டி கம்பெனி சார்பில் கே வி துரை தயாரிக்க, சார்லி, காயத்ரி, லிங்கா , விவேக் பிரசன்னா , அபர்னதி, தீனா நடிப்பில் கார்த்திக் சீனிவாசன் இயக்கத்தில் ஆஹா தமிழ் தளத்தில் டிசம்பர் 30, 2022 முதல் காணக் கிடைக்கும் படம்.
மனைவியை இழந்த குடும்பத் தலைவர் ஒருவருக்கு ( சார்லி) இரண்டு மகன்கள் ( லிங்கா, தீனா) மற்றும் ஒரு மகள் (காயத்ரி) மருமகள் (அபர்னதி) மருமகன் (விவேக் பிரசன்னா) ஒரு மகள் வழிப் பேத்தி, ஒரு மகள் வழிப் பேரன். தலைவரின் அக்கா ( தனம்) ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் அவரது மகள்தான் குடும்பத் தலைவரின் மருமகள்
குடும்பத் தலைவருக்குச் சொந்தமான எளிய வீடு ஒன்று இருக்கிறது . அதில்தான் குடும்பத் தலைவர் , அவரது மூத்தமகன், மருமகள், பேரன், அக்கா ஆகியோர் வசிக்கிறார்கள்
வறுமை காரணமாக அந்த வீட்டை விற்று அந்தப் பணத்தில் தொழில் செய்யப் பயன்படுத்திக் கொண்டு வாடகை வீட்டுக்குப் போய்விடலாம் என்பது மூத்த மகனின் விருப்பம் . அதில் தனக்கும் பணம் கிடைக்கும் என்பதால் வெளியூரில் இருந்து கணவன் மற்றும் பெண் பிள்ளையோடு வந்திருக்கும் மகளும் சம்மதிக்கிறாள் .
ஆனால் ‘வீட்டை விற்று விட்டால் பிறகு சொத்து என்று எதுவும் இருக்காது ; பிள்ளைகளுக்கும் அது பின்னாளில் கஷ்டமாகிவிடும்’ என்று எண்ணும் குடும்பத் தலைவர் மறுக்கிறார் . சரி அப்பாவை எப்படியாவது சம்மதிக்க வைத்து விடலாம் என்று எண்ணி, வீடு விற்பனையானால் என்ன தொகை கிடைக்கும் என்று நண்பன் மூலம் மூத்த மகன் விசாரிக்க,
அப்போதுதான் வீட்டின் அளவை விட பத்திரத்தில் 300 சதுர அடி குறைவாகப் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. அதை எல்லாம் சரி செய்து விற்க எட்டு மாதங்களுக்கு மேல் ஆகும் ; நினைக்கும் விலைக்கும் போகாது என்ற நிலையில் பிள்ளைகளின் திட்டம் குலைகிறது .
இந்த நிலையில் குடும்பத் தலைவர் வழக்கமாக தான் பணி புரியும் வள்ளலார் காம்ப்ளெக்ஸ் என்ற அடுக்கு மாடிக் கட்டிடத்துக்குப் போக , மிகப் பழமையான அந்தக் கட்டிடம் இடிந்து விழுகிறது . உள்ளே பல பேர் சிக்கி இறந்த செய்தி வர ,குடும்பத் தலைவரும் அதில் இறந்து இருப்பார் என்று எண்ணுகிறது குடும்பம் .
அடுத்த சில நிமிடங்களில் விபத்தில் இறந்தவர்களுக்கு இருபது லட்ச ரூபாயும் காயமுற்றவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும் நிவாரணத் தொகையாக அரசு அறிவிக்கிறது .
ஒருவேளை அப்பா இறந்து போனால் வரும் இருபது லட்ச ரூபாயை எப்படி பிரித்துக் கொள்வது என்று பிள்ளைகள் சண்டை போட்டு சமாதானத்துக்கு வர , ஒரு திருப்பம் … எஸ் அதேதான் ! குடும்பத்தலைவர் துளி கீறல் கூட இல்லாமல் வீட்டுக்கு வருகிறார் .
பிள்ளைகள் சந்தோஷமும் ஏமாற்றமும் கலந்த உணர்வில் சிக்க ,அங்கே மீண்டும் ஒரு திருப்பம் . எஸ் அதே அதேதான் . அப்பா நிஜமாகவே செத்துப் போகிறார் .
