7 C’s என்டர்டைன்மென்ட் மற்றும் அம்மே நாராயணா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், நிஹாரிகா, காயத்ரி , ரமேஷ் திலக், ராஜ்குமார்,
டேனியல், விஜி சந்திர சேகர் நடிப்பில் ஆறுமுகக் குமார் தயாரித்து இயக்கி இருக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் .
உடனே படத்துக்கு போலாமா ? இல்லை நல்ல நாள் பார்த்துதான் போகணுமா? பார்ப்போம்
தமிழக எல்லையில் உள்ள ஆந்திர கிராமமான எம சிங்கபுரம் என்ற — கொள்ளையை தொழிலாகக் கொண்ட கிராமத்து மக்களில் ஒருவனான நபர் எமன் (விஜய சேதுபதி).
அவன் அம்மா கூட்டத்தின் தலைவி ( விஜி சந்திரசேகர்) , அவனை ஒருதலையாய் காதலிக்கும் ஒரு பெண் (காயத்ரி)
சென்னைக்கு தன் சகாக்கள் இருவருடன் (ரமேஷ் திலக், ராஜ்குமார்) திருட வரும் எமன், அங்கே கல்லூரியில் படிக்கும் ஓர் சிற்றிளம்பெண்ணை (நிஹாரிகா) தன் மனைவி என்கிறான், பொய்யே சொல்லாத எமன் .
ஆனால் அந்த கல்லூரிப் பெண்ணுக்கும் , மான ரோஷம் பார்க்காத ஒரு இளைஞனுக்கும் ( கவுதம் கார்த்திக்) காதல் .
அந்தப் பெண்ணை எமன் கடத்திக் கொண்டு வர, அவளைத் தேடி காதலனும் அவனது நண்பன் ஒருவனும் ( டேனியல் ) எம சிங்கபுரம் வருகின்றனர் .
அப்புறம் நடந்தது என்ன ? இந்தப் பெண்ணை எமன் எப்படி மனைவி என்கிறான் ? அவனை திருமணம் செய்து கொண்டது கல்லூரி மாணவியா ? ஒருதலைக் காதலியா ?
கல்லூரி மாணவி — அவளது காதலன் காதல் என்ன ஆனது ? என்பதே இந்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் .
வெயிட் .. வெயிட் ..நத்திங் சீரியஸ் . இது காமெடி படம் அல்லது அதற்கு முயற்சி செய்யும் படம் .
எமன் கேரக்டரில் வித விதமான கெட்டப்பில் அசத்துகிறார் விஜய் சேதுபதி . அவரை இல்லாமல் இந்த படத்தை யோசிக்க முடியாது . அவருக்கு இருக்கும் இமேஜ் இந்தப் படத்தின் முதல் பலம் . அவரது நடிப்பு படத்தின் இரண்டாவது பலம் .
அதே நேரம் மான ரோஷம் பார்க்காத இளைஞனாக வரும் கவுதம் கார்த்திக்கும் நடிப்பில் ஜொலிக்கிறார் .
கள்ளங்கபடம் இல்லாத இளம்பெண் தோற்றத்தில் ப்ளஸ் நடிப்பில் நிஹாரிகா கவர, அழுத்தமான நடிப்பில் ஈர்க்கிறார் காயத்ரி .
ரமேஷ் திலக் சிறப்பு .
ஆர்வக் கோளாறு கேரக்டரும் அதில் ராஜ்குமார் நடிப்பும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது . அவருக்கு விஜய் சேதுபதி கொடுக்கும் ரியாக்ஷன்கள் செம செம .
டேனியல் ரொம்ப கத்துகிறார் எப்பவாவது சிரிக்க வைக்கிறார் .
காமெடி என்ற பெயரில் சந்தடி சாக்கில் முத்துக் குமார் பேசும் ஆபாச வசனத்தை தவிர்த்து இருக்கலாம் .
விஜி சந்திர சேகர் நல்ல நடிப்பு .
ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு , முத்துவின் கலை இயக்கம் , , மற்றும் காஸ்டியூம் அருமை . இந்த மூன்றும் ஒன்றுகொன்று இணைந்து இயைந்து அசத்துகின்றனர் .
படத்தின் ஆகப் பெரும்பலம் ஜஸ்டின் பிரபாகரன் கொடுத்து இருக்கும் அற்புதமான பின்னணி இசை . தன் இசை மொழியால் சுமாரான நகைச்சுவைகளைக் கூட காப்பாற்றுகிறார் ஜஸ்டின் பிரபாகரன் . பாடல்களும் ஒகே .
படத்தின் துவக்கம் , போக்கு இடைவேளை , இரண்டாம் பாதி எல்லாம் பார்டர் மார்க்கிலே பாஸ் ஆகி , கடைசியில் தாண்டிக் குதித்து .
உதிரி உதிரியாக வரும் காட்சிகளை கடைசியில் எப்படியோ போராடி ஒரு உருண்டையாக பிடித்து கையில் கொடுத்து ” ஸ்ஸ்ஸ் அப்பாடா … “என்று பேரு மூச்சு விடுகிறார் இயக்குனர் ஆறுமுகக் குமார் .
எம சிங்கபுரத்தை இன்ட்ரடியூஸ் செய்ய ஆண்ட்ரமீடியா கேலக்சிக்கு அப்பால் இருந்து எல்லாம் வர்றீங்க . அப்புறம் அண்ணாந்து பார்க்கவே இல்லியே . ஏன் டைரக்டர் ?
எனினும் விஜய் சேதுபதி, வித்தியாசமான பின் புலம் , கண்ணுக்கு குளிச்சியான காட்சிகள், காமெடி , சில வித்தியாசமான கேரக்டரைசேஷன் இவற்றால் இந்த வாரப் படமாகிறது ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் .
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————-
விஜய் சேதுபதி, ஜஸ்டின் பிரபாகரன், கவுதம் கார்த்திக்