அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரிப்பில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி , சஞ்சிதா ஷெட்டி, முனீஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் ஸ்ரீவத்சன் எழுதிய நாடகத்தின் கதைக்கு , சமுத்திரக்கனி திரைக்கதை வசனம் எழுதி இயக்கி நடித்து zee 5 தளத்தில் காணக் கிடைக்கும் படம் விநோதய சித்தம் . வினோதமான புத்தி என்பது பொருள் .
நாம் இல்லாவிட்டால் உலகமே இயங்காது என்பது பலரின் எண்ணம். ஆணவக்காரர்கள் மட்டுமல்ல பொறுப்புணர்வு அதிகம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம் உண்டு . ஆனால் உண்மை அதுவல்ல . நமது கடமைகளை பொறுப்புகளை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும்தான் . ஆனால் அந்த எண்ணத்தை அதீத தீவி ரத்தன்மைக்கு ஆளாக்கி நம் அன்புக்குரியவர்களையும் கஷ்டப்படுத்தி நம்மை பதட்டத்திலேயே வைத்துக் கொள்வதில் இல்லை வாழ்க்கை .
யார் இல்லாவிட்டாலும் உலகம் இயங்கும். நாம் இ ல்லாவிட்டாலும் நாம் நேசிக்கும் மனிதர்களும் இயங்குவார்கள் என்பதை சொல்ல வந்திருக்கும் அருமருந்துப் படம் இது .
மகள்கள் மகன் ஆகியோரை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் ; மனைவியை நன்றாக வைத்துக் கொள்ளவேண்டும்,; நாம் இல்லாவிட்டால் நமது கம்பெனி என்ன ஆகும்? நமது முதலாளி என்ன ஆவார்? என்று எண்ணுகிற ஒரு மனிதரை ( தம்பி ராமையா) மேற்கொண்டு தொண்ணூறு நாட்கள் மட்டுமே வாழ, காலக்கணக்கண் (சமுத்திரக்கனி) அனுமதிக்கிறார்.
எல்லாரும் எல்லாமும் தனது விருப்பப்படி நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டு ”ஐயோ தொண்ணூறு நாட்கள் போதாது. என் மனைவி, பிள்ளைகளுக்கு ஒன்றுமே தெரியாது. நான்தான் இருந்து எல்லாமும் செய்ய வேண்டும் ” என்று பதறும் அவருக்கு, உறவுகளின் செயல்பாடுகளால் ஏற்படும் விரக்தி, கோபம் , பதட்டம் , வியப்பு, அதிர்சசி, நெகிழ்ச்சி , மகிழ்ச்சி, குற்றஉணர்சசி, திருப்தி, திவ்யம் ஆகியவையே இந்த அற்புதப்படம் .
யார் இல்லாவிட்டாலும் யாரும் வாழ்வார்கள். அதனால் கடமைகளை ஒழுங்காகச் செய்யுங்கள் .பொறுப்புகளை நிறைவேற்றுங்கள் .ஆனால் அவற்றை நினைத்த நேரத்தில் நினைத்தபடிதான் செய்ய வேண்டும் என்ற பதட்டத்த்தில் செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போய் விடுகிற நிலையை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் அல்லது நோக்கத்துக்கு மாறாக தவறாக செய்து விடாதீர்கள் என்று சொல்லும் படம் இது .
நல்ல மனமும் அக்கறையும் பொறுப்புணர்வும் உள்ளதால் ஏற்படும் பதட்டம் காரணமாக கவனம் சிதறும் ஒவ்வொரு மனிதனும் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது .
தத்துவார்த்தமான கதை .
ஆனால் அதனால் சுவாரஸ்யம் கொஞ்சமும் சுணங்கி விடாத அளவுக்கு அப்படி ஒரு பரபரப்பான விறுவிறுப்பான கனமான அழுத்தமான ஆழமான திரைக்கதை அமைத்து
ஒரே நேரத்தில் இதயம் மூளை இரண்டையும் ஈர்க்கும் வசனங்கள் எழுதி …
இவ்வளவு இருக்கே போதுமப்பா என்று விட்டு விடாமல் , மிகச் சிறப்பான தொழில் நுட்ப நேர்த்தியோடு படத்தை இயக்கி ,
காலக் கணக்கன் என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஓர் அர்த்தம் செறிந்த புன்னகையோடு மேட்டிமைத்த தன்மையோடு நடித்து, தன் திரையுலக வளர்சசியில் மேலும் ஒரு சிகரம் தொட்டு இருக்கிறார் சமுத்திரக்கனி .
திகில், திரில் , பேய், பிரம்மாண்டம் , ஆக்ஷன் , எம் ஜி ஆர் , ரஜினி படங்களை பார்க்கும்போது கூட அதிக பட்சம் ஒன்னேகால் மணி நேரம் ஆகி விட்டால் எப்படா இண்டர்வல் விடுவாங்க . அல்லது ஓடிடி யில் பார்க்கும்போது நாமே ஒரு பிரேக் விடலாம் என்று தோன்றுவது இயல்பு . அப்படி நாம் பழகி விட்டோம் . ஆனால் இந்தப் படத்தில் படம் முடியும் வரை அந்த உணர்வே வராது . அப்படி ஒரு திரைக்கதை மற்றும் படமாக்கல் .
படம் முழுக்க அற்புதமான வசனங்கள் . ஆனால் உதாரணத்துக்கு என்று ஒன்றை போகிற போக்கில் சொல்ல முடியாது . ஏனென்றால் கதைத் தொடர்பு மற்றும் காட்சியோடு பார்த்தால்தான் அந்த வசனத்தின் சிறப்பே விளங்கும்.
அதே நேரம் இப்படிப்பட்ட ஒரு படத்தில், நெடுஞ்சாலையில் கோயம்புத்தூர் செல்லும் வழி என்ற போர்டை காட்டி அதற்கு மேல் வானில் பறக்கும் விமானத்தைக் காட்டி அந்த விமானம் கோயம்புத்தூர் போகிறது என்று உணர்த்துவது உட்பட ரசனையான டைரக்ட்டோரியல் டச் களும் உண்டு .அருமை.
நடைப்பயிற்சியில் எட்டு போடும் காட்சிகளை படமாக்கிய விதம் , கோணங்கள் , படம் துவங்கும் அதே எட்டில் படத்தின் கடைசி காட்சிகள், திரைக்கதையும் எட்டு போடுவது போல , தம்பி ராமையா கதாபாத்திரத்தின் கடந்த கால குற்ற பிளாஷ்பேக் காட்சிகள்.. அடடா ! இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இருந்திருந்தால் சிஷ்யனுக்கு சிலிர்ப்பான உச்சி முகர்தல் கிடைத்து இருக்கும்
சில படங்களின் சில கதாபாத்திரங்களை பற்றி குறிப்பிடும் போ து அதில் சிறப்பாக நடித்த நடிகரின் பெயரைக் குறிப்பிட்டு அவரைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியாது என்று கூறுகிறோம் .
அந்த வகையில் இந்தப் படத்தின் கதாநாயகனாக, தம்பி ராமையாவைத் தவிர யாரையும் யோசிக்கக்கூட முடியவில்லை .
மிகக் உணர்வுப் பரிணாமப் பரிமாணங்கள் கொண்ட அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி தனக்குள் இருந்து வெளிப்படுத்தி, பிரமிப்பூட்டும்படி நடித்து அசத்தி இருக்கிறார் .
அடுத்தடுத்து வரும் அட்டகாசமான திரைக்கதைத் திருப்பங்கள் , செறிவான காட்சிகளை கம்பீரமாகத் தூக்கிச் சுமந்து இருக்கிறார் . விதம் விதமான கம்பீர முகபாவனைகள், உடல் மொழிகள் , குரல் நடிப்பு என்று வீடுகட்டி விளையாடுகிறார் .
எத்தனை வித நடைகள் ! மேனேஜிங் டைரக்டராக ஆனதும் நடக்கும் கம்பீர நடைக்கும் , கடைசியில் காலக் கணக்கனிடம் ஒரு மழலை போல தாவிச் சென்று சரணாகதி ஆகும் ஓட்டத்துக்கு எத்தனை வித்தியாசம்!
ராயல் சல்யூட் தம்பி ராமையா . !
இருவருக்கும் இந்தப் படத்துக்காக விருதுகள் விலாசம் தேடி வரவேண்டும் .
