அதர்ஸ் (OTHERS) @ விமர்சனம்

கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஸ்காந்த், ஹரிஷ் பெராடி, நண்டு ஜெகன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கி இருக்கும் படம் அதர்ஸ் . 

2001 ஆம் ஆண்டு இதே பெயரில் ஆங்கில சூப்பர் நேச்சுரல் சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படம் வந்தது. 

மனிதர்களை பால் ரீதியாகப் பிரிக்கும் பதிவுகளில் MALE, FEMALE தவிர OTHERS என்று ஒரு பிரிவு இல்லையா? அதுதான் படத்தின் அடிநாதம் . 

இரவில் முக்கியச் சாலையின் நடுவில் பெரிய கல்லை வைத்து, அதில் மோதி நிற்கும் வாகனங்களில் இருந்து, கொள்ளையடிக்கக் காத்திருக்கிறான் ஒருவன். அப்படி ஓர் வேன் வந்து மோதி காற்றில் பறந்து விழுந்து வெடித்து நெருப்பு பற்றி , அதில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் எரிந்து கருகிப் போயிருக்கிறார்கள் . 

விசாரிக்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் (அறிமுகம் ஆதித்யா மாதவன்) அவரது காதலி ஒரு டாக்டர் ( கவுரி கிஷன்) ஏசி யின் படையில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் ( அஞ்சு குரியன்) உண்டு . 

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி இறந்த அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் எரிக்கப்படும் முன்பே காயப்படுத்தப்பட்டு இருக்கிறாள். அந்த ஆண் உடல் வேனின் மேலே வெளிப்பக்கம் கிடந்தபடி எரிந்து இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது 

விசாரணை தொடர , மருத்துவர் காதலி வேலை செய்யும் செயற்கைக் கருத்தரித்தல் மையத்தில் கருமுட்டைக்குள் விந்தணு செலுத்தப்பட்ட பிறகு, அந்தக் கருவை வயிற்றில் செலுத்தி கரு வளர்ந்து பிரசவிக்கும் சிகிச்சையில் ஒரு முறைகேடு கண்டு பிடிக்கப்படுகிறது . 

அதாவது செயற்கைக் கருத்தரித்தல் முறையில் பிறக்கும் குழந்தைகளை ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத இடைப்பட்ட இனக் குழந்தைகளாக வளர்வதற்கான ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது .

வேனில் இறந்த பெண்கள் எல்லோரும் கண் பார்வையற்ற நபர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் கருணை கோயில் என்ற அனாதை இல்லத்தில் இருந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொல்லப்பட்டது தெரிய வருகிறது . கணவர்கள் எல்லாம் ரவுடிகள் என்பதும் புரிகிறது 

பார்வையற்ற பெண்கள் கொலை வழக்கு கருத்தரித்தல் மையம் சம்மந்தப்பட்ட அதிர்ச்சியும் ஒரு புள்ளியில் ஒன்று சேரும்போது நடந்தது என்ன படம் . 

ஒரு சிறுபான்மை தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டால், அந்தச் சிறுபான்மை தங்களைப் பெரும்பான்மையாகக் கொள்ள எந்த எல்லைக்கும் போகும் என்பதுதான் இயக்குனர் சொல்ல வரும் கருத்து . 
முதல் காட்சியே அளவுக்கு மீறிய நீளத்தில் இருக்கிறது . ஜிப்ரனின் அருமையான பின்னணி இசை

இல்லாவிட்டால் அந்தக் காட்சியே சுமையாகி இருக்கும். படம் முழுக்க சிறப்பாக இசைத்திருக்கிறார் ஜிப்ரான். 
எனினும் கதையாக ஆரம்பம் சிறப்பாகவே உள்ளது . போகப் போக பலமுறை பார்த்த படங்களைப் போல மாறி விடுகிறது . ‘அந்தப் படத்துல இருந்து அதை ஏடு…. இந்தப் படத்துல இருந்து இதை ஏடு.. கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத கனமான விஷயம் ஒன்றை சொல்லு,.அது நியாயமாக இருக்கு. தேவை இல்லை; வித்தியாசமாக இருந்தால் போதும்’ என்ற ரீதியில் திரைக்கதை இருக்கிறது .   

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்தின் திரில் தன்மைக்கு நியாயம் உள்ளது. ராமரின் எடிட்டிங் ஓகே ரகம். 
நாயகன் ஆதித்யா மாதவன் , கேரக்டருக்குப் பொருத்தமாக நடித்துள்ளார் .

அழகான எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார் கவுரி கிஷன் . அஞ்சு குரியன் போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்துகிறார் . சில காட்சிகளே என்றாலும் நண்டு ஜெகன் சிறப்பு, 

ஹரீஷ் பெராடிக்கு பழகிய கேரக்டர் . 

வில்லன் நாயகியைத் துரத்த, அவளுக்கு நாயகன் செல்போனில் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தே போலீஸ் இருக்கும் பகுதிக்கு போக வைத்து வில்லனை மடக்கும் சீன் அருமை . ஜிப்ரான் இசை அங்கே பிரம்மாதம் . 

கொலைகாரன் யார்? ஏன்? என்பதற்கான காரணம் அதுவரை பார்த்த படத்தின் தன்மையையே மாற்றி பலவீனம் ஆக்கி விடுகிறது. அவ்வளவு கனமான விசயம். 

ஆனால் கடைசியில் வரும் அந்த அதீத கனம் படத்துக்குப் பலன் தருமா என்பது கேள்விக்குறியே. 

மாறாக இடைவேளையிலேயே அந்த சஸ்பென்சை ஓப்பன் செய்து, எதிர்த்தரப்பு நியாயத்துக்கான காரணத்தை வலுவாக அழுத்தமான காட்சிகளில் சொல்லி , இன்னும் கொஞ்சம் விவாதத்தை நீட்டித்து ஹீரோயிசத்தைக் குறைத்து யார் ஜெயிப்பார் பார்ப்போம் எனற சவாலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தால் இந்தப் படம் படத்தின் நோக்கமும் படம் பார்ப்பவர்களால் இந்த கிளைமாக்ஸ் ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது . 

OTHERS என்ற செயல்பாட்டை அப்படியே தமிழ்ப்படுத்தி அதன் நேரடிச் என்ற பொருளில், ‘மற்றவை…. நேரில்’ என்ற பெயர் வைத்திருந்தாலும் கூட இந்தப் படம் இன்னும் எளிதாக ரசிகர்களை அடைய வாய்ப்பு உண்டு. 

மற்றவை …. சிறப்பும் இல்லை; சாதாரணமும் இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *