
ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நடிக்கும் புதிய படம் ஒன்று ஈழப் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கிறது .
பத்மஜா பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ் என் ரெட்டி , மற்றும் லக்ஷ்மிகாந்த் தயாரிப்பில் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கும்,
இந்தப் படத்துக்கு தெலுங்கில் ஒக்கடு மிகலடு என்றும் தமிழில் நான் திரும்ப வருவேன் என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது .
எழுதி இயக்கி இருப்பவர் அஜய் ஆண்ட்ரூஸ் நூதக்கி . திரைக்கதை கோபி மோகன், தமிழில் வசனம் பாடல்கள் சுரேஷ் ஜித்தன்
நான் திரும்ப வருவேன் என்பது கபாலி படத்தில் ரஜினி பேசிய வசனம் . தமிழ் தேசியத் தலைவர் தம்பி பிரபாகரனை மனதில் கொண்டு எழுதப்பட்ட வசனம் இது .
ஈழப் பிரச்னையை பேசும் இந்தப் படத்துக்கு பொருத்தமாக அதையே வைத்துள்ளார்கள் .
படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் டீசர் திரையிடப்பட்டது . இந்தியாவில் கல்லூரி காலத்தில் சமூகத்துக்காக போராடும் இளைஞன் ,
ஈழத்தில் தமிழின விடுதலைக்காக போராடும் இயக்கத்தின் தலைவர் என்று இரண்டு கதாபாத்திரங்களில் மஞ்சு மனோஜ் நடித்துள்ளார் .
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடி போன்ற ஒரு கொடி , தேசம் வாழ்க என்ற குரல், போராட்டத்தில் மடியும் காதல் ,தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவம் வேட்டையாடிய கொடுமை எல்லாம் டீசரில் இருந்தது .
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய – கே. பாக்யராஜின் உதவியாளரும் , பல தெலுங்குப் படங்களுக்கு கதை எழுதியவருமானசண்முகவேல் அய்யனார் ” படம் பார்க்கும்போது பல இடங்களில் அழுதேன் .
பார்த்த பிறகும் என்னால் இயல்புக்கு வர முடியவில்லை . அரசியல் காரணமாக நம்மால் சரியாக சொல்ல முடியாத ஈழப் பிரச்னையை வைத்து,
அற்புதமான திரைக்கதையில் சிறப்பான மேக்கிங்கில் மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்துள்ளார்கள் .
தலைவரின் வேடத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார் மஞ்சு மனோஜ் .
இப்போது இவரை இங்கே பார்க்கும்போது கூட ஒரு நொடி தலைவராகவே நினைத்து சட்டென்று காலில் விழுந்து எழத் தோன்றியது . தமிழர்கள் கொண்டாட வேண்டிய படம் இது ” என்றார் .
சுரேஷ் ஜித்தன் பேசும்போது “தமிழ் இனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதியை விளக்கி நம்மால் எடுக்க முடியாத படத்தை தெலுங்கு சகோதரர்கள் எடுத்துள்ளனர் .
மிக சிரமப்பட்டு உழைத்து உண்மைக்கு மிக நெருக்கமாக படத்தை உருவாக்கி உள்ளனர் .
இந்தப் படத்தில் பணியாற்றியது என் பெருமை ” என்றார் .
இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் நூதக்கி பேசும்போது ” இலங்கையில் இருந்து அகதியாக இந்தியா வந்திருக்கிறான் ஓர் இளைஞன் . இங்கே நடக்கும் சம்பவங்கள் அவனை நிம்மதி இழக்க வைக்கின்றன .
காரணம்…. என்னென்ன காரணத்தால் சம்பவங்களால் அவன் அகதியானானோ அதே காரணங்கள் சம்பவங்கள் இங்கும் நடக்கின்றன . அவன் என்ன செய்தான் என்பதுதான் படம்
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி தெலுங்கு ஆட்கள் படம் எடுத்துள்ளார்கள் என்றார்கள் . தமிழோ தெலுங்கோ, வலி எல்லோருக்கும் ஒன்றுதானே .
அந்த வலி உலகின் பார்வைக்கு என்றென்றும் ஒரு பதிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் . படத்தை உருவாக்கும் போது அந்த வலியை நாங்களும் அனுபவித்தோம் .
நம் கண் முன்னால் லட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள் . பெண்கள் சீரழிக்கப் பட்டார்கள் . . அது மறக்கக் கூடாத ஒன்று . அதைத்தான் படமாக எடுத்திருக்கிறோம்.” என்றார்
நாயகன் மஞ்சு மனோஜ் தன் பேச்சில் ” என் தாய் மொழி தெலுங்கு என்றாலும் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான் . நான் இந்த ஊரு தண்ணி குடிச்சு வளர்ந்தவன் .
இதுக்கு முன்னாடி நான் என்னைத் தெரியுமா என்று ஒரு தமிழ்ப் படத்தில் நடித்தேன் . அது சரியா போகல .
எனக்கு நிறைய ஈழத் தமிழ் நண்பர்கள் உண்டு . அதுதான் இந்த, நான்திரும்ப வருவேன் படத்தை எடுக்கக் காரணம் .
தன் கண் முன்னாடியே தன் மண்ணில் தான் பிறந்த பூமியில் தன் நாட்டு இராணுவத்தாலேயே அப்பா அண்ணன் தம்பி எல்லாம் சுட்டுக் கொல்லப் படுவதையும்,
அம்மா அக்கா தங்கைகள் கற்பழிக்கப்படுவதையும் பார்ப்பது எவ்வளவு பெரிய கொடுமை . அந்தக் கொடுமையை அனுபவித்தவர்கள் ஈழத் தமிழர்கள் .
பொதுவா நாம எல்லாம் நம்ம பிள்ளைகள் டாக்டராவோ என்ஜினீயராகவோ ஆகணும்னு நினைப்போம் . ஆனா ‘நம்ம பிள்ளை படகுல தப்பிப் போயி அகதி ஆயிட்டா போதும் .
உயிராவது பிழைச்சுக்குவான் என்று ஏங்கின பெற்றோர்கள் அவர்கள் . அது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை .
இந்தப் படம் அவர்களுக்கு நடந்த கொடுமைகளை அழுத்தமா சொல்லும் என்று நான் என் இலங்கைத் தமிழ் நண்பர்களுக்கு உறுதி கொடுத்துள்ளேன் . படத்தில் இளைஞனாகவும் தலைவராகவும் நடிக்கிறேன் .
தலைவராக நடிக்கும்போது – அந்த கம்பீரம் வரவேண்டும் என்பதற்காக பதினைந்து கிலோ வெயிட் ஏற்றினேன் . இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பான விஷயம் அது
இப்படி ஒரு படத்தில் நடிக்கும்போது செத்து இருந்தா கூட சந்தோஷமா செத்து இருப்பேன் . ஒரு நல்ல படம் பண்ணிட்டு இருக்கும்போது செத்துப் போனான்னு பேரு கிடைக்குமே “என்றார் .
செப்டம்பர் எட்டாம்தேதி திரைக்கு வருகிறது நான் திரும்ப வருவேன் .
வாங்க தம்பி !