எந்த ஈர்ப்பும் இல்லை.
வெற்றிமாறன் டைரக்ட் செய்கிற படங்கள் என்பது வேறு. அவை ஏதோ ஒரு வகையில் சிறப்பாக இருக்கிறது . ஆனால் அவர் தயாரிக்கும் படங்கள் எழுத்திலும் படைப்பிலும் பங்கேற்கும் மற்ற படங்கள் , அவர் மென்டர் ஆக வேலை செய்யும் படங்கள் ரசிகர்களை மென்டல் ஆக்காமல் விடுவதே இல்லை.
அது என்னவோ அப்படி ஒரு டிசைன் .
மாஸ்க் … டேமேஜ் பீஸ்