தோழா @ விமர்சனம்

Thozha Movie Stills

பிவிபி சினிமாஸ் சார்பில் பரம் வி போட்லூரி தயாரிக்க , நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா, பிரகாஷ் ராஜ்  நடிப்பில்,  

தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் வம்சி படிபள்ளி, இயக்கி இருக்கும்  படத்தின் தமிழ் வடிவம்  தோழா . எப்படி இருக்கிறான் தோழா ? பார்க்கலாம் . 

விண்ணைத்  தொடும் அளவுக்கு பணத்தை அடுக்கி வைத்திருந்தும் வாழ்வில் இனி எதுவுமே இல்லை என்ற நிலையில் , ஒரு குளிர்சாதனப் பெட்டி காய்கறி போய் வாழ்ந்து வரும் ஒருவர் (நாகர்ஜுனா) .
ஒரு விபத்தில் அடி பட்டு,  கழுத்துக் கீழ் உடலின் எந்த பாகமும் சிறு துளி கூட தானாக இயங்காத அளவுக்கு ஒரு சக்கர நாற்காலியில் முடங்கிப் போனவர் .
 
பணம் இல்லாத காரணத்தால் பல தவறுகளை செய்து அம்மா தங்கை தம்பியின் அன்பையும்  இழந்து ஜெயிலுக்குப் போய் பரோலில் வரும் ஓர் இளைஞன் (கார்த்தி ).
 
thola 2
பரோலில் இருக்கும் காலத்தில் ஒழுக்கமாக நடந்து கொண்டால் தண்டனை குறைய வாய்ப்பு உண்டு என்பதால்,
 அந்த இளைஞனை ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் பணியாற்ற வைக்க முயல்கிறார் அவரது வக்கீல் நண்பர் (விவேக்). 
 
அது ஒத்து வராத நிலையில் வீல் சேர் நாயகனை பரமாரிக்கும் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு போகிறார் பரோல் கைதி .  அங்கே வந்திருக்கும் மற்ற எல்லோரையும் விட ,
இந்தக் கைதியை பிடித்துப் போகிறது வீல் சேர் நாயகனுக்கு . ! அவரது அலுவலக உதவியாளர் பெண் ஒருத்தி (தமன்னா) 
 
பலரின் விருப்பத்துக்கும் அப்பாற்பட்டு ஜெயில் கைதியே அந்தப் பணியை ஏற்கிறான் . 
வீல் சேர் நாயகன் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஜெயில் கைதியின் எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முடியும் . ஆனால் அவரது மனதில் உள்ள வேதனையை — அந்த மனிதரின் இழந்த  வாழ்க்கையை ,
thola 6
ஜெயில் கைதியால் மீட்டெடுக்க முடிந்ததா ?
– என்பதே , இந்த தோழா !
The Intouchables என்ற பிரெஞ்சுப் படத்தை அனுமதி பெற்று வாங்கி,  அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் தெலுங்குக்கு ஏற்ப தழுவல் திரைக்கதையை அமைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.
தோழர்களாக நாகர்ஜுனாவும் கார்த்தியும்  இணைந்து இயைந்து பிணைந்து மிக அற்புதமாக நடித்து இருக்கிறார்கள் . படம் முழுக்க இருவருக்கும் இடையில் துள்ளிக் குதிக்கும் நட்பு கெமிஸ்ட்ரி….!  
அதுதான் படத்தின் ஆணிவேர் . சும்மா சொல்லக் கூடாது அந்த ஆணி வேர் ரொம்பவே ஸ்ட்ராங் . 
இந்த கெமிஸ்ட்ரியின் பிரகாசத்துக்கு  ஈடு கொடுக்க முடியாமல் படம் முழுக்க வரும் தமன்னா , கெஸ்ட் ரோலில் வரும் அனுஷ்கா, வந்து போகும் ஸ்ரேயா எல்லோருமே,
மேடையில் இருந்தும் கைதட்ட வேண்டிய நிலைக்கு மட்டும் போய் விடுகிறார்கள் .
thola 5
கழுத்துக்கு கீழ் எந்த அசைவையும் செய்ய முடியாத கேரக்டரில் அட்டகாசமான சதிராட்டம் ஆடி இருக்கிறார் நாகர்ஜுனா . கேரக்டருக்கு ஏற்ப முகத்தையே நடிப்பால் மாற்றி ரசாவாதம் செய்து இருக்கிறார் .
அவருக்கு ஒரு துளிகூட  குறையாமல் சில சமயம் அவரையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு தனது கேரக்டரை சுவைத்து நடித்து இருக்கிறார் கார்த்தி .
எதையுமே ஜாலியாக யதார்த்தமாக எடுத்துக் கொண்டு மனசில் உள்ளதை அப்படியே பேசும் கேரக்டரில் மனிதர் கோட்டை கட்டி விட்டார் .
 தமன்னா  வழக்கமான நடை உடை நடிப்பு .அத விடுங்கப்பு .. அழகு நாளுக்கு நாள் ஏறோ ஏறுன்னு ஏறுதே ! ஜில் தட்டுதுப்பா!
நாகர்ஜனாவின் நண்பன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ் ராஜ்  மிடுக்கு .
 
thola
கதை என்று பார்த்தால் மிக சாதரணமான ஒன்றுதான் . (இதற்காக பிரான்ஸ்வரை போகத் தேவை கூட இல்லை ) . ஆனால் நம்ம ரசிகர்களுக்கு ஏற்ப மிக சிறப்பாக திரைக்கதை அமைத்து,  
கவிதை போல படத்தை இயக்கி இருக்கிறார் வம்சி . 
 
இது போன்ற கதைகளின்  திரைக்கதையில் வழக்கமான வர வாய்ப்புள்ள பல விசயங்களை (உதாரணமாக கைதி மீது பணத் திருட்டுக் குற்றச்சாட்டு,
தனது பெண் உதவியாளர் மீதான கைதியின் காதலை பார்த்து பணக்காரருக்குப் பொறாமை… இத்யாதி இத்யாதி ….) தவிர்த்து விட்டு,  
மிக இயல்பாக,  இறகு போல திரைக்கதை அமைத்து இருப்பதுதான் படத்தின் பெரும்பலம் . சபாஷ் .
பாரிசின் ஐஃபில்  டவரை நிமிர்ந்து பார்க்க முடியாமல் நாகர்ஜுனா மனம் உடையும் காட்சியும் , அதை கார்த்தி பார்க்க வைக்கும் காட்சியும் டைரக்டோரியல் கோல்டன் டச்!  படமாக்கலிலும் மிக சிறப்பு .
 
thola1
பி எஸ் வினோத்தின் ஒளிப்பதிவு  சென்னை சேரி முதல் பாரிஸ் நகரத்தின் பாரிய அழகுவரை அத்தனையையும் அழகாகக் கட்டிக் காட்டி கண்களை விரியவைக்கிறது .
 
உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் படங்களான ட்ராய், மிஷன் இம்பாஸ்சிபிள் போன்ற படங்களுக்குப் பணிபுரிந்த புகழ் பெற்ற சண்டை இயக்குனர்  Kaloian vodenicharov  பெல்கிரேட் நகரில் படமாக்கி இருக்கும்,
 அந்த அதி அட்டகாசமான கார் சேசிங் காட்சியில்  மேலும்  ஜொலிக்கிறார் ஒளிப்பதிவாளர் .
இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் கூட கோபி சுந்தரின் இசையும்  சிறப்பே . 
படத்தின் மிகப் பெரிய பலம் குக்கூ இயக்குனர் ராஜு முருகனும் , திரைக்கதை வசனகர்த்தா முருகேஷ் பாபுவும் இணைந்து எழுதி இருக்கும் வசனங்கள் ..
“நீ சத்தியவான் மாதிரி நடந்துக்கணும் “
“அப்டீன்னா ? தமிழ்ல சொல்லுங்க “
— என்பது போன்ற குறும்புகள் ஆகட்டும் ..
thola 3
“அஞ்சு நிமிஷத்துல எல்லாமே ஜஸ்ட் ஞாபகமா ஆகிடுச்சு ” என்று,   சில வார்த்தைகளில் பெரும் விசயங்களை சொல்வதாகட்டும் …
”மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு வராது” என்று சொல்லி மானசீகக் கைதட்டல் வாங்கிக் கொண்டு .. சில காட்சிகளுக்குப் பிறகு ”மனுஷன் போற இடத்துக்கெல்லாம் மனசு வரணும் .
இல்லன்னா அப்புறம் என்ன மனுஷன் ? என்ன மனசு ? ” 
– என்று தோசையைத் திருப்பிப் போட்டு மறுபடியும் கைதட்டல் வாங்குவதாகட்டும் .. ஒரே நேரத்தில் காமெடி கருத்து என்று ரெண்டு ஏரியாவிலும் சிலம்பம் ஆடி இருக்கிறார்கள்  இருவரும் .
அதுவும் மாடர்ன் ஆர்ட் ரசனைக்குப் பின்னால் உள்ள சில கோமாளிக் கூத்துகள்  இவர்களது வசன வாகனம் ஏறி வரும்போது வெடிச் சிரிப்பில் தியேட்டர் கிழிகிறது . 
இன்டர்வியூ காட்சி,  கார்த்தியை நாகார்ஜுனா வேலைக்கு எடுக்கும் காட்சி போல உள்ளதே தவிர , ஒரு கைதியை சுயமாக செயல்பட முடியாத ஒருவர்  வேலைக்கு எடுப்பது போல இல்லை .
thola 4
இது போன்ற காட்சிகளில் இன்னும் கொஞ்சம் லாஜிக் என்கிற காரண காரியம்  பார்த்து இருக்கலாம் . 
இன்னும் கொஞ்சம் தீவிரமாக இறங்கினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிற பல ஏரியாக்கள் படத்தில் இருக்கின்றன .  ஆனால் கடற்கரைக்குப் போய் பெட் பாட்டிலில் தண்ணீர் பிடித்துகே கொண்டு,  
ரோட்டுக்கு வந்து தலையில் தெளித்துக் கொள்வது போல,  அந்த காட்சிகள் ஒரு ஓரமாக  விலகி விடுகின்றன . 
எனவே படத்தில் ஃபீல் குட் உணர்வு வந்த அளவுக்கு சென்சேஷன் ஏரியா ஸ்கோர் ஆகவில்லை . ஆனால் அந்த ஃபீல் குட் உணர்வே இந்தப் படத்துக்குப் போதுமானதாக இருக்கிறது .
தோழா .. சந்தோஷமாக தோள் கொடுக்கலாம் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →