ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் ஷஷிகாந்த் தயாரிக்க, சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், மனோபாலா,
ஆர். சுந்தர்ராஜன் , சந்தான பாரதி, நிழல்கள் ரவி நடிப்பில் சி எஸ் அமுதன் இயக்கி இருக்கும் படம் தமிழ்ப் படம் – 2.
சில வருடங்களுக்கு முன்பு வந்த தமிழ்ப்படம் என்ற படத்தின் அதே குணாதிசயம் கொண்ட இன்னொருபடம் .
போலீஸ் அதிகாரியான சிவாவின் (சிவா) மனைவியை , பல கெட்டப்களில் வாழும் வில்லன் பீ (சதீஷ் ) கொன்று விட , அவனை சிவா பழிவாங்கும் கதை (?!).
இதை வைத்துக் கொண்டு , எம் ஜி ஆர் உட்பட அத்தனை நடிகர்களையும் பாட்டிலும் காட்சிகளிலும் வாருகிறார்கள் .
(சிவாஜியை மட்டும் தொடவில்லை) ரஜினி , விஷால் , கமல் எல்லாம் மரண பங்கம் .
ஜெயலலிதா சமாதியில் சசிகலா சத்தியம் செய்த விஷயம், ஓ பி எஸ் தியானம் செய்தது எல்லாம் கிண்டலாக வருகிறது .
ஆனால் திமுக விஷயம் மட்டும் படத்தில் எதுவுமே இல்லை ( அரசியல் புரியுது ).
சிவாவின் காலேஜ் நண்பர்களாக இளைஞர்கள் கெட்டப்பில் மனோபாலா, ஆர். சுந்தர்ராஜன் , சந்தான பாரதி,! (யாருக்கோ)
“:நான் ஒருதடவை முடிவு பண்ணிட்டன்னா அப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன் “:
“அப்போ நான் சொல்றதை கேளுங்க ”
– இது விஜய்க்கு .
“விசுவாசம் னா என்ன தெரியுமா ?”
“பல்கேரியாவில் மரத்தை தூக்கி எக்சர்சைஸ் பண்றது இல்ல”
– இது அஜீத்துக்கு . (வசனம் கே. சந்துரு)
எல்லோரையும் ஒரு பாட்டில் ஓட்டும் படம் தனுஷ் சிம்புவுக்கு மட்டும் தனிப்பாட்டே வைத்து இருக்கிறது .
என்னா மண்டைக்கு லவ் பண்ற .. என்னா கொண்டைக்கு , தொண்டைக்கு , கெண்டைக்கு லவ் பண்ற — இது சிம்புவுக்கு .
லவ் பண்ணாத பொண்ணுகளை மிரட்டுறது , ஆசிட் அடிக்கிறதுன்னு , செய்ற உங்களுக்கு , அட்ரா அவள ஒதை டா அவள வெட்ரா அவள என்று சொல்ல என்னடா யோக்யதை இருக்கு ?” – இது தனுஷுக்கு !
இந்த ஏரியா மட்டும் ஒரு பெண்ணின் பார்வையில் கருத்து ரீதியாக அர்த்தமுள்ள பகுதி . சபாஷ் இயக்குனர் சி எஸ் அமுதன்
அது சரி .. கதாநாயகி “அட்றீ அவன .. ஒதைடி அவன … வெட்ரீ அவன …. ” என்றுதானே பாட வேண்டும் ?
என்னா வெண்டைக்கு ”அட்ரா அவன.. ஒதைடா அவன ..வெட்ரா அவன .. ” என்று பாடுகிறாள் .
‘பெண்களுக்கு இதுக்கு எல்லாம் தில் இல்லை; ஆம்பளை ஆள் வச்சுதான் அடிப்பாள் ‘ என்பது இயக்குனரின் எண்ணமா?
இது ஒரு பக்கம் என்றால் இறுதிச் சுற்று படத்தின் கதாநாயகி கேரக்டரையும் ஓட்டுகிறார்கள் . (என்ன உள்நோக்கமோ தெரியலையே )
ஜஸ்ட் லைக் தட் தனக்கே உரிய பாணியில் சிறப்பாக செய்துள்ளார் சிவா .
“நீ … தேடி.. விதைத்த … வினை .. ஒன்று .. ” என்று வில்லன் ‘ அதே’ பாணியில் இழுத்து அர்த்தம் திருத்தமாக சொல்ல ,
ஜஸ்ட் ‘ஒகே’ என்கிறார் சிவா . தியேட்டரே குலுங்குகிறது ! ஹா ஹா ஹா … இது ஒரு சோறு பதம் .
எல்லோரையும் ஓட்டி வசனம் பேசி வாயசைத்து ரொம்ப தில்லாகவும் நடித்து உள்ளார் . மற்ற நடிக நடிகையர் எல்லாம் ஒகே .
ஹெச் பி ஓ , நேஷனல் ஜியாக்ரபி சேனல்கள் சிவாவை தமிழில் பேட்டி எடுப்பது , தபால் டி வி என்ற பெயரில் தந்தி டி வி யை ஓட்டுவது என்று இறங்கி அடிக்கிறார் இயக்குனர் சி எஸ் அமுதன் .
கண்ணனின் இசை மற்ற பாடல்களை ரீமேக் செய்து கிண்டல் அடிக்கும் வேலையை சிறப்பாக செய்கிறது .
கோபி அமர்நாத்தின் கேமரா வெளிநாட்டுக் காட்சிகளில் அசத்துகிறது .
2.ஓ படம் இன்னும் வெளிவராத நிலையில் , அதில் அக்ஷய் குமாரின் கெட்டப்பை ஒரு காட்சியில் வில்லனுக்கு போட்டு சிரிக்க வைத்து விட்டார்கள் .
ஒரிஜினல் வருவதற்கு முன்பே spoof ! உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக !
படத்தின் முதல் பாதியில் எல்லோரையும் வச்சு செய்தவர்கள் , இரண்டாம் பகுதியில் படம் பார்க்கும் ரசிகர்களயும் — பொறுமையை சோதித்து —
வச்சு செய்கிறார்கள் . முதல் பாதியில் கால்வாசி அளவு கூட இரண்டாம் பகுதி ஒர்த் இல்லை .
ஆனால் …
பழைய அரசியல்வாதிகள் – புதிய அரசியல்வாதிகளின் யோக்கியதை தெரிந்து விட்ட நிலையில், ஒரு காலத்தில் யாரை புகழ்ந்தாலும் கைதட்டிய நம்ம ரசிகன் ,
இன்று யாரை ஓட்டினாலும் கைதட்டிக் கொண்டாடும் மன நிலைக்கு வந்து விட்டான் . இந்த மனநிலைதான் இந்தப் படத்தின் ட்ரம்ப் கார்டு .
எனவே படம் ஒரு நிலையில் தன்னை சோதிப்பதையும் மன்னித்து , படத்தை ரசித்து சிரிக்கிறான்
தமிழ்ப்படம் .2 — படம் பாதி ; பப்படம் மீதி !