அன்பிற்கினியாள் @ விமர்சனம்

நடிகர் அருண் பாண்டியன் தயாரிப்பில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியன் நடிப்பில் கோகுல் இயக்கி இருக்கும் படம் அன்பிற்கினியாள். 

எல் ஐ சி ஏஜென்டாக வேலை பார்க்கிற — மனைவியை இழந்த  – சுய சாதி மதப் பற்றுக் கொண்டவரான   நல்ல சிவத்தின் ( அருண் பாண்டியன்) உலகம்…  மிச்சம் உள்ள வாழ்க்கை…  எல்லாமே அவள் மகள் அன்பிற்கினியாள்( கீர்த்தி பாண்டியன்)தான் . 

கனடாவில் நர்சிங் வேலைக்குப் போக வேண்டிய லட்சியத்தில் இன்டர்நேஷனல்  இங்க்லீஷ் கோர்ஸ் படித்துக் கொண்டே , 

மாலில் உள்ள துரித உணவுக் கடையில் பணியாற்றும் அன்பிற்கினியாளுக்கு சார்லஸ் என்ற இளைஞனோடு – இதுவரை அப்பாவுக்குத் தெரியாத – காதல் . 

தவிர மகள் கனடாவுக்குப் போவதிலும் அப்பாவுக்கு விருப்பமில்லை . 

சார்லசுக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைக்க, அவனை சந்தித்து விட்டு,  அவனும் அன்பிற்கினியாளும்  இரு சக்கரவாகனத்தில் திரும்பும் வேளையில் , போலீஸ் நிறுத்தி விசாரிக்க,  

அன்பிற்கினியாளுக்கு தெரியாமல் அவன் ரகசியமாகக் குடித்திருப்பது தெரிய வர, போலீஸ் நல்ல சிவத்தை வரவழைக்க,

 கிறிஸ்தவ இளைஞனோடு மகளுக்கு காதல் என்பதை அறிந்து நல்ல சிவம் அதிர்ந்து ,  மகளிடம் பேசுவதை நிறுத்தி அவளை உடனே கனடாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார் . 

காதலன் ஹைதராபாத் கிளம்ப , துரித உணவுக் கடையில் எதிர்பாராமல்  ஜிலீர் என்ற வகையில் உயிராபத்துக்குப் போகிறாள் ….. சக மனிதர்கள், விலங்குகள், புல், பூண்டு என சகல ஜீவ ராசிகளையும் நேசிக்கும் அன்பிற்கினியாள்! 

போலீசும் சிவமும் மகள் காதலன் கூடப் போய் விட்டதாக எண்ணி அவனை வரவழைத்து பிடித்து அடித்து,  வேறு திசையில் போராட,  சைக்கோ போலீஸ் வேறு தன் வேலையைக் காட்ட , 

அன்பிற்கினியாள் வாழ்வுக்கினியாள் ஆனாளா ? சாவுக்குரியாள் ஆனாளா என்பதே இந்த அன்பிற்கினியாள்.

மலையாளத்தில் வினீத் சீனிவாசன் தயாரிப்பில் அன்னா பென் , லால் நடிப்பில் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019 ஆண்டு வெளியாகி வென்ற,  ‘ஹெலன்’ படத்தை அப்படியே சிந்தாமல் சிதறாமல் அள்ளாமல் கொள்ளாமல் ரீமேக் செய்திருக்கிறது அன்பிற்கினியாள் பார்ட்டி . 

படத்துக்கு அன்பிற்கினியாள் என்ற தெள்ளு தமிழ்ப் பெயரை வைத்ததற்குப் படக் குழுவினருக்கு முதல் பாராட்டுகள் . வாழ்த்துகள் . 

எளிய – இயல்பான –  உதவி மனப்பான்மை கொண்ட – சக மனித நேசம் கொண்ட- குறைகளோடும் மற்றவர்களை ஏற்றுக் கொள்கிற பக்குவமும் பெருந்தன்மையும் கொண்ட – பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றம் கொண்ட , அற்புதமான – அன்பிற்கினியாள் கதாபாத்திரத்தை அனாயாசமாக உள் வாங்கி பிரம்மாதமாக நடித்திருக்கிறார் கீர்த்தி . இனி பெருகட்டும் கீர்த்தி .

இதற்கு முன்பு இவர் நடித்த ஒரு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனது உடல் தோற்றம் தனக்குப் பிடிக்கவில்லை என்று கீர்த்தி அழுதபோது, நான் அந்தப் பெண்ணை செல்லமாகக் கண்டித்தேன். “அழகு என்பது கவர்ச்சி மட்டும் இல்லை . நீ அழகான பெண்தான். நடிப்புத் திறமையை வளர்த்துக் கொள். ஜொலிப்பாய் ” என்றேன்  அப்படியே செய்திருக்கிறார் இந்த அன்பிற்கினியாள் படத்தில்.!

மகிழ்ச்சி . நெகிழ்ச்சி. 

படத்தில் அப்பா கதாபாத்திரத்தில்  கீர்த்தியின் நிஜ அப்பாவான அருண் பாண்டியனே நடித்திருக்கிறார். இணைந்த கைகள் வசனம் கை தட்டலுக்கு உதவுகிறது. 

கோகுலின் இயக்கம் துருத்திக் கொண்டு இருக்காமல் அடி நாதமாக ஜொலிக்கிறது . பண்பட்ட இயக்கம். ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒரு சிறிய அட்டகாசமான கேரக்டரில் நடித்தும் இருக்கிறார் கோகுல். 

ஜிலீர் என்ற அந்த உயிராபத்துக் காட்சிகளில் நம்மையே அங்கே தள்ளுவது போன்ற உணர்வைத் தருகிறது மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு ( உதவி : ஒப்பனையும்  ஜெய் சங்கரின் கலை இயக்கமும்) மற்ற காட்சிகளிலும் உணர்வுகளுக்கு உயிர் தருகிறது ஒளிப்பதிவு .

உணவக மேலாளர் கதாபாத்திரம் சற்றே நகைச்சுவைக்கு உதவும் அதே நேரம் இது போன்ற கடைகளில் பணியாற்றும் பெண்கள் படும் அவமானங்களையும் சொரேர் என்று சொல்கிறது .

புகைப்பிடித்தலுக்கு எதிராக இந்தப் படம் பேசும்  விதம் போற்றுதலுக்கு உரியது . அதற்கும் தரலாம் ஒரு அவார்டு . 

ஜாவீத் ரியாசின்  இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனாலும் பெரிதாகக் குறை இல்லை . 

பிரதீப் ராகவின் படத் தொகுப்பும் நேர்த்தி .

மகளை தினமும் கர்ம சிரத்தையாய் காலையில்  வேலைக்குக் கொண்டு போய் விடும் தந்தை,  அதை விட முக்கியமான  இரவில் தோழியோடு வர விட்டு விடுவது…

மகள் வீட்டுக்கு வராத நிலையில்  இரவு பதினோரு மணிக்கு மேல்  அவள் பல முறை போன் செய்தும் அப்பா எடுக்காமல் இருப்பது …

இதெல்லாம் கேரளாவுக்கு ஒகே . நமக்கு நியாயமா நியாயமாரே? (கோபம்தான் காரணம் என்றால் போலீஸ் ஸ்டேஷனிலேயே விட்டு விட்டு வர வேண்டியதுதானே? . அப்போ மட்டும் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டு,  அப்புறமாக கதவை மூடிக் கொண்டு கோபப் படத் தெரியுது ?) 

தனக்கு ஆபத்து இருக்கும் அந்த நிலையிலும் எளிய சிறு உயிர்கள் மேல் அன்பு செலுத்தும் அன்பிற்கினியாளின் குணாதிசயம் ஒரு தரப்புக்கு யதார்த்தமின்மையாகத்  தெரியலாம் . எனினும் பாதகமில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

படத்தில் இன்னும் சில இடங்களில் லாஜிக்,  லாக் அவுட் ஆகிறது என்பதை மறுப்பதற்கில்லை.  எனினும் அன்பு செய் ; சக மனிதனை மதி என்று படம் சொல்லும் கருத்துக்கு முன்னால் — அதுவும் அந்த நெகிழ்வான வாட்ச் மேன் காட்சி முன்னால்– லாஜிக் மீறல்  எல்லாம் விசயமே இல்லை .

திரைக்கதையில் அன்பிற்கினியாளுக்கு அந்த உயிராபத்துப் பிரச்னை வந்த உடனே அதைக்  காட்டி விட்டு அப்புறம் வெளியே நடக்கும் தேடல் மோதல் போலீஸ் வக்கிரம் இவற்றைக் காட்டி,  இரண்டு சூழல்களையும்  இரண்டையும்  மாற்றி மாற்றிக் காட்டுகிறார்கள். 

இதற்கு பதிலாக …

‘மகள் வீட்டுக்கு வரவில்லை ; காதலனும் இல்லை இருவரும் ஓடிப் போய் விட்டார்கள்’ என்ற உணர்வை படத்தின் கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாது பார்வையாளர்களுக்கும் ஏற்படுத்தி விட்டு, 

அதன் பிறகு  எதிர்பாராத திருப்பமாக அன்பிற்கினியாளுக்கு ஏற்பட்டு இருக்கும் அந்த உயிரபத்துப் பிரச்னையைக் காட்டி எல்லோரையும் அதிர விட்டு , 

அப்புறம் பர பர வென படத்தை நகர்த்தி இருந்தால் , படம் இன்னும் தெறிக்க விட்டிருக்கும் . 

ஆனாலும் என்ன .. 

அன்பிற்கினியாள் …. பார்ப்பதற்கினியாள்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *