பூக்கி @ விமர்சனம்

மீரா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, 
 
மார்கன் புகழ் அஜய் திஷான், அறிமுக நாயகி தனுஷா  மற்றும்  பாண்டியராஜன் , சுனில், லட்சுமி மஞ்சு, விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் , பிக்பாஸ் சத்யா நடிப்பில் புதிய பரிதி என்பவரின் கதை திரைக்கதை வசனத்தில் சலீம் உள்ளிட்ட பல படங்களில் அற்புதமான ஒளிப்பதிவைத் தந்த கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்து , முதன் முதலாக இயக்கி இருக்கும் படம். 

 
 ஜென் ஸீ தலைமுறைக் காதல் ஜோடி ஒன்று (அஜய் திஷான் – தனுஷா) . அவர்களுக்கு இடையேயான  சின்னச் சின்ன சண்டைகள்,  கோப தாபங்கள், சந்தர்ப்ப சூழல் எரிச்சல்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து,  ஒரு நிலையில் சண்டையாக வெடிக்கிறது . அன்பான வார்ததைகளால் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் வழக்கம் போய்,  பெயர் சொல்லி அழைப்பதே விலகிச் செல்லும் நிலை என்ற உணர்வு உள்ள அவர்களுக்கு இடையில்,  சண்டை உச்சம் பெறுகிறது. 
 
காதலன் ரோட்டில் ஒருவனுடன் சண்டை போட அதைத் தடுக்க முயன்றும் முடியாத நிலையில் காதலி காதலனை அறைய , பதிலுக்கு அவனும் அவளை அறைய,  பலரும் அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் போட, இருவருக்கும் பெருத்த அவமானம் ஏற்பட , 
 
இருதரப்பு உறவுகள் நண்பர்கள் , சமூக ஊடகங்கள் அழுத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து அவர்கள் சண்டையைப்  பெரிது படுத்தி பிரேக்கப் செய்ய வைக்கின்றன. 
 
பிரேக்கப் செய்த பிறகு அதை கடந்து வருவதில் உள்ள கஷ்டங்களை இருவரும் அனுபவிக்கின்றனர்.  காதலை மறக்க அவன் ஜிம்முக்கு போகிறான்.  நிறைய படங்கள் பார்க்கிறான் . மாஸ்கியூட்டோ பேட் வைத்து நிறைய கொசு  அடிக்கிறான் 
 
அவள் ஆன்மீகத் தேடல், அடிக்கடி ஷாப்பிங் , விரும்பியதை எல்லாம் சாப்பிடுவது என்று வாய் பிளக்கிறாள்; வாய் பிளக்க வைக்கிறாள் . 
 
ஆனாலும் இருவராலும் ஒருவரை ஒருவர் மறக்க முடியவில்லை
 
இழந்த உறவை இன்னொரு உறவால்தான் சரி செய்ய முடியும் என்று அறிவுரைகள் இருவருக்கும் கிடைக்க,  அவன் டேட்டிங் அப்பில் தோழிகள் காதலிகள் தேடுகிறான். அவள் மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடுகிறாள் . சோஷியல் மீடியாவில்  ஏற்ற பையனை தேடுகிறாள் . 
 
அப்படி பலரை சந்தித்தாலும் அவளுக்கு யாரையும் பிடிக்கவில்லை. ஆனால் ஒரு நண்பன் கிடைக்கிறான். 
 
காதலனோ நவ நாகரீக மாடர்ன் விஷயங்கள் கடந்து கடந்து அவன் தன் அம்மாவுடன் உறவுகள் வீட்டு விஷேங்களுக்கு போய் பெண் தேடுகிறான் . அவனுக்கு அப்படி ஒரு காதலி அமைகிறாள் .
 
ஒரு நிலையில் நாயகி ,  அவளது நண்பன்,  நாயகன் ,  அவனது புதிய காதலி நால்வரும் சந்திக்கிறார்கள். அதன்  விளைவாக இன்னும் கொஞ்சம் மன விலகல் ஏற்படுகிறது . 
 
எனினும் முழுதாக ஒருவரை ஒருவர் முடியாத நிலையில் ஒரு வருடமும் கடந்து விட,  இருவரும் நேரில் சந்தித்து கோபம் இல்லாமல் இயல்பாக பிரேக்கப் சொல்லி விலக முடிவு செய்ய, 
 
நடந்தது என்ன என்பதே பூக்கி.
 
பூக்கி?
 
காதலியை  காதலன் பூவாக வர்ணிப்பது அந்தக் கால தமிழ் வழக்கம் .  பூங்கி என்ற சொல் கூட நல்ல ஒரு தமிழ்ச் சொல் . அந்த வகையில் காதலன் காதலி இருவரும் ஒருவரை அன்பாக அழைத்துக் கொள்ளும் தமிழ்ச் சொல்தான்  பூக்கி என்று நீங்கள் நினைத்தால்…
 
அதுதான் இல்லை !
 
பூக்கி என்பது தமிழ் வார்த்தையே இல்லை. 
 
நெருங்கிய நண்பர்கள், தோழிகள், காதலன்,  காதலி, இவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் ஆங்கிலச் சொல் தான் பூக்கி, 
 
அன்பே,  செல்லம், டியர், பட்டுக்குட்டி, கண்ணு , பேபி. டார்லிங், ஸ்வீட் ஹார்ட் என்பது போல ஒரு ஆங்கில வார்த்தை. அன்புக்குரியவர்களை அழைக்கும் சொல் இது என்கிறது அர்பன் டிக்ஷனரி .பாசத்தையும் நெருக்கத்தையும் விளக்கும் சொல் பூக்கி.
 
டிக் டாக் , இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இது பிரபலமான வார்த்தை . ”அவள் / அவன் எனது பூக்கி  கரடி” என்பது வழக்கம் . ஜென் ஸீ தலைமுறையிடம் பிரபலமாக உள்ள சொல் அது. 
 
ஆனால் ஜெர்மனியில் 1960 முதலே குழந்தைகளை அன்போடு அழைக்கும் சொல்லாக இருந்து வருகிறது பூக்கி. . ஒரு காமிக் கதாபாத்திரத்தோடும் இந்த சொல் சம்மந்தப்படுகிறது . 
 
இப்படி இந்தப் படத்துக்கு வைத்திருக்கும் பெயரிலேயே  சபாஷ் போட வைக்கிறார் படத்தை எழுதி இருக்கும் புதிய பரிதி. 
 
பிரேக்கப் ஆன உடன் அடுத்த நாளே அடுத்த ஆளைப் பார்க்கும் ஆட்கள் உண்டு. ஆனால் அந்தக் காலத்தில் காதல் தோல்வியை மறக்க முடியாமல் குடித்து  புகைத்து  தாடி சொறிந்து செத்த கூட்டம் ஒன்று இருந்தது . 
 
ஆனால் இரண்டுக்கும் இடையில் இன்னும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது .  சட்டென்று பிரேக்கப் செய்து விட்டு , பின்னர் மறக்க முடியாமல்  தவிக்கும் ஜோடிகள் . 
 
அவர்களின் கதையைத்தான் இந்தப் படத்தில் சொல்கிறார்கள். 
 
உண்மையாகக் காதலித்து பிரேக்கப்  ஆன நிலையில்  பல்வேறு மன உணர்வுகள் அலைக்கழிக்கும் ஸ்டேஜ்களை கடப்பத , அப்போது ஏற்படும்  வேதனை,  அதை சரி செய்யச்  செய்யும் செயல்களால் நடக்கும்  பொருளாதார இழப்பு , உடல்  மாற்றங்கள் ,  அதனால் குடும்ப உறுப்பினர்களோடு ஏற்படும்  சண்டை , சங்கடம் என்று பிரேக்கப் பில் பிஹெச்டி வாங்கியிருக்கிறார்கள். 
 
காதலையும் பிரேக்கப்பையும் சர்வ சாதாரணமாக பல்வேறு விதங்களில்  டீல் செய்யும் பெண் கதாபாத்திரங்கள்  மூலம் நவீன காதல் உலகை அப்படியே எழுத்தில் கொண்டு வருகிறார்கள் . 
 
காதல் மற்றும் பிரேக்கப் பின் வகைகளை விளக்கும் காட்சிகள் மூலம் …. அடேயப்பா !  இத்தனை விதம் இருக்கிறதா! என்று மலைக்க வைக்கிறார்கள்.
 
இந்தப் படத்தின் பேஸ்மெண்ட்  எழுத்து என்றால்  பில்டிங்   ஃபிலிம் மேக்கிங் . இரண்டுமே ஸ்டராங்கோ ஸ்ட்ராங்.! 
 
மிக அட்டகாசமாக ஒளிப்பதிவு இயக்கம் இரண்டையும் செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கணேஷ் சந்திரா. ஒன்று க்கு ஒன்று சற்றும் சளைக்காமல் இரண்டையும் பிரமாதமாக செய்து வியக்க வைக்கிறார் கணேஷ் சந்திரா . 
 
ஒரு ஒளிப்பதிவாளரே இயக்குனராகவும் இருக்கும்போது என்ன ஒரு லட்டு மாதிரியான   அவுட் போட கிடைக்கும் என்பதை,  பாலு மகேந்திரா , ஜீவா இவர்கள் வரிசையில் இன்றைய கடைக்குட்டியாக நின்று  கமர்ஷியலாக  நிரூபிக்கிறார் கணேஷ் சந்திரா, ஷாட்ஸ்  , ஃபிரேமிங் , ஒளி இருள் பயன்பாடு , வண்ணக் குழைவு என்று ஒவ்வொரு பிரேமும் ஜொலிக்கிறது . இயக்குனர் கணேஷ் சந்திராவுக்கு ரெட் கார்பெட் வெல்கம். 
 
படத்தில் ஒரு   ஸ்டைலான  கேமியோ ரோல் செய்திருப்பதோடு அட்டகாசமான இளமை துள்ளும் பாடல்களால் படத்தை நிரப்பி இருக்கிறார் இசை அமைப்பாளருமான  விஜய் ஆண்டனி. பாடல்களும் இசையும் இந்தப் படத்தின் இன்னொரு பெரும் பலம். 
 
 இசை மட்டுமல்ல…
 
அலையலையாக வரும் சின்னச் சின்ன காட்சிகளை  சும்மா டைமண்ட் கட்டிங் மாதிரி   செதுக்கி இருக்கிறார் படத்தொகுப்பில்.! . இது போன்ற சூழல்களில் சவுண்ட் எடிட்டிங் மிக சிரமம் . அதுவும் அட்சர சுத்தமாக இருக்கிறது . (ஒரு பாடலில் கதாநாயகி  வேறு ஒரு பாடல் வரிக்கு  கொடுத்த உதட்டசைவை இன்னொரு வரிக்கு போட்டு இருப்பது மட்டும் திருஷ்டிப் பரிகாரம். அது பரவாயில்லை..  . சண்டைன்னா ஒண்ணு ரெண்டு தடவை மண்டை உடைய தான் செய்யும்  )
 
மார்கன்  என்ற தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கேரக்டரில் சிறப்பாக நடித்து இருந்த அஜய் திஷான், இந்தப் படத்தின் மூலம் அஜய் ‘தில்’ஷான் ஆகியிருக்கிறார். விதவிதமான சூழல்கள் அதற்கு ஏற்ப நிறைய உணர்வு மாறு பாடுகளைக் காட்ட வேண்டிய கேரக்டர் . அதை உணர்ந்து உற்சாகமாக நடித்துள்ளார் . அவரது குரல் அவரது முகத்துக்கு கச்சிதமாக மேட்ச் ஆகிறது . 
 
”தம் அடி , தண்ணி அடி  நீ என்ன வேண்ணாலும் பண்ணு பூக்கி . உன்மேல் கோபமே வராது கண்ணு ” என்று சொல்ல வைக்கும் முகம் கதாநாயகி தனுஷாவுக்கு. 
 
உயரம், உடல் என்று எல்லா வகையிலும் HANDY யாக இருக்கும் தனுஷா , நடிப்பில்  நுண்ணிய உணர்வுகளை காட்டும் விதத்திலும் சிறப்பாக பங்களிக்கிறார். 
 
நாயகனின் அம்மாவாக நடிக்கும் இந்துமதி மணிகண்டன் கவனிக்க வைக்கிறார் . அஸ்வின் ராமும் அப்படியே . ஆதித்யா கதிர் காலத்துக்கும் மறக்க முடியாத கெட்டப்பை அவருக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.
 
பாண்டியராஜன், விவேக் பிரசன்னா , சுனில், லட்சுமி மஞ்சு, ராதா , ஸ்ரீராம் இவர்களும் ஓகே 
 
பிரகதீஸ்வரன் பன்னீர் செல்வத்தின் கலை இயக்கமும் கவனிக்க வைக்கிறது . 
 
முதல் பாதியில் பெரும்பாலான காட்சிகள்  மாண்டேஜஸ் ஆகவே போவது.. காதலன் காதலிகள்  தவிர வேறு எந்தக் கேரக்டரும் அழுத்தமாக இல்லாமல் சும்மா வந்து போகும் அளவில் மட்டுமே இருப்பது..  ஒரு நிலையில் திரைக்கதையில் சில காட்சிகள் ஜஸ்ட் FILLER  ஆக மட்டுமே இருப்பது…இவற்றை தவிர்த்து இருக்கலாம். 
 
இந்தப் படத்தின் ஒரு ஒற்றைச் சரடு கதையை மீறி படத்தின் நீளம் இருக்கிறது.  ( கம்பராமாயணத்தில் நாற்பதாயிரம்   பாடல் வரிகள் இருக்கிறது.  சிலப்பதிகாரம் மொத்தமே 5730 வரிகள்தான் . வரி கம்மியாக இருப்பதால் சிலப்பதிகாரம் மட்டம் என்று பொருள் இல்லை. உண்மையில் நாற்பதாயிரம் வரிகள் கொண்ட கம்பராமாயணத்தை விடவும்   சிலப்பதிகாரம் உயர்ந்து நிற்க காரணமே அதுதான்)…
 
அதே போல காதல் பிரேக்கப் ஆக, முக்கியக் காரணம் இருதரப்பு நண்பர்களே அல்ல. முழுக்க முழுக்க சோஷியல் மீடியா கலவரவாதிகள்தான்…
 
— என்று ஒரு சிக்ஸர் அடித்து இருந்தால் இன்னும் ரன் ரேட் ஏறி இருக்கும் 
 
இப்படி சில விஷயங்கள் இருந்தாலும்  
 
 ஜென் ஸீ தலைமுறையின்  நாடித் துடிப்பை பிடித்திருக்கிறது பூக்கி. 
    
மொத்தத்தில் POOKIE  … BLISS ! 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *