எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம் @ விமர்சனம்

டைம் லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்க , சத்யராஜ், வரலக்ஷ்மி , கிஷோர், விவேக் ராஜகோபால், யோகி பாபு நடிப்பில் , 

சர்ஜுன் கே எம் இயக்கி இருக்கும் படம் எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம். படம் பார்க்கப் போகும் ரசிகர்களுக்கு எச்சரிக்கை உண்டா ? இல்லை உற்சாக அழைப்பா? பேசலாம் . 
 
குடிக்கக் காசு தராத மனைவியைக் கொன்ற கணவனை குத்திக் கொல்கிறான் மனைவியின் தம்பியான இருபது வயது டேவிட்.  அதனால் தாய் தந்தையை இழக்கிறான் சிறுவனான தாமஸ் . 
 
டேவிட் ஜெயிலுக்குப் போக , வளர்ந்து பைக் திருடன் ஆகிறான் தாமஸ் ( விவேக் ராஜ கோபால்) . ஜெயிலில் இருந்து டேவிட் (கிஷோர்) வர , தாமசின் நண்பன் பிரான்சிஸ் டிசௌசாவின்  (யோகிபாபு) வீட்டில் தாங்கும் இருவரும் ,  பணக்கார இளம்பெண் யாரையாவது கடத்தி பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள் . 
 
பெரிய கோடீஸ்வரர் ஒருவரின் மகளான ஸ்வேதாவை (வரலக்ஷ்மி) கடத்துகிறார்கள் . எட்டு கோடி ரூபாய் பணம் கொடுத்தால் ஸ்வேதா உயிரோடு மீள்வாள் என்ற நிபந்தனையோடு !
 
பணம் கிடைத்ததும் ஆளுக்கு நாலு கோடியாக பிரித்துக் கொள்ள டேவிட்டும் தாமசும் திட்டமிடுகிறார்கள் 
 
மகள் கடத்தப்பட்டது அறிந்து  அறிந்து பதறும் கோடீஸ்வரர்  , ரிட்டையர்டு ஐ ஜி நடராஜ் என்பவரை (சத்யராஜ்) சந்தித்து , விஷயம் வெளியே கசியாமல் மகளை மீட்டுத் தரச் சொல்கிறார் . 
தாமதமாக திருமணம் செய்து கொண்டு மனைவியையும் இழந்த நட்ராஜுக்கு , இருதயத்தில் ஓட்டை விழுந்து நோயாளியாக அவதியுறும் ஒரு  மகள் இருக்கிறாள்.
 
சிறுமியான மகளுக்கு எப்போது வேண்டுமானாலும் ஜனனி வரலாம் என்ற நிலையில் நடராஜ் மகள் கூடவே இருக்க வேண்டி உள்ளது .
 
எனவே போலீஸ் துறையின் பல்வேறு பிரிவு அதிகாரிகள், மற்றும் தொழில் நுட்பக் கருவிகளின் உதவியோடு, 
 
தனது வீட்டையே அலுவலகமாக்கி எல்லோரையும் அங்கு வர வைத்து,  வீட்டில் இருந்தபடியே கடத்தல்காரர்களுக்கு வலை விரிக்கிறார்  நட்ராஜ்.
 
இந்த நிலையில் கடத்தப்பட்ட ஸ்வேதாவும் கடத்தியவர்களில் ஒருவனான தாமசும் காதல் ஜோடி என்பது  ரசிகனுக்கு சொல்லப்படுகிறது.
இந்த காதலுக்கு ஸ்வேதாவின் தந்தை ஒத்துக் கொள்ள மாட்டார் என்ற நிலையில் பணம் கிடைத்ததும் எட்டு கோடியையும் சுருட்டிக் கொண்டு ஓட திட்டமிடுகிறது காதல் ஜோடி . 
 
தாமஸ் மீது சந்தேகம் வந்தாலும் அந்த சந்தேகத்துக்கும் தாமஸ் சொல்லும் சமாதானங்களுக்கும் இடையில் அல்லாடுகிறான் டேவிட் . 
 
அதே நேரம் கோடீஸ்வரர் போலீசுக்கு போய் விட்டது இருவருக்கும் தெரிய வருகிறது. டேவிட் கொடுத்த மிரட்டல் காரணமாக ,
 
போலீசை விலகச் சொல்லும் கோடீஸ்வரர் , பணத்தைக் கொடுத்து மகளை மீட்க முடிவு செய்கிறார் . 
 
இன்னொரு பக்கம் நட்ராஜின் மகளுக்கு நோய் உபாதை அதிகமாகிறது.  பெரும்பணம் கொடுத்து சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் . நட்ராஜிடமோ அவ்வளவு பணம் இல்லாத நிலைமை . 
மேற் சொன்ன எல்லா கதாபாத்திரங்களும் தங்களது அடுத்தடுத்த நடவடிக்கையில் இறங்கும்போது நடந்தது என்ன என்பதே இந்த எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம். 
 
ஒரு ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி தனது வீட்டையே அலுவலகம் ஆக்கி குற்றவாளிகளை பிடிக்க முயல்கிறார் என்பது (தமிழுக்கு?) ஃபிரஷ் ஆன ஐடியா . 
 
அனேகமாக இந்தப் படம் உருவாக காரணமான விசயமாகவும் இதுவே இருக்கக் கூடும் . இதில்…… 
 
சூழல் காரணமாக குற்றப் பின்னணி கொண்ட இளைஞர்கள், பழகும் குற்றம், காதல் , பாசம்  மோதல், செண்டிமெண்ட் என்று, 
 
பல்வேறு விசயங்களையும் சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் சர்ஜுன் கே எம் .
மிக முக்கியமாக,  மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் சர்ஜுன் கே எம் . (லக்ஷ்மி , மா போன்ற விவகாரமான விஷயம் கொண்ட குறும் படங்களையே, 
 
பல ரசிகர்கள்  ஏற்றுக் கொள்ளும்அளவுக்கு தனது மேக்கிங் மூலம் அசத்திய  சர்ஜுன் கே எம் முக்கு இதெல்லாம் என்ன பெரிய விஷயம் )
 
சிறுசிறு  காட்சிகளிலும் விவரிப்பில் காட்டும் சிரத்தையும் நுணுக்கமும் அபாரம் . உதாரணமாக காரில் ஏறி இறங்கி ஏறி இறங்கி அதற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு ,
 
அதன் மூலம் ஸ்வேதாவை கடத்தியது ஒருவர் அல்ல ; ரெண்டு பேர் என்று நடராஜ்  கண்டு பிடிக்கும் விதம் . (வேறு எந்தப் படத்திலாவது முன் கூட்டியே வராததாய் இருக்கக் கடவது !) 
 
அதே போல ஒவ்வொரு கேரக்டரையும் டிசைன் செய்த விதம்,  நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய நேர்த்தி எல்லாமும் அருமை . சபாஷ் சர்ஜுன் கே எம். 
சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவானது  கடத்தி வைக்கும் பாழடைந்த சர்ச், நடராஜ் வீடு , பொட்டல் மேடு என்று ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மை கொடுத்து படத்துக்குப் பலன் சேர்க்கிறது . 
 
சுந்தர மூர்த்தியின்  இசை ஒகே . 
 
சத்யராஜ், கிஷோர, வரலக்ஷ்மி , ஆகியோர் மட்டுமல்லாது எல்லோருமே இயல்பான நடிப்பை அளவோடு வழங்கி  உள்ளனர் . சிறப்பு . 
 
யோகிபாபுவுக்கு வேலை கம்மி. எனினும் கிடைத்த சந்தர்ப்பங்களில் சிரிக்க வைக்கிறார் அவர் . 
 
கடத்தியவர்களில் ஒருவநனும் கடத்தப்பட்டவளும் காதல் ஜோடி என்று தெரிந்த உடன் , படம்  பார்க்கும் நமக்கு பதட்டம்  பாதியாகக்  குறைந்து விடுகிறது .
இந்த நிலையில் ஸ்வேதாவை காப்பாற்ற நடராஜ் எடுக்கும் முயற்சிகள் நன்றாகவே இருந்தாலும் எடுபாடாமல் நிற்கிறது . 
 
அந்த ஆரம்ப பிளாஷ்பேக் சம்பவத்துக்கு ஏற்ற முழுமையான திரைக்கதை  படத்தில் பின்னால் அமையவில்லையோ என்ற உணர்வு ஏற்படுகிறது .
 
சிக்கலான சூழலில் தவறான புரிதலுக்கு அப்பால் வரும் சரியான புரிதலை படத்தின் கடைசியில் வசனத்தில் விளக்ககிச் சொல்ல வேண்டும்
 
— என்ற ஒற்றை காரணத்துக்காக  அப்படி ஒரு ஆரம்ப கட்ட ஃபிளாஷ்பேக்காட்சி அவசியம்தானா ? இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் , பணத்துக்காக மனிதன் நடத்திக் கொள்ளும் நாடகங்களை, 
 
சில கதபாத்திரங்களுக்கான சம்பவங்கள் மற்றும் சூழல்களை காட்டுவதன் மூலம் அழகாக மேடை ஏற்றும்  வகையில் கவனம் கவர்கிறது படம் . 
 
எச்சரிக்கை – இது மனிதர்கள் நடமாடும் இடம்…. ரசிக்கவும் சிந்திக்கவும் தகுந்த இடம் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *