ரேகை வெப் சீரிஸ் @ விமர்சனம்

கிரைம் நாவல் மன்னன் என்று புகழப்படும் ராஜேஷ்குமார் எழுதிய  நாவலின் அடிப்படையில்,  தினகரன் எழுதி இயக்க சிங்காரவேலன் தயாரிப்பில்  பாலா ஹாசன், பவித்ரா ஜனனி,வினோதினி வைத்தியநாதன், அஞ்சலி ராவ், நடிப்பில் தயாராகி,  நவம்பர் 28 முதல் Zee  தமிழில்  காணக் கிடைக்கும்  வலைத்தொடர்  ரேகை . 
 
 விடுதி குளியல் அறையில் இளைஞன் ஒருவன்  குளித்த நிலையில் செத்துக் கிடக்கிறான். குளியலறை உள்ளே தாழ்ப்பாள் போட்டு இருக்கும் நிலையில் அது தற்கொலை  என்று தெரிகிறது. 

 
ஆனால்  இறந்து கிடப்பவன் வெற்றி என்ற  காவல் துணை ஆய்வாளரால்  (பால  ஹாசன்) ஃ பிரண்ட்ஸ் ஆஃப் போலீசாக ஆக்கப்பட்ட நபர் . அவன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை  என்பது வெற்றியின் உறுதியான நம்பிக்கை.. 
 
குளியல் அறை இரும்புக்  கதவின் உள்புறத்  தாழ்ப்பாளை கதவின் வெளிப்பக்கம் காந்தம் வைத்து,  நகர்த்தி திறந்து உள்ளே போய்  பிளீச்சிங் பவுடரில்  அமிலத்தைக் கொட்டி விஷப் புகை வர வைத்து  அவனை கொன்று இருப்பதை வெற்றி கண்டு பிடிக்கிறார்.
 
இன்னொரு சமயம்,  ட்ரை  சைக்கிளில் ஒருவன் ஒரு மனிதனின் உடலை அறுத்து துண்டு துண்டாக ரத்தம் வழிய வழியக்  கொண்டு போவதையயும்  கண்டு பிடிக்கிறார் . துரத்திப் போகையில் சாலை போடக்  கொதிக்க வைத்து இருக்கும்  கொதிக்கும் தாரில்  விழுந்து  அவன் இறக்கிறான். 
 
அடுத்தடுத்து சில கொலைகள் .
 
கைரேகையை சோதித்தால் நான்கு பேருக்கும் ஒரே கைரேகை .
 
ஒரு மனிதனின் பத்து விரல்களை கைரேகைகளே  ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாது என்னும்போது, நான்கு பேருக்கும்  எப்படி ஒரே மாதிரி காய் ரேகை இருக்கும்?
 
மார்ச்சுவரியில் போஸ்ட்மார்ட்டம்  செய்யும் பெண் மருத்துவர் (வினோதினி) ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர். 
 
வெற்றிக்கும் ஸ்டேஷனில்   உள்ள பெண் காவலருக்கும் (பவித்ரா ஜனனி)  காதல் .  
 
கல்யாண நிச்சயதார்த்த நாளுக்கு முதல் நாள் ராத்திரி,  பெண்  காவலரின் அக்கா கணவன் குடித்துவிட்டு வண்டி ஓட்டி வர,  வாகன பரிசோதனையில் வெற்றி இருக்க,  அந்த அக்கா கணவன் பெண் காவலருக்கு போன் செய்து, வெற்றியிடம் ஒரு வார்த்தை சொல் என்று சொல்ல,  அவளும் வெற்றிக்கு போன் செய்ய, அதற்குள் வெற்றி அந்த அக்கா கணவரை அறைந்து விடுகிறார்.
 
அதனால்  திருமணம் நின்று போகிறது . அவளுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.  அந்த மாப்பிள்ளை   நிச்சயம் முடிந்த உடனே பெண் காவலரிடம் குழைந்து நெளிந்து பழகுவதோடு, ஒரு கணவனுக்கு மனைவி  பணிவிடை செய்வது போல நடந்து கொள்கிறான்.
 
வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட மருந்தை இந்தியாவில் மனிதர்கள் மேல் செலுத்தி ஆராய்ச்சி செய்கிறது ஒரு குழு . அதன் தலைவி ஒருத்தி (அஞ்சலி ராவ்)
 
ஒரு நிலையில்  வெற்றிக்கு வேண்டிய அந்த  ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் நபர் உட்பட கொல்லப்பட்ட அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்ற நிலையில் கை ரேகை மர்மம் என்ன? இறந்தவர்களுக்குள்  என்ன தொடர்பு? கொலைகளை யார் செய்வது என்பதே  இந்த ரேகை  வெப் சீரிஸ். 
 
சுமார் முப்பத்தைந்து வருடத்துக்கு முன்பு ராஜேஷ்குமார் எழுதிய ‘உலகை விலை கேள்’ என்ற கிரைம் நாவலின் கதையை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் வெப் தொடர் இது. 
 
ஆரம்பக்  காட்சிகள் அப்படியே ராஜேஷ்குமார் நாவல் படிப்பது போல இருக்கிறது.  வெட்டுப்பட்ட கை  கால் இவற்றின் டம்மியை   நம்பும் அளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்  கலை  இயக்குனர். 
 
தாரில் குதித்து சாகும்  காட்சி திகீர் . 
 
பால ஹாசன் நல்ல தேர்வு.
 
போஸ்ட் மார்ட்டம் செய்யும் பெண் டாக்டராக சிறப்பாக  நடித்துள்ளார் வினோதினி . 
 
பெண் போலீசாக நடித்திருக்கும் பவித்ரா ஜனனியின் குரல் இனிமையாக இருக்கும். (பிக் பாஸில்  கேட்டது) ஆனால் இதில் அந்த இனிமை இல்லை . வேறு யாரும் பின்னணி கொடுத்தார்களா? எனில் அவரது அந்த இளநீர் குரலுக்கு  என்ன ஆச்சு?
 
விசாரிக்கப் போன இடத்தில்  யாரும் எதிர்பாராமல் வெற்றியும் பெண் காவலரும் தாக்கப்படும் காட்சிகள். கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் சிறப்பு,
 
நிசசயம் செய்யப்பட நபர் பெண் போலீசிடம் குழைவதும் வழிவதும் அதை வைத்து வெற்றியும் பெண் போலீசும் ஒருவரை ஒருவர் கடுப்பு ஏற்றுக் கலாய்க்கும் காட்சிகளும்  ஸோ  நைஸ். உண்மையில்  இந்த சீரிஸின் கிரைம் கதையை விட இந்த கிண்டல் கதை  நல்லா இருக்கு.
 
ஏழு  எபிசோட் கொண்ட இந்த சீரிஸில்  புதுசு புதுசாக கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கின்றன . அடுத்தடுத்த காட்சிகளில் அவர்கள் பெயரை சொல்லி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். யார் என்ன என்று புரியாமல் குழம்பிப் போய் ஒரு நிலையில், ‘ என்னமோ போகட்டும் நாம வெற்றியை மட்டும் பின்தொடர்வோம்’ என்ற நிலைக்கு வர வேண்டி இருக்கிறது  
 
தவிர மூணு காட்சிக்கு ஒரு முறை ” சி சி டி வி  ஃபுட்டேஜ் பாரு… நம்பர் டிரேஸ் பண்ணு . போன் நம்பர் டீடைல் எடு..  ”  என்று வருவது லாஜிக்கப்படி சரி என்றாலும்  சலிப்பை ஏற்படுத்துகிறது. 
 
கொலையாளி யார் என்பதில் இருக்கும்  சஸ்பென்ஸ் காரணத்தில் இல்லை. ராஜேஷ்குமார் 1990 களில் எழுதும்போது அது புதுசாக இருந்திருக்கலாம் . ஆனால்  அதற்கு அப்புறம் பல சினிமாக்கள் வெப்   சீரிஸ்கள்  , டெலிஃ பிலிம்கள் ,  ஷார்ட் ஃபிலிம்களில் மென்னு துப்பப்பட்ட  விஷயம்தான் அது.
 
அந்த ஏரியாவில் கொஞ்சம் சிறப்பாக யோசித்து வேறு காரணம் சொல்லி இருக்கலாம். 
 
சுமாராக ஆரம்பித்து ஒரு நிலையில் டெம்போ ஏறி அப்புறம் சுரத்துக் குறைந்து அப்புறம் ஓகே என்ற நிலையில் முடிகிறது தொடர் . 
 
பார்த்து முடிக்கும்போது பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பார்க்கும்போது  ரொம்பப் பெரிதாக எல்லாம்  போர் அடிக்கவில்லை என்பது இதன் பலம்.
 
ரேகை .. வாகையும்  இல்லை. சோகையும் இல்லை. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *