விஜய், சூர்யா, தேவயானி, விஜயலக்ஷ்மி, வடிவேலு, ரமேஷ் கண்ணா, ராதாரவி நடிப்பில் மலையாள இயக்குனர் சித்திக் இயக்கி 2001 பொங்கல் அன்று வெளிவந்த படம் ஃபிரண்ட்ஸ். ஜெயராம், முகேஷ், ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் இதே சித்திக் மலையாளத்தில் இயக்கி 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி மலையாளத்தில் வெளியான FRIENDS என்ற படத்தின் ரீமேக் இது.
தமிழுக்கு என திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்தின் அடிப்படையில் இந்தப் படம் ஸ்நேகமன்ட் டே இதரே (நட்புன்னா இதுதான்) என்ற பெயரில் தெலுங்கில் நாகார்ஜுனா, சுமந்த், பூமிகா , பிரதியுஷா நடிப்பில் வெளி வந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பழைய லவ் டுடே படத்தை இயக்கிய பாலசேகரன் இந்தத் தெலுங்குப் படத்தை இயக்கினார்.
வேறு எந்த மொழியிலும் இந்த அளவுக்கு இல்லை என்னும் அளவுக்கு அசத்தியவர் வடிவேலு. அவரது காமெடி பட்டையைக் கிளப்பியது. வடிவேலு படத்தில் நடிக்கும்போது அவரே ஸ்பாட்டில் யோசித்துச் சொன்ன ஆணியே புடுங்க வேணாம் என்ற வசனத்தை ஒரு முறையாவது சொல்லாத ஆட்கள் இருக்க வாய்ப்பில்லை. உண்மையில் இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் கூட அதை எப்போதாவது சொல்லி இருப்பார்கள்.
இப்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கும் இன்று பார்க்க எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
சிறுவயதில் தன் தங்கையைக் காப்பாற்றியதால் உயிர் நண்பனின் (சூர்யா)தம்பி மரணம் அடையக் காரணம் ஆன குற்ற உணர்ச்சியில் அந்த நண்பனை உலகில் எல்லோரையும் விட முக்கியமாக நினைக்கும் ஒருவன் (விஜய்) . தம்பியின் மரணம் தெரிய வந்த பிறகு நடந்தது என்ன என்ற அளவோடு படத்தின் கதையை நிறுத்திக் கொள்ளலாம்.
படம் உருவானது குறித்து சில தகவல்களை பார்த்து விட்டு விமர்சனத்துக்குப் போவோம். 1997 ஆம் ஆண்டு வந்த நேருக்கு நேர் படத்துக்கு அப்புறம் விஜய்யும் சூர்யாவும் சேர்ந்து நடித்த படம் இது.
தேவயானி கதாபாத்திரத்துக்கு முதலில் கேட்கப்பட்டவர் மீனா. ஏனெனில் மலையாளத்தில் அவர்தான் ஹீரோயின். அவரது தேதிகள் சரி வராததால் அப்புறம் ஜோதிகா வந்தார். அது சூர்யா ஜோதிகா இருவரும் பழக ஆரம்பித்திருந்த நேரம். ஆனால் அவராலும் தேதிகள் தர முடியாததால் விலகிக் கொள்ள சூர்யாவுக்கு ரொம்ப வருத்தம். இந்தப் படத்தில் நடித்த ரமேஷ் கண்ணா வேறு சில படங்களில் வேலை செய்த காரணத்தால் அவரைப் பார்க்கும்போது எல்லாம் தன்னைப் பற்றி ஜோதிகா எதுவும் சொன்னாரா என்று ஆர்வமாகக் கேட்பாராம் சூர்யா.
ஜோதிகா விஜய் ஜோடியாகவும் சுவலட்சுமி சூர்யா ஜோடியாகவும் நடிக்க இருந்த நிலையில், சூர்யா இருக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிப்பதை விரும்பாத ஜோதிகா படத்தில் இருந்து விலகினார் என்றும் சொல்கிறார்கள்.
பிறகு ஜோதிகாவுக்குப் பதில் தேவயானியும் சுவலட்சுமிக்குப் பதில் விஜயலட்சுமியும் (எஸ்… அதே விஜயலக்ஷ்மி தான்.) வந்தார்கள். சென்னை, ஊட்டி, பழனி, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது.
தேவயானி பங்களா ,வடிவேலு சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்ட சென்னை குஷால்தாஸ் பங்களா இப்போது உயிரோடு இல்லை.
அதற்கு முன் தான் நடித்த சில படங்கள் ஓடாத நிலையில் இந்தப் படம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தி இருக்கிறது என்று சூர்யா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
அஜித் நடித்த தீனா படத்துடன் வெளியான பிரண்ட்ஸ் படம் அப்போது பல திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது. ஃபிரண்ட்ஸ் படம் மட்டுமல்ல,
இப்போது மறு வெளியீட்டில் வந்திருக்கும் பிரண்ட்ஸ் எப்படி இருக்கிறது.?
படத்தின் டைட்டில்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன.
பழைய விஜய்யையும் சூர்யாவையும் பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். எனினும் முதல் பாதியில் முதலில் அதையே பழைய உற்சாகம் இளையராஜாவின் இசையில் வரும் மஞ்சள் பூசும் வானம் தொட்டுப் பார்த்தேன் என்ற பாடல் வரும்போதுதான் வருகிறது .
இரண்டாவதாக வரும் குயிலுக்கு கூ கூ பாடல் இப்போது தேவையில்லாத ஒன்றாகவே இருக்கிறது . தூக்கி இருக்கலாம்.
இளையராஜா இசைக்கு அடுத்து இப்போதும் அன்று போல இன்றும் சிரிக்க வைப்பது வடிவேலுவின் காமடிதான். வசன காமெடிகளில் ஒரு சில இடங்கள் தவிர மற்ற இடங்கள் இன்னும் புதுசு போலவே சிரிக்க வைக்கின்றன. வசனம் அல்லாத ஆக்ஷன் மற்றும் முகபாவனை, மாற்றி யோசி பாணியில் வரும் காமெடிகள் இன்னும் அன்று பார்த்தது போலவே இருக்கிறது (உதாரணம் ”நீங்க ஓகே ன்னு சொன்னா கயித்தை விட்டுடணும் ஓகே?” என்று சார்லி கேட்க , வடிவேலு ஓகே என்று அதற்கு பதில் சொன்னவுடன் கயிற்றை விட்டுவிடுவதும் அதனால் நடக்கும் விபத்தும்)
அனேகமாக இந்தப் படத்தில் போல வேறு எந்தப் படத்திலும் தேவயானி நவநாகரீக உடை, ஸ்லிம் ஆன உடல் மற்றும் அசத்தலான டான்ஸ் என்று வேறு எந்தப் படத்திலும் ஆடியது போலத் தெரியவில்லை.
இந்தப் படம் வந்தபோது விஜயலக்ஷ்மி தமிழில் பெரிய கதாநாயகியாக வருவார் -அதாவது திரிஷா , நயன்தாரா போல – என்று எதிர்பார்க்கப்பட்டார் . பாவம் கடைசியில் அவரால் அரசியலில்தான் ரவுண்டு வர முடிந்தது.
காமெடியைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் முதல் பாதியில் பெரிதாக ஈர்ப்பாக இப்போது தெரியவில்லை. ஆனால் இரண்டாம் பகுதியின் செண்டிமெண்ட் காட்சிகள் இப்போதும் கனமாகவே இருக்கின்றன.
முக்கியமாக உறுத்தும் விஷயம் என்ன என்றால், அவ்வளவு பெரிய வீட்டில் அவ்வளவு ஆட்கள் இருக்கும் சூழலில் தேவயானி கதாபாத்திரத்த்தின் தங்கையாக வரும் அபிநயஸ்ரீ ( அனுராதாவின் மகள்) கதாபாத்திரமும் , விஜயலக்ஷ்மி கதாபாத்திரத்தின் முறை மாமனாக வரும் ஸ்ரீமன் கதாபாத்திரமும், அவ்வளவு வேலைகள் செய்ய முடிகிறது என்பது இன்றைய நோக்கில் சற்றும் லாஜிக் இல்லாத செயற்கை நாடகமாக இருப்பதால் ரசிக்க முடிவது இல்லை. அதேபோல தன்னை உயிராக நினைக்கும் நண்பன் , தன்னை சமாதானப்படுத்த வந்த நண்பன், தனது கோபத்தால் மலை உச்சியில் இருந்து அதல பாதாளத்தில் விழா , அது பற்றி வீட்டில் சொல்லாமல் சூர்யா கதாபாத்திரம் அப்படியே கிளம்பி ராணுவத்துக்கு ஓடிப் போவதும், அதுவரை சூர்யா கதாபாத்திரம் நேர்மையாக இருந்தது என்பதற்கு எதிராக மாறி விடுகிறது. அப்படி செய்தபோது தான் விஜய கதாபாத்திரம் முன்பு இதே சூழலில்தான் தவறு செய்தது என்பதை புரிந்து கொள்வதாக சொல்லி இருந்தால் கூடப் பரவாயில்லை. அதுவும் இல்லை.
பக்கா சினிமாத்தனமான அந்தக் கிளைமாக்ஸ் சண்டையும் (அதுவரை ஸ்ரீமனை அடித்து வெளுத்த சூர்யா மிலிட்டரி எல்லாம் போய் வந்த நிலையில் ஏன் ஸ்ரீமனிடம் அவ்வளவு அடி வாங்க வேண்டும்) போர் அடிக்கிறது .
இது போன்ற காரணங்களால் பிரண்ட்ஸ், விஜய் படமாக இருந்தாலும் இன்றைய ரசிகர்களை பெரிதாக கவர வாய்ப்பு இல்லை.
ஃபிரண்ட்ஸ் (FRIENDS) 2025….. காலாவதி