உணர்வுகளை பேசும் படங்களுக்கு இசை என்பது அவ்வளவு முக்கியம் . நிர்வாண மனிதனுக்கு கட்டும் ஆடை போல அது . ஒரு பேரரசனுக்கு மிகச் சிறந்த ராஜ உடை . அணிவிப்பது போல இந்தப் படத்துக்கு பின்னணி இசை ஆடை நெய்திருக்கிறார் சி. சத்யா . படத்தின் பெரும் பலங்களுள் ஒன்றாகப் பாய்ந்து பரவி விரவி தாவி மேவுகிறது சி சத்யாவின் இசை .
கதைச் சூழல் , காடசியின் நோக்கம் , இவற்றுக்கு ஏற்றாற்போல களமாடி ஒவ்வொரு காடசியிலும் கிடைக்க வேண்டிய உணர்வுக்கு ஏற்ற ஒத்திசைவான ஒளிப்பதிவை கொடுத்து சிறந்திருக்கிறார் ஏகாம்பரம் .
வீட்டை வீட்டுக் கிளம்பும் நாயகனிடம் மகள் ”ஆறு மணிக்கு வந்திடுவீங்க இல்லியா?” என்று கேட்பது, அடிக்கடி சீட் பெல்ட் போடச் சொல்லும் வசனங்கள் அடுத்து நடைபெறப் போகும் நிகழ்வை உணர்த்தி விடுகின்றன. அங்கே கொஞ்சம் இன்னும் ஷார்ப்பாக இருந்திருந்தால் அடுத்த நிகழ்வு எதிர்பாராத பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கும் . மற்றபடி படத் தொகுப்பும் சிறப்பு .
ஒரு சில காட்சிகளில் மட்டும் வரும் தயாரிப்பாளர் ஞானவேல் உட்பட படத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளனர் . அருமை
தேசிய அளவில் சமூக நீதி, இட ஒதுக்கீடு இதற்கெல்லாம் ஆபத்து வந்திருக்கும் நேரத்தில் நாயகனால் வேலை விஷயத்தில் ஏமாற்றப்படுபவராகக் காட்டப்படும் நபரின் சாதியப் பின்னணி வேண்டாத ஒன்று .
அதே போல காலக் கணக்கன் கிண்டலுக்குக் கூட வாஸ்து பற்றி பேசிக் கூடாது
மற்றபடி இது ஒரு மகத்தான படம் .
சிவாஜி நடித்த ஒரு படம், மம்முட்டி நடித்த ஒரு படம் என்று இது போன்ற படங்கள் முன்பே உண்டு . ஆனால் தனது அட்டகாசமான திரைக்கதை வசனச் செதுக்கலால் படத்தை ஜொலிக்க வைத்து விட்டார் சமுத்திரக்கனி
படம் முடியும்போது இறகு போல இலகுவாகி பறக்கிறது மனம் .
எதைச் செய்ய வேண்டும்….. எ தைச் செய்யக் கூடாது…. முக்கியமாக எதைச் செய்வதாக எண்ணி எதைச் செய்யக் கூடாது என்பதை ஒரு தாயின் அக்கறையோடு சொல்லும் படம் இது
விரக்தியால் தற்கொலை பண்ணிக் கொள்ள முயலும் பலரை , மனச் சோர்வால் உடைந்து நொறுங்கும் பலரை இன்னும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது கவியரசு கண்ணதாசன் எழுதிய மயக்கமா கலக்கமா பாடல் .
அதே போல் பொண்டாட்டி பிள்ளைகளை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பதட்டத்தில் பல செயல்களைச் செய்து நினைப்புக்கு நேர்மாறாக அவர்களை நட்டா ற்றில் விட்டு விட்டு சீக்கிரமே அவர்களை பிரிந்து இறந்து விடுகிற நிலைக்கு ஆளாகும் நபர்களை ஆற்றுப்படுத்தி தொடர்ந்து நன்றாக வாழ வழிகளை சொல்கிறது இந்த வினோதய சித்தம். அந்த வகையில் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது
.
மொத்தத்தில்
வினோதய சித்தம்…. கலைவழிச் சமூக சேவை !
மகுடம் சூடும் கலைஞர்கள்
——————————————-
சமுத்திரக்கனி, தம்பி ராமையா, சி சத்யா , ஏகாம்பரம் , அபிராமி ராமநாதன் , ரமேஷ்