மேற்குத் தொடர்ச்சி மலை @ விமர்சனம்

விஜய் சேதுபதி புரடக்சன்ஸ் சார்பில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் , ட்ரீம் ட்ரீ புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஆண்டனி, காயத்ரி கிருஷ்ணா,

ஆறு பாலா, அபு வலயங்குளம் ஆகியோர் நடிப்பில் நம்பிக்கைக்குரிய இளம் இயக்குனர் லெனின் பாரதி இயக்கி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை . 

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள தேவாரம் கிராமத்தில் தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் ரங்கசாமிக்கு  (ஆண்டனி), 
 
மலை மீது ஏறி இறங்கும்படி வாய்த்த வேலை . 
 
மலை மீது உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான — ஆனால் மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது, 
 
அநியாமாக கேரளாவோடு இணைக்கப்பட்ட கிராமங்களில் வாழும் மக்களுக்கு தேவையான பொருட்களையும் தகவல்களையும் கொண்டு செல்வது … 
 
ஏலக்காய் உள்ளிட்ட மலைத் திரவிய விளை பொருட்களை கீழே சுமந்து வருவது  இதுவே தொழில் 
 
இப்படியாக மலை மழை, யானை முதலிய விலங்குகள் , சரிவுகள், பாறை வழிப் பயணம் … ஆக சுமப்பதே வாழ்க்கை என்றான உழைக்கும் மக்களின் கூட்டத்தில் அவனும் ஒருவன்.  
 
உழைத்து சம்பாதித்த காசை சேர்த்து வைத்து அடிவாரத்தில் ஒரு நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என்பது அவனுக்கும் அவன் அம்மாவுக்குமான கனவு 
 
அதற்காக ‘பத்திரம் முடிக்க’ ஏங்குகிற வாழ்க்கை அவர்களது வாழ்க்கை . 
 
அதே மலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் சொந்தக்காரப் பொண்ணு ஈஸ்வரிக்கும் அவனுக்கும் திருமணம் குழந்தை என்று வாழ்க்கை இதனிடையே நகர்கிறது . 
(ஆங்கிலேயர் ஆண்ட காலங்களில் தமிழ் சுதந்திரப்போராட்ட வீரர்களை வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்து அழித்து அதற்குப் பரிசாக அந்த) , 
 
தமிழர்களின் நிலங்களை உரிமையாக்கிக் கொண்ட மலையாளிகளின் அடுத்த தலைமுறை இன்றும் தமிழர்கள் மீதான துவேஷத்தொடும் ,
 
அதே நேரம் தொழிலாளர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது . தொழிலாளிகள் பெரும்பாலும் தமிழர்கள் என்பதும் இந்த கூலி ஏய்ப்புக்கு முக்கியக் காரணம் . 
 
மொழி மறந்து கம்யூனிஸ்டுகளில் ஒரு சில மலையாளிகள் தொழிலாளிகளுக்காக குரல் கொடுத்தாலும் ,
 
கட்சியில் முக்கியப் பதவியில் இருக்கும் மலையாளிகள் மலையாள முதலாளிகளுடன் சேர்ந்து கொண்டு ,
தமிழ்நாட்டுத் தொழிலாளிகளின் உழைப்பு திருடப் படுவதற்கு காரணமாகவே இருக்கிறார்கள். 
 
இதற்கிடையில் மலைப்பாதையில் கடை வைத்து வாழும் ஒரு பாட்டி , அப்பா அம்மா இல்லாத தன் பேத்தியின் கல்யாணத்துக்காக, 
 
தனக்கு சொந்தமான நிலத்தை விற்க முயல்கிறார் . அதை முடிந்தவரை கம்மியான விலைக்கு ரங்கசாமிக்கே கொடுக்க முன் வருகிறார் . 
 
அந்த பாட்டி , தமிழ் நாட்டு ஏலக்காய் வியாபாரி , வட்டிக்குக் கடன் கொடுக்கும் இஸ்லாமியத் தமிழர் ,
 
இவர்களின் உதவியால்  கடைக்காரப்ப் பாட்டியின் இடத்தை வாங்குகிறான் ரங்கசாமி . 
 
இந்த நிலையில் தொழிலாளி விரோத முதலாளி  (ஆறுபாலா), துணை போகும் கம்யூனிஸ்ட்டு பிரமுகர்,
இருவரும் திட்டமிட்டு  தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை பிடுங்கி அகதி ஆக்குகின்றனர் . 
 
கொந்தளிக்கும் கம்யூனிஸ்டு உறுப்பினர் சாக்கோவோடு (அபு வலயங்குளம்) சேர்ந்து ரங்கசாமி,
 
மற்றும் சிலர்  அந்த முதலாளியையும் கம்யூனிஸ்டு பிரமுகரையும் கொன்று விடுகின்றனர் 
 
ரங்கசாமி  ஜெயிலுக்குப் போய் விட்ட நிலையில் ஈஸ்வரி உரக்கடை நடத்தும் நபரிடம் நிறைய உரங்களையும் மருந்துகளையும் கடனுக்கு வாங்கி விவசாயம் நடத்துகிறாள் . 
 
ஐந்து வருடம் கழித்து ஜெயிலில் இருந்து விடுதலை ஆகும் ரங்கசாமி  இழந்தது என்ன ? பெற்றது என்ன ? என்பதே இந்த மேற்குத் தொடர்ச்சி மலை . 
தமிழ் சினிமாவின் கம்பீரத்தையும் பெருமையையும் கவுரவத்தையும் கர்வத்தையும் இன்னும்  சில அடிகள் உயர்த்தி வைக்கும்,
 
பொக்கிஷமாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது இந்த மேற்குத் தொடர்ச்சி மலை படம் . 
 
மலைத் திரவியங்களை பற்றிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த கலைத் திரவியமாக ஜொலிக்கிறார் இயக்குனர் லெனின் பாரதி .
 
அதிகாலை நான்கு மணிக்கு ஒரு சிறிய ஒட்டு வீட்டின் மழைத் தாரைத்  தாழ்வாரத்தில் துவங்கி 
 
மெல்ல மெல்ல அகன்று பரந்து ….. விடியும் பொழுதில் மேற்குத் தொடர்ச்சி மலையை  கேமராக் கண்களை அகன்ன்ன்னன்ன்ன்றுவிரித்து சுருட்டி அடக்கும் போதே,
 
மனசுக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது  படம். கல்யாணப் பத்திரிகை கொடுக்க வரும் மனிதர் மூலமாக  மலைப் பாதையில் ஏறுவதன் சிரமத்தை, ஆபத்தை,   
 
வேறுவழியின்றி வரவழைத்துக் கொள்ளும் துணிச்சலை , மனோதத்துவ சிகிச்சையாக அமைத்துக் கொள்ளும் சம்பிரதாயங்களை ,
 
உணர்வின் ஒன்றலால் அது உண்மையாகவே மாறிப் போகும் உணர்வுப் பூர்வத்தை  சொல்லும், 
 
அபாரமான உத்தி காரணமாக சட்டென்று ரசிகனின் தோளில் கை போட்டு தோழன் ஆகிறது திரைக்கதை. 
 
மூட்டை தூக்குவதே வாழ்க்கை எனக் கொண்டு காலமெல்லாம் மூட்டை தூக்கவே மூச்சை சுமந்து, 
 
அதில் கம்பீரமும் , கர்வமும் கொண்டு , மூப்பு மற்றும்  உடம்பு முடியாத நிலையில் சுமையைப் பகிர பிறர் உதவிக்கு வருவதைக்  கூட , அவமானமாகக் கருதும் பெரியவர் …
மலை ஏறும்போது  யானைத் தாக்கி இறந்த நிலையில் சித்தம் கலங்கி அந்த மலைப் பகுதி எங்கும்
 
” நான் எல்லா யானையையும் கொல்லப் போறேன் … ” என்று பேசிக் கொண்டே இருக்கும் பாட்டி பாண்டியம்மா…
 
அவரை மட்டும் எந்த யானையும் தாக்காத நிலையில் .. அவருக்கு ஏற்படும் முடிவு…. 
 
பேத்தியின் கல்யாணத்துக்கு  என்று வைத்திருக்கும் நிலத்தைக் கூட , கம்மி விலை என்றாலும், 
 
நல்லவனுக்குதான் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் மலைப்பாதை கடைக்காரப் பாட்டி …. 
 
வேலை நேரத்தில் கண்டிப்பாக இருந்தாலும், மூணு ஏலக்காய் முந்நூறு மல்லிகைப் பூ என்று யார் சொன்னாலும் ,
பூகம்பத்தில் சிக்கிய மொட்டைப் பாறை ஒத்தை மரமாய் குதித்தாலும் .. சக மனிதர்களை நேசிக்கும் குழந்தை மனசு கொண்ட கண்காணி (அந்தோணி வாத்தியார்)
 
ஒரு காலத்தில் தன் நிலத்தில் உழைத்து உழைத்து ஓடாய்ப் போனவனின் பிள்ளை என்பதற்காக ,
 
ரங்கசாமி வாங்க வேண்டிய நிலத்துக்கு தேவைப்படும் பணத்தை அவனுக்கு தெரியாமல் ஒரு பூ மலரும் போது எழுகின்ற சத்தத்தைப் போல , 
 
நேரடியாக பாட்டிக்கே கொடுத்துவிடும் இஸ்லாமியப் பெரியவர்…. 
 
ஆனாலும் அவர் கொடுத்த பணத்தை கடனாக நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக அடைக்கும் ரங்கசாமி …. 
 
நிலம் வாங்கப் போன வீட்டில் ஒரு உறவுக் காரப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு, விற்பவரிடம் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்து,
அந்த நிலத்தை வாங்க வேண்டாம் என்று முடிவெடுக்கும் ரங்கசாமியின் அம்மா … 
 
கடைக்கு பால் கொண்டு வருபவனிடம் “பாலை வச்சிட்டு கல்லாவுல காசு எடுத்துட்டுப் போ ” என்று சொல்லும் கடைக்காரப் பெரியவர் , 
 
தமிழன் என்றாலே வெறுக்கும் மலையாள இனத்தில் பிறந்தாலும்  தொழிலாளிகளின் நன்மைக்காக என்ற, 
 
கொள்கை அடிப்படையில் அவர்களுக்காக போராடும்  நிஜ காம்ரேட் சாக்கோ, 
 
அட , முக்கியக் கதாபாத்திரங்களை விடுங்கள் ….
 
காலமெலாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தைக் கூட எந்த உத்திரவாதமும் இன்றி வார்த்தையையும் முகத்தையும் நம்பி கொடுத்து விட்டுப் போகும் எளிய மக்கள் … 
 
நாளைக்கு தர வேண்டிய பணத்தை இன்றே கொடுக்கப் போகிறவனிடம் , “இப்ப என்ன அவசரம் …
இத கொடுக்கவா இவ்வளவு தூரம் வந்த ? அப்புறமா வேற வேலையா வரும்போது கொடுக்க வேண்டியதுதானே ?” என்று கேட்கும் அற்புத ஆளுமைகள் … 
 
இப்படி மனித வாழ்வின் மகத்துவத்தை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு கைபிடித்துக் கனிவோடு அழைத்துச் செல்லும், 
 
மன மாண்புகள் கொண்ட பல நிஜ நாயக நாயகிகள் படம் முழுக்க கொட்டிக் கிடக்கிறார்கள் 
 
இதை எல்லாம் வெளிப்படுத்தாமல் ஒரு சினிமாவுக்கு வேறு என்ன புல் பிடுங்குகிற வேலை இருக்க முடியும் ?
 
சித்தப் பிரம்மை கிழவிக்கு ஏற்படும் முடிவை வளையல் அணிந்த ஒற்றைக் கை மூலம் சொல்லும் லெனினின் இயக்க உத்தி  தரமான சிம்பாலிக் டைரக்ஷன் என்றால்… 
“எல்லாம் போச்சு .. இன்னொரு தடவை என்னை யாரவது மூணு ஏலக்காய் முன்னூறு மல்லிப் பூன்னு  சொல்லுங்கடா என்று கண்காணி கதறுவது அழுத்தமான் சோகக் கவிதை. 
 
மொழி இனம் நிலம் மதம் கடந்து எளிய மனிதர்கள்  எப்போதுமே நேர்மையின் பெருந்தன்மையின் விட்டுக் கொடுத்தலின் மலைச் சிகரத்தில் இருக்கிறார்கள் ;
 
ஆனால் வசதி படைத்தவர்கள் ரத்தம் குடிக்கும் மிருகங்களாய் இருக்கிறார்கள் என்பதையும் .. 
 
பலவீனமானவர்கள் என்று சொல்லப் படும்  பெண்கள் பிரச்னைகள் வரும்போது ஆண்களை விட, 
 
பலமாக இருக்கிறார்கள்  என்பதையும் சொல்வதற்காகவே இந்தப் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடலாம் 
ஒரே நேரத்தில் பலரும் பேசுவது எப்படி இயல்பில் வழக்கமோ அதே போல படத்தில் பேசுகிறார்கள் .
 
(இதை சரியாக கொண்டு வர , பின்னணிக் குரல் பதிவில் ராட்சஷ உழைப்பு உழைத்திருக்கிறார்கள்)  
 
 நாம் பார்ப்பது படம் அல்ல .. நடக்கும் சம்பவங்களை பக்கத்தில் நின்று பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தம் படமாக்கலைக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் லெனின் 
 
இந்தப் படத்தில் தேனி ஈஸ்வர் செய்திருக்கும் ஒளிப்பதிவு திரைப் படக் கல்வி நிலையங்களில் பாடமாக வைக்கப் படவேண்டும் .
 
பிரேமிங், வண்ணக் குழைவு, இருள் ஒளிப் பயன்பாடு , காட்சிகளுக்கான உணர்வுக் கூட்டல் என்று சகல வகையிலும் ஜொலிக்கும்அழகு . அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவு .
ஒரு சின்ன இடத்தில் ஆரம்பித்து ஒரு நிலையில் மிகப் பெரிய நிலப் பரப்பைக் காட்டுவதை ஒரு உத்தியாகவே, 
 
இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கும்  விதம் இயக்குனர் – ஒளிப்பதிவாளர் ரசவாதத்தின் சிறப்பு .
 
கடைசி காட்சியில் அதே உத்தியில் படம் படம் முடியும்போது நெஞ்சில் ஏற்படும் கனம் சொல்லி முடியாதது . 
 
காலம் கோலம் எது மாறினாலும் இளையராஜா இளையராஜாதான் என்று நிரூபிக்க வந்திருக்கும்  இன்னொரு படம் இது.
 
மவுனத்தின் மொழியை பல இடங்களில் அழகாக வெளிப்படுத்தும் அதே நேரம் , சரியான இடங்களில் ஒற்றை இழை இசை ஒலிகளால் உயிருக்குள் ஊடறுத்துப் பாய்கிறார் இசைஞானி . 
நிலம் வாங்கும் கனவை நிறைவேற்ற , ரங்கசாமி வாங்கி வரும் ஏலக்காய் மூட்டை மலை உச்சிப் பாறையில் கவிழ்ந்து விழுந்து சரிந்து சறுக்கி ,
 
திறந்து ஏலக்காய்கள் கொட்டி , சிதறி, அதள பாதாளத்தில் பாய்ந்து,  தவழ்ந்து , கவிழ்ந்து , விரிந்து மோதி சிதறும் காட்சியில், 
 
இயக்குனர் ஒளிப்பதிவாளர் இசை அமைப்பாளர் , படத் தொகுப்பாளர் நால்வரும் இதயத் துடிப்பை சில நொடிகள் நிறுத்தி அப்புறம் இயக்குகிறார்கள். 
 
சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட முக்கியத்துவம் கொண்ட ஒரு திரைக்கதையில் ஒரு படத் தொகுப்பாளரின் பங்கு உயிர்க்காற்று போல .
 
அதை  தூய காற்றாக கொடுத்து சிறப்பித்து இருக்கிறார் படத் தொகுப்பாளர் காசி விசுவநாதன் . இயற்கை ஒலிகளை பயன்படுத்திய விதம் சிறப்பு . 
படத்தில் நடித்த பலரும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் . எனவே அவர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள் என்று சொல்ல 
 
 முடியாது . அவர்கள் வாழ்வே அது போன்றது என்பதால் அப்படியே இருந்து இருக்கிறார்கள் . அது படத்த்துக்கு அவ்வளவு சிறப்பைக் கூட்டி இருக்கிறது 
 
அவர்களுக்கு இணையாக முயன்று இருக்கிறார்கள் அன்டனி , காயத்ரி கிருஷ்ணா .
 
(காயத்ரியின் குரல் நடிப்பில்தான் கொஞ்சம் சிக்கல் . பேச்சுத் ிதொனி் ிஅன்னியமாக இருக்கிறது )
 
இதற்கு அழகான முரணாக தமிழ்த் துவேஷ மலையாள எஸ்டேட் முதலாளியாக அச்சு அசலாகப் பொருந்தி அசத்தி இருக்கிறார் நம்ம  ஊர் ஆறு பாலா . சபாஷ் . 
ரங்கசாமி ரொம்ப அப்பாவியாக பெருந்தன்மையாகவே இருக்கட்டும் . ஆனால் அஞ்சு வருசம் உரம் பூச்சி மருந்து வாங்கிய காசுக்கு, 
 
நிலத்தின் மொத்த மதிப்புமா சரியாகப் போய்விடும் .என்ன கணக்கு என்று கேட்காத அளவுக்கு முட்டாளா அவன் ?
 
எனினும் சிறு சிறு தேனிக்கள் சேர்ந்து ஒரு மனிதாபிமான மரத்தில் கட்டி வைத்த தேன் கூட்டின் மொத்தத் தேனையும் ஒரு தந்திர நரி அநியாயமாக குடித்துவிட்டுப் போவது போல,  ,
 
எளிய பல உயர்ந்த மனிதர்கள் சேர்ந்து ஒரு  நிறைவேற்றிக் கொடுத்த ஒரு சிறு குடும்பத்தின் லட்சியக் கனவு கார்பரேட் மிருகத்தனத்தின் கோரப் பற்களால் கிழிந்து தொங்கும் விதம் நம் முகத்தில்  பளார்  என்று அறைகிறது 
கடைசியில் திரைக்குள் சுழலும் ஒவ்வொரு காற்றாடிக் கரத்தின் கூர் முனையும் நம் இதயத்தை கிழித்துப் போடுகிறது . 
 
மீள முடியா பாதிப்பில் அரங்கை விட்டு எழ நேரம் ஆகிறது . 
 
சினிமா பார்க்கும் வழக்கம் உள்ள எல்லோரும் பார்க்க வேண்டிய படம் . இதுவரை ஒரு சினிமா கூட பார்க்கவில்லை என்பவர்கள் கூட பார்க்க வேண்டிய படம் 
 
மேற்குத் தொடர்ச்சி மலை ….  கருத்தும் கலையும் கலந்து கட்டி எழுப்பிய இமய மலை 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
——————————————-
 லெனின் பாரதி, இளையராஜா, தேனி ஈஸ்வர், தயாரிப்பாளர் (நடிகர்) விஜய் சேதுபதி , காசி விஸ்வநாதன்,
 
ஆண்டனி, ஆறுபாலா, அந்தோணி வாத்தியார், பாண்டியம்மா , மற்றும் இந்தப் படத்தைப் பார்க்கும் ரசிகர்கள் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *