சமுத்திரக் கனி, சாம் ஜோன்ஸ் , அதுல்யா ரவி , ரோஷினி, சிங்கம் புலி , பால சரவணன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் Aஏமாலி.
படத்தில் ஒரு வசனத்திலேயே வருவது போல இந்த Aஏமாலி (ரசிப்புக்குரிய) கோமாளியா இல்லை (முக சுளிப்புக்குரிய) பேமானியா ? பேசலாம் .
காதல் பிரேக்கப் ஆன நிலையில் தான் காதலித்த பெண் (அதுல்யா ரவி ) தன்னை ஏமாற்றி விட்டதாக எண்ணி அவளைக் கொலை செய்ய விரும்புகிறான் காதலன் (சாம் ஜோன்ஸ்)
அவன் அண்ணன் ஸ்தானத்தில் வைத்திருக்கும் மரியாதைக்குரிய ஒரு நபர் (சமுத்திரக் கனி ) , காதலில் தோல்வியுற்ற (வேறு) ஒரு பெண்ணுக்கு (ரோஷினி) உதவப் போக ,
அவளுக்கு அவள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டு, ஒரு நிலையில் இருவரும் ஒரே வீட்டில் வசிக்க, அவருக்கும் ஈர்ப்பு ஏற்படுகிறது .
கொலை செய்ய விரும்பும் தம்பியும் இந்த பக்குவ அண்ணனும் சேர்ந்து கொலை விசயத்தில் ஒரு முடிவுக்கு வருகின்றனர் .
அதாவது, தம்பியின் ஏமாற்றிய காதலியை கொலை செய்ய திட்டமிடுவது . ஆனால் கொலை செய்யும் நிகழ்வை மட்டும் நடத்தாமல் , கொலை நடந்து விட்டதாக எண்ணி , விசாரணை செய்வது ..
விசாரணை முடிவில் மாட்டிக் கொள்ளாதது போல இருந்தால் , திட்டமிட்டபடி கொலை செய்வது … இல்லை எனில் விட்டு விடுவது ..
டீல் ஒகே ஆகிறது
தம்பியின் ஏமாற்றிய காதலியை கொலை செய்யத் திட்டம் வகுக்கின்றனர் . சரியான சமயத்தில் கொலை மட்டும் செய்யாமல் கொலை நடந்ததாக எண்ணி ,
மாநில போலீஸ் ஆக , பின்னர் சி பி ஐ ஆக அண்ணன் தம்பி இருவருமே பல்வேறு கெட்டப்களில் வந்து விசாரணை செய்கின்றனர் .
அப்புறம் ?
கடைசியில் மாட்டிக் கொள்வது போல அமைய , அந்தக் காதலன் கொலை முயற்சியை கைவிடுவது , அல்லது காதலர்கள் ஒன்று சேர்வது ….
இப்படி ஏதாவது உருப்படியாக கதை போகும் என்று நீங்கள் நம்பினால் .. அதற்கு நிர்வாகம் யாதொரு பொறுப்பும் ஏற்காது .
அது ஒரு கொடுமை .
சமுத்திரக் கனி , சாம் ஜோன்ஸ் இருவரும் தத்தம் கேரக்டரில் நடித்துள்ளனர் .
ரதீஷ் கண்ணன் , பிரகாஷ் இருவரின் ஒளிப்பதிவும் மிக அருமை .
போலீஸ் துறையை நீதிபதி டீல் செய்யும் அந்த இரண்டு காட்சியும் யதார்த்தம் .
அம்புட்டுதேங் ..
ஒரு கொலை நிஜமாக நடந்த பின்பு அதை விசாரணை செய்வதை படமாக்குவதற்கும் , ஒரு கொலை நடக்காத நிலையில் அது நடந்து விட்டதாக,
அதாவது, இது அல்லது அது , இப்படி அல்லது அப்படி .. என்று , யூகத்தில் நடக்கும் விசாரணையை படமாக்குவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு .
இங்கே கதைப்படி கொலை நடக்காமல் யூகத்தில் கதை போகிறது .
ஆனால் படமாக்கிய விதமோ , நிஜமாக ஒரு வகையில், ஒரு ஸ்டைலில் , ஓர் இடத்தில் , ஒரு பொசிஷனில் , ஒரு நிகழ் தகவில் (probability) கொலையே நடந்து விட்டது போல படமாக்கப் பட்டுள்ளது . இந்த தவறான டைரக்ஷன் படத்தின் லாஜிக்கையும் , திரைக்கதையைப் பின் பற்ற வேண்டிய அவசியத்தையும் கவிழ்த்து விட்டது . ஆக அங்கேயே ‘கதை’ முடிந்து விட்டது .
ஏதோ அன்னியப் படத்தில் இருந்து உத்தியை உருவி இருக்கிறார்கள் . ஆனால் அதை எப்படி நமது சினிமாவுக்கும் படம் சொல்லும் காதல் வெறுப்புப் பிரச்னைக்கும் பொருத்த வேண்டும் என்று தெரியாமல் விட்டு விட்டார்கள்
சரி அதுதான் போகட்டும் .. படத்தில் நல்ல விஷயம் ஏதாவது இருந்தால் அதையாவது பாராட்டுவோம் என்றால் , ”அஸ்கு புஸ்கு… அதுகெல்லாம் இடம் கொடுப்போமா?” என்கிறார்கள் .
கதாநாயகி உட்பட படத்தில் வரும் எல்லா பெண்களுமே திறந்த ‘மனதோடு’ ,……அல்லது குட்டை டிரவுசரோடு (கவனிக்க , குட்டைப் பாவாடை கூட அல்ல !) ….. அல்லது இடுப்பைக் காற்றாட விட்டே நடமாடுகிறார்கள் .
எல்லோரும் கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் . குறைந்தது இரண்டு லவர் வைத்துக் கொள்கிறார்கள் . அல்லது லெஸ்பியனாக இருக்கிறார்கள் . விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரியிடமே ஜொள்ளு விட்டுப் பேசுகிறார்கள் .
கதாநாயகி ஜஸ்ட் லைக் தட் பல காட்சிகளில் தம் அடிக்கிறாள் . கதாநாயகனும் கதாநாயகியும் தம் அடித்துக் கொண்டே காதல் பார்வை ,, இல்லை காமப் பார்வை பார்த்துக் கொள்கிறார்கள்
இது போதாது என்று மகள் இறந்த நிலையில் ஹீரோயின் அம்மாவும் தம் அடிக்கிறாள் .
ஒட்டு மொத்த பெண்கள் மேலும் இவர்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்போ தெரியல .
இது போதாதென்று ..
“ஒரு பெண்ணை ஆணும் ஆணை பெண்ணும் உடல் அளவில் சுமப்பதுதான் கல்யாணம் . ஆனால் மதிப்பதுதான் லிவிங் டுகெதர் வாழ்க்கை ” என்று …. கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் எல்லாம் கலந்து கொண்டு கொஞ்ச நாள் வாழ்ந்து பின்னர் ஜஸ்ட் லைக் தட் பிரிந்து போகிற வாழ்க்கை கல்யாண வாழ்க்கையை விட உயர்ந்தது என்று பாராட்டுகிறார்கள் .
வசனம் ஜெயமோகன் என்று வருகிறது . எது .. ? அந்த… விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகனா ?
பாடல்கள் வெகு சுமார் . பின்னணி இசை பின்னுக்கு இழுக்கிறது .
கிளைமாக்ஸ் கொடுமை .
தான் காதலித்த பெண் தனக்கு கிடைக்கவில்லை என்றால் அவளை கொலை செய்ய வேண்டும் என்று பலரும் யோசிப்பது, இன்று நிகழ்வில் உள்ள யதார்த்தமான் பிரச்னை .
அதை எடுத்துக் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு முடிவை சொல்லாமல் , தவறான உத்தியும் அபத்தமான முடிவுமாக ஒரு படம் பண்ணி இருப்பது வேதனை .
Aஏமாலி….. ரசிகன்தான் ஏமாளி .