வீட்டில் செத்துப் போனகுடும்பத் தலைவரின் உடலை இடிந்த கட்டிடத்துக்குள் ரகசியமாகக் (?) கொண்டு போய் போட்டு அவர் இறந்து விட்டதாகக் காட்டி இருபது லட்ச ரூபாய் நிவாரணத் தொகை பெற மகன்கள், மகள், மருமகன், மருமகள் எல்லோரும் முயல நடந்தது என்ன என்பதே இந்தப் படம் .
படத்தின் பலம் காட்சிகளின் எளிமை . ஒரே வீட்டுக்குள் பெரும்பாலான காட்சிகள் நடக்கும் அதே நேரம் அந்த வீட்டை வடிவமைத்த விதம் யதார்த்த உணர்வைத் தோற்றுவிக்கிறது .
இயக்குனர் கார்த்திக் சீனிவாசன், ஒளிப்பதிவாளர் மதன் கிறிஸ்டோபர் , மற்றும் கலை இயக்குனர் எம் எஸ் பி மாதவன் மூவருக்கும் அந்த விசயத்துக்குப் பாராட்டுகள் . தாத்தாவிடம் அன்பு காட்டும் பேரன் , பேரனிடம் அன்பு காட்டும் (அத்தை மகளான ) சிறுமி மற்றும் அவை தொடர்பான எல்லாக் காட்சிகளும் அருமை சபாஷ்
வழக்கம் போல சிறப்பாக நடித்துள்ளார் சார்லி . அடுத்தபடியாக மற்ற எல்லோரையும் விட இயல்பான எளிமையான சிறப்பான நடிப்பால் உள்ளம் கொள்ளை கொள்கிறார் அபர்னதி. காயத்ரி, லிங்கா, விவேக் பிரசன்னா , தீனா எல்லோரும் நன்றாக பேசி இருக்கிறார்கள்.
நல்ல நடிகர் மயில்சாமியை வீணடித்து இருக்கிறார்கள் .
வசனம் கொட்டிய படம் என்பதால் இசை அமைப்பளர் சக்தி பாலாஜிக்கு பெரிதாக வாய்ப்பில்லை .
சில காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கின்றன .
புதிய கதை இல்லை என்றாலும் அவ்வளவு மோசமான கதை இல்லை .
ஆனால் கொஞ்சம் கூட ஆழமும் அக்கறையும் இல்லாத திரைக்கதை. அதுவும் குடும்பத்தலைவர் இறந்த பிறகு, இந்தப் படம் மிக அட்டகாசமாக இருந்திருக்க வேண்டும் . ஆனால் அதன் பின்னர்தான் ரொம்பவும் சோதிக்கிறார்கள்.
ஒரு சீரியஸ் பிரச்னையை எடுத்துக் கொண்டு கொஞ்சம் கூட லாஜிக் இல்லாத காட்சிகளால் தவறான முடிவை நோக்கி படம் போய்விடுகிறது .
மரணம் அடைந்த நபருக்கான இறுதிச் சடங்குகளின் போது, உறவுகள் எல்லாம் சவத்தின் வாயில் ஊற்றும் பாலுக்கு உடன் பால் என்று பெயர் . மூணு பிள்ளைகள் இருந்தும் அவர்களின் சுயநலத்தால் உடன்பால் தெளிக்கக் கூட ஆள் இல்லாமல் அனாதைப் பிணமாகக் கிடக்கிறார் குடும்பத் தலைவர் என்று படத்தை முடிக்கிறார்கள் .
அதற்கு எதற்கு இப்படி ஒரு திரைக்கதைப் போக்கு? பிள்ளைகளின் குணம் அறிந்தும் அவர்கள் நன்மைக்காக குடும்பத்தலைவர் போராடினர் . ஆனாலும் அதில் தோற்றார் என்றால்தானே இது பொருத்தமான கிளைமாக்ஸ்?ஆனால் அது வரைக்குமான கதைப் போக்கு அப்படி இல்லையே ?
உண்மையில் இந்தப் படத்துக்குள் ஒரு நல்ல திரைக்கதை இருக்கிறது . அதை சொல்லக் கூடாது என்று சத்தியம் செய்து விட்டுப் படம் எடுக்கப் போயிருக்கிறார்கள்.
அது என்ன நல்ல திரைக்கதை ? அதையும் பார்ப்போம் .
அப்பா செத்திருப்பார் என்று பிள்ளைகள் நினைத்திருக்க உயிருடன் வருகிறார் குடும்பத் தலைவர். வந்தவரிடம் பேரனும் பேத்தியும் ” நீ செத்துப் போயிருப்ப ன்னு நினைச்சு வீட்டில் எல்லாரும் நஷ்ட ஈட்டுப் பணத்தை எப்படிப் பிரித்துக் கொள்வது என்று சண்டை போட்டுக் கொண்டார்கள் ” என்று சொல்ல , மனம் உடைந்த குடும்பத் தலைவர் நிஜமாகவே இறந்து விடுகிறார் . பேரனும் பேத்தியும் தாத்தாவிடம் பேசியது பிள்ளைகளுக்குத் தெரியவில்லை.
அப்புறம் இப்போது படத்தில் வருவது போல இறந்தவர்களை சுமந்து செல்லும் ஆம்புலன்சில் அப்பாவின் பிணத்தை வைத்து விட , அந்தப் பிணமும் நிவாரண லிஸ்டில் சேர்கிறது .
ஆனால் பிணத்தின் உடம்பில் சிறு காயமும் இல்லாமல் இருப்பது, மற்றும் கட்டிடம் இடிந்த பிறகு வீட்டுக்கு வந்த குடும்பத்தலைவரை பார்த்ததாக ஞாபக மறதி அக்கா சொல்வது என்று பிரச்னை வர ,
அதையும் மீறி மகன்களும் மகளும் நிவாரணத் தொகைக்காகப் போராட , ஒரு நல்ல அதிகாரி ” பாத்தா நல்ல பிள்ளைகள் போல் இருக்காங்க . இவங்க ஏன் போய் சொல்லப் போறாங்க?” என்று பிள்ளைகள் முன்பே கூற,
இந்தப் பிள்ளைகளின் நிவாரணத் தொகை கேட்கும் விஷயம் வைரல் ஆக,
அதைப் பார்க்கும் ஆளும் அரசின் அமைச்சர் , ” நிவாரணம் தரலன்னா இதை எதிர்க்கட்சிகள் பெருசா பேசுவாங்க. நமக்கு கெட்ட பெயர் . உண்மையோ பொய்யோ .. இருவது லட்சம்தானே . போனா போவுது கொடுத்துடுங்க ” என்று சொல்ல , பணமும் கொடுக்கப்படவேண்டும் .
பணம் வந்து சந்தோஷமாக பிள்ளைகள் பிரித்துக் கொண்டு இருக்கும் போது, பேரன் தாத்தாவிடம் பேசியதும் அதனாலேயே அப்பா இறந்ததும் பிள்ளைகளுக்குத் தெரிய வர, நொறுங்கிப் போன அவர்கள் அடுத்து என்ன செய்தனர்?
“நீ உன் அப்பாவைப் பார்த்துக்கிற மாதிரி நான் உன்னை கடைசி காலத்தில் பார்த்துக் கொள்வேன் ” என்று படத்தின் ஆரம்பத்தில் பேசும் மூத்த மகனின் மகன் , இப்போது தன் அப்பாவிடம் என்ன பேசினான்?
அந்தப் பணத்தை பிள்ளைகள் என்ன செய்தனர் என்று இந்தப் படம் பேசி இருந்தால், ஓ டி டி தளத்தில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்ற தகுதியை இந்தப் படம் அடைந்து இருக்கும் .
இப்போது இந்தப் படத்தை வீட்டில் குடும்பத்தோடு பார்த்தால் , எதாவது வீட்டில் நாமும் இப்படி முயற்சி செய்யலாமா என்று யாராவது யோசித்து விடுவார்களோ என்றுதான் தோன்றுகிறது
டிவி சீரியல்களில் யார் குடும்பத்தை எப்படி கெடுக்கலாம் என்று பல பெண் கதாபாத்திரங்கள் திட்டமிடுவது போலக் காட்டி அதன் மூலம் நிஜக் குடும்பங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு கூறப்படுகிறதே அந்த இடத்துக்கு திரிந்து போய்விட்டது உடன்பால் .
