பி ஸ்டார் புரடக்சன்ஸ் தயாரிப்பில், பூ ராம், இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி நடிப்பில் செல்வகண்ணன் இயக்கி இருக்கும் படம் நெடுநல்வாடை .
நெடுநல்வாடை என்பது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று . வாடைக் காலத்தில் நடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கியம் . தலைவனை பிரியும் தலைவிக்கு அந்த வாடை நெடும் பிரிவாகவும் தலைவனுக்கு போரில் வெற்றி தரும் நல் பருவமாகவும் அந்த வாடை இருப்பதால் நெடுநல்வாடை என்று பெயர் .
சரி அந்தப் பெயர் கொண்ட படம் எப்படி ? யாருக்கு வலி ? யாருக்கு வெற்றி ? பேசலாம் .

ஓடிப் போய் (?) கல்யாணம் செய்து கொண்ட மகள் பேச்சியம்மா (செந்தி), புருஷன் கொடுமை தாளாமல் , தன் மகன் மற்றும் மகளுடன் வாழா வெட்டியாக அப்பன் செல்லையா (பூ ராம்) வீட்டுக்கே வருகிறாள் .
அவன் இங்கேயே இருந்து பிள்ளைகளோடு வளர்ந்தால் சொத்தில் பங்கு தர வேண்டும் என்று பயப்படும் செல்லையாவின் மகன் கொம்பையா ( மைம் கோபி) தங்கையையும் பிள்ளைகளையும் வெறுக்கிறான் .
மகள் வயிற்றுப் பிள்ளைகளுக்காக வாழ முடிவு செய்கிறார் செல்லையா .

பெண்ணைக் கட்டிக் கொடுத்து விட்டால் அப்புறம் அவளுக்கு சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்ற ஊர் வழக்கத்தையும் மீறி அவர்களுக்கு செலவு செய்கிறார்
மகனின் தொடர் எதிர்ப்பையும் மீறி பேரன் பேத்தியை வளர்க்கிறார் .
பேரன் இளங்கோவுக்கும் ( இளங்கோ) அந்த ஊர் வசதியான வீட்டுப் பெண் அமுதாவுக்கும் ( அஞ்சலி நாயர் ) காதல் .
படித்து முடிப்பதற்குள் பேரன் காதல் என்று போவது தாத்தாவுக்கு பிடிக்கவில்லை . இவன் ஒழுங்காக முன்னேறாவிட்டால் மகளும் பேத்தியும் கூட , தனது காலத்துக்கு பிறகும் கஷ்டப்படுவார்களே என்பது செல்லையாவின் பயம்

எனினும் பெண்ணின் காதல் யோசிக்க வைக்கிறது .
ஒரு நிலையில் சொற்ப சம்பளத்துக்கு இளங்கோவுக்கு சென்னையில் வேலை கிடைக்க, சொந்தக்காரன் நம்பியோடு ( ஐந்து கோவிலான்) இளங்கோவுக்கு அமுதாவை பேரனுக்கு பெண் கேட்டுப் போகிறார் செல்லையா.
ஆனால் அமுதாவின் அண்ணன் மருது பாண்டியோ (அஜய் நடராஜ்) சொற்ப சம்பளக்காரனுக்கு பெண் தர முடியாது என்று மறுக்கிறான்.
அதையும் மீறி காதல் தொடர இளங்கோவும் மருது பாண்டியும் மோதிக் கொள்கிறார்கள் .
பேரனை வெளிநாட்டுக்கு அனுப்ப, நிலத்தை விற்று செல்லையா ஏற்பாடு செய்ய, காதலர்கள் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ள முயல, விசயம் அறிந்த மருது பாண்டி ஆட்கள் இளங்கோவை கொலை வெறியோடு தாக்க,

அப்புறம் என்ன நடந்தது ? காதல் நிறைவேறியதா ? ஆம் எனில் யாரால்? இல்லை எனில் எப்படி ? என்பதே இந்த நெடுநல்வாடை .
1980, 90 களில் 80, 90 தடவை தமிழ் சினிமாவில் வந்த காதல் கதைதான் . ஆனால் தாய்மாமன், பாட்டி பேத்தி வரிசையில் தாத்தா பேரன் பாசப் படமாக திரைக்கதையில் கொண்டு வந்து அசத்துகிறார் இயக்குனர் செல்வ கண்ணன் .
ரத்தமும் சதையுமான வாழ்வியல் செறிந்த களம், வித்தியாசமான பின்புலம், சிறப்பான படமாக்கல் , இவற்றால் சிறப்பான படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர். அழுத்தமான இயக்கம் .
“இன்னிக்கே ஊருக்கு போகட்டா… இல்ல நீ ஒருவாரம் கழிச்சு வந்த உடனே போகட்டா.?”
“இன்னிக்கே போயிடு . இல்லன்னா இது மாதிரி நான் இன்னொரு தடவை அழணும்”
– போன்ற இடங்களில் வசனம் கவிதைப் பூர்வமான ஆழம் . சபாஷ்.

தெறிப்பான லோக்கேஷன்களை அழகாக படம் பிடித்து இருப்பதன் மூலம் யதார்த்தத்துக்கு நெருக்கமாக படத்தை உணர வைக்கிறது வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு .
வைரமுத்துவின் வரிகளில் வரும் பாடல்களில் இனிமை சுமார்தான் என்றாலும் பின்னணி இசையில் கனம் கூட்டுகிறார் இசை அமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்க்ளின்.
மெதுவாக நகரும் படத்தை அழகாக உணரும் அளவுக்கு சிறப்பாக தொகுத்து இருக்கிறார் காசி விஸ்வநாதன் . பழகிய கதையே சுவாரஸ்யமாக தெரிய இவர் காரணம். படத்துக்கு பெரும்பலம் படத் தொகுப்பு.

படம் பூராம் பூ ராம் தான் . செல்லையாக வாழ்ந்து இருக்கிறார் பூ ராம் . மெல்லிய முக பாவங்களால் அந்தக் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ஜொலிக்கிறார் .
அமுதாவாக வரும் அஞ்சலி நாயர் ஆரம்பத்தில் துறுதுறுப்பும் அப்புறம் கனமும் செறிந்த நடிப்பால் உள்ளம் கொள்ளை கொள்கிறார் . கண்ணுக்குள்ளே நிற்கும் முகம் . அருமை .
மற்றவர்களும் குறை சொல்லும்படி இல்லை .
மொத்தத்தில் நெடுநல்வாடை … நெடுநாள் வடையாக இருந்தாலும் பரிமாறிய விதத்தில், இட்லியானது உப்புமா ஆனது போல ருசிக்கிறது .
