பி வி எஸ் என் பிரசாத் தயாரிப்பில் பி பாப்பினீடு வழங்க , அசோக் செல்வன், ரித்து வர்மா, நித்யா மேனன், நாசர் நடிப்பில்
அனி ஐ வி சசி (பிரபல இயக்குனர் ஐ வி சசியின் மகன்) எழுதி இயக்கி தெலுங்கில் வெளியாகும் படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவமாகி zee 5 தளத்தில் வெளியாகி இருக்கும் படம் தீனி.
ஹைதராபாத்தில் இருந்து லண்டனுக்கு ஒரு ரெஸ்டாரண்டுக்கு வேலைக்குப் போகும் செஃப் தேவ் (அசோக் செல்வன்) சில மன நல மற்றும் உடல்நலக் குறைபாடுகளுகுச் சொந்தக்காரன் . தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவன்.
அங்கு தாரா என்ற இளம் பெண்ணின் (ரித்து வர்மா) வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் வகையில் பணியமர்த்தப்படுகிறான்.
சமையல் தர நிர்ணய நிபுணராக இருக்கும் ஒருவர் (நாசர்) மிகுந்த திறமை மற்றும் அனுபவம் கொண்ட – ஆனால் இறுக்கமான நபராக இருக்கிறார். எல்லோரும் அவரிடம் மரியாதையோடு கூடிய பயம் கொள்ளும் சூழல் .
ஒரு நிலையில் தனது சமையல் திறமையால் அவரின் அன்புக்குப் பாத்திரமாகிறான் தேவ் .
இந்த நிலையில் ஒரு நாள் பணி முடியும் நேரம் தேவும் தாராவும் ஃபிரீசர் அறையில் சிக்கிக் கொள்கின்றனர். உயிராபத்து ஏற்படும் நிலையில் தன்னையும் காத்துக் கொண்டு அவளையும் காப்பாற்றுகிறான் .
மனம் விட்டுப் பேசும் தாரா, தான் தனது தந்தையை தேடி வந்த கதையை சொல்ல,
தேவ் தன்னோடு மாயா என்பவள் ( நித்யா மேனன்) கூடவே இருப்பதாகவும் “இப்போது கூட ‘உன் வலது பக்கம் அவள் இருக்கிறாள் ” என்று கூற,
தாராவின் கண்ணுக்கு யாரும் தெரியாத நிலையில் அவள் அதிர .. அப்புறம் நடந்தது என்ன என்பதே இந்தப் படம்.
ஹைதராபாத்தில் படமாக்கப்பட்ட தேவ்- மாயா பிளாஷ்பேக் காட்சிகள் தவிர, முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்ட படம் இது .
வித்தியாசமான பின்புலக் கதை கதை . பழகிய ஆனால் நேர்த்தியான திரைக்கதை.
திவாகர் மணியின் அழகான ஒளிப்பதிவில் படத்தில் காட்டப்படும் விதம் விதமான உணவு வகைகள் பார்க்கும்போதே எச்சில் ஊற வைக்கின்றன. அள்ளிக் கட்ட அலையுது மனசு.
பொதுவாக இப்படி செஃப் ஆக இருப்பவர்கள் சாப்பிட்டு சாப்பிட்டே தொந்தியோடு இருப்பார்கள் . ஹீரோவையும் அப்படியேஇருக்க வைக்கும் நேர்த்தியிலேயே சபாஷ் போட வைக்கிறார் இயக்குனர் அனி ஐ வி சசி .
அதற்கு ஏற்ப அசோக் செல்வனும் பெரிய தொப்பையோடு படம் முழுக்க ( பிளாஷ்பேக் காட்சிகள் தவிர ) வருகிறார்.
அட்டகாசமான பிரேம்கள், நடிக நடிகையரிடம் வேலை வாங்கிய விதம் , பக்குவமான இயக்கம், கதை நடக்கும் சூழலை உணர வைத்தல் என்று மிக சிறப்பான இயக்குனராக ஜொலிக்கிறார் அனி ஐ வி சசி . உயரம் தொட உளமார்ந்த வாழ்த்துகள்.
மாயா – தேவ் இருவருக்கும் தூங்குவதன் மூலம் பிணைப்பு வருவதாக சொல்லும் விஷயம் கவிதை .
சமையல் தர நிர்ணய நிபுணர் – தாரா இடையிலான பாசச் சமையலும் அருமை .
ராஜேஷ் முருகேசனின் இசை, காட்சியின் உணர்வுகளுக்கு கனம் சேர்த்து படத்தை முழுதாக உள்வாங்க வைக்கிறது . வாழ்த்துகள்.
தேவ் கேரக்டருக்கு அட்டகாசமாக நியாயம் செய்திருக்கிறார் அசோக் செல்வன்.
சட்டென்று சட்டென்று ஒரு பக்கம் இழுத்துக் கொள்வது, உருவம் இல்லாத யாரோ அடிப்பது உதைப்பது போன்ற விசயங்களுக்கு ரியாக்ட் செய்வது..
இப்படி எல்லாம் நடிப்பது சாதாரண விஷயம் அல்ல. நடிப்பதற்கு மிகவும் கஷ்டமான விஷயம் அது . அட்டகாசமாக ஜெயித்து இருக்கிறார் அசோக் செல்வன் .
அதுவும் சமையல் நிபுணரை தனது சமையலால் தேவ் வீழ்த்தும் அந்த நீளமான ஒற்றை ஷாட்….
அனி கொடுத்திருக்கும் நடிகருக்கான அசைவுகள், நகர்வுகள், அசோக் செல்வனின் சிறப்பான நடிப்பு, காட்சியின் தன்மைக்கேற்ற ஒளிப்பதிவு என்று அது ஒரு முழுமையான தீனி .
அடங்கிய நடிப்பில் ரித்து வர்மா அசத்த , அழகியலான ஆர்ப்பாட்ட நடிப்பில் சிலம்பம் ஆடுகிறார் நித்யா மேனன்.
நாசர் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார். தேவ் செய்யும் டிஷ் சிறப்பாக வந்து விட்ட நிலையில் அதை கஸ்டமருக்கு அனுப்ப– பனியில் உறைந்த பாறைக் குரலில் ‘சர்வீஸ்’ என்கிறாரே….. அபாரம் !
மாயா கேரக்டரின் முடிவும் படத்தின் முடிவும் கண்ணீர்க் கவிதை.
அனி ஐ வி சசியின் சிறப்பான கிரியேட்டிவிட்டி மற்றும் இயக்கத்தில் மனதுக்குள் சிம்மாசனம் போட்டு உட்காருகிறது தீனி .