லிப்ரா புரடக்ஷன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்க, கவின், ரம்யா நம்பீசன், ராஜூ, அருண்ராஜா காமராஜா , இளவரசு, நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் சிவா அரவிந்த் இயக்கி இருக்கும் படம் நட்புன்னா என்னானு தெரியுமா ?. இவங்களுக்கு ரசிகன் மன்சுன்னா என்னானு தெரியுதா ? பேசலாம் .
சிறுவயது முதலே பள்ளிக் கூடக் காலத்தில் ஒன்றாக கூடிக் கூத்தடித்து ஒழுங்காகப் படிக்காமல் கல்வியில் தோற்றுப் போன இளைஞர்கள் சிவா (கவின்), ராஜு (ராஜு) , மணி ( அருண் ராஜா காமராஜா )

ஒரு நிலையில் மூவரும் சேர்ந்து ஏ டு இசட் கல்யாணத்தை முடித்துத் தரும் தொழிலை துவங்குகிறார்கள் . காதலர்களை சேர்த்து வைத்து அவர்கள் பெற்றோர்களை சமாதானப்படுத்தி , அதன் மூலம் பல காதல் ஜோடிகளின் அபிமானத்தை பெற்று அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் போது அந்த கல்யாணத்தை நடத்தித் தரும் ஆர்டரை பெறுகிறார்களாம் . அப்படி வளருது தொழில்.
இவர்களில் ராஜு, சுருதி என்ற பெண்ணை விரும்புகிறான் . அவளை தானும் விரும்பும் சிவா, மணியிடம் ‘சுருதி உன்னை டாவடிக்கிறாள்’ என்று சொல்லி நம்ப வைத்து மணியை குழப்பி அதன் மூலம் ராஜுவை ஏமாற்றி ஸ்ருதியின் அன்பை பெறுகிறான் . ராஜு விஷம் குடிக்கிறான் . அவனை காப்பற்றினாலும் , விஷயம் அறிந்த நண்பர்கள் சிவாவை பிரிகிறார்கள்.

இந்நிலையில் தான் இதுவரை பெண்களை வெறுக்க காரணமே இப்போது நாம் விரும்பும் சுருதிதான் என்று சிவா அறிகிறான் . அவளை பிரிகிறான் . பிரச்னை பெரிதாக விஷம் குடிக்கிறான் .
சிவா பிழைத்தானா ? காதல் என்ன ஆச்சு ? நண்பர்கள் இணைந்தார்களா ? என்பதே இந்த படம்னா என்னானு , சாரி , நட்புன்னா என்னானு தெரியுமா ? படம் .
சாதரணமாக ஆரம்பிக்குது படம் . எல்லாரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் .
”எங்கப்பாவுக்கு ஸ்ட்ரோக் ”
“டூ ஸ்ட்ரோக் கா ? ஃபோர் ஸ்ட்ரோக் கா ?”

– என்று கேட்டுக் கொண்டு நடிப்பவர்கள் மட்டும் சிரித்துக் கொள்ள முதல் பாதி முடியும்போது மரண பயத்தை உண்டு பண்ணி இருந்தார்கள் .
ஆனால் இரண்டாம் பகுதியில் நிஜமாகவே கொஞ்சம் நகைச்சுவை வந்து ஆசுவாசப்படுத்துகிறது .
சிவா காதலை சொன்ன உடனே சுருதி அதை ஏற்கவும் , அது தெரிந்த உடன் சிவா காதலை வெறுக்கவும் காரணமாக மிக பொருத்தமாக வரும் அந்த பள்ளித் தேர்வு காட்சியை பயன்படுத்திய விதம் திரைக்கதையில் சிறப்பு .

யுவராஜின் ஒளிப்பதிவு , நிர்மலின் படத் தொகுப்பு ஒகே .
சல சல என்று படம் முழுக்க பேசிக் கொண்டு இருப்பது போதாது என்று பின்னணி இசை என்ற பெயரில் வாசித்து அல்ல அல்ல இரைச்சல் கொடுத்து கதற வைக்கிறார் இசையமைப்பாளர்.
நடித்தவர்கள் குறை சொல்லும்படி செய்யவில்லை .பாரட்டும்படியும் செய்யவில்லை .
தொண்ணூறுகளில் வந்த ஒரு சுமாரான படம் பார்த்த உணர்வை தருகிறது இந்த படம் .

இன்னும் சிறப்பான முதல் பாதி, அக்கறையான திரைக்கதை, ஏற்றுக் கொள்ளும்படியான காட்சிகள் இருந்து இருந்தால் ஒரு சுமாரான பாடமாகவாவது வந்திருக்கும்
