நேசம் என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட் சார்பில் சாகுல் ஹமீது தயாரிக்க,
மோகன், மேனகா , நம்பி ராஜன் , கவிஞர் விக்ரமாதித்தன் , பகவதி அம்மாள் நடிப்பில்
சீர்கட்சி பக்கில் பாண்டியன் பாஸ்கரன் இயக்கி இருக்கும் இஸ்லாமிய மார்க்க நெறிமுறைப்படம் படம் இன்ஷா அல்லா.
ஐந்து முறை தொழுகையின் அவசியம் …
மூன்று நாள் தொடர்ந்து சகோதரனுடன் பேசாமல் இருப்பவன் நரகம் போவான் என்று நபிகள் சொன்னது ….
வயதானாலும் கணவன் மனைவி அன்போடு வாழ வேண்டும் என்று நபிகள் வலியுறுத்தியது …
உறவுக்கு தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி ஹஜ்ஜுக்கு போவதால் பலன் இல்லை …
இவை போன்ற விஷயங்களை கிளைக்கதைகள் மூலம் சொல்கிறார்கள் .
முதிய ஏழைத் தம்பதியின் நேசத்தை சொல்லும் கதையில் தாத்தாவாக விக்ரமாதித்தன் நடித்து உள்ளார் .
இஸ்லாமியக் குடும்பங்களில் பலரும் ஒரே தட்டில் உணவு உண்ணும் பழக்கம் அதனால் வரும் பாசம்,
வயது முதிர்ந்தவர்கள் மேல் காட்ட வேண்டிய மரியாதை பற்றி எல்லாம் சொல்வது சிறப்பு.
இது தவிர ‘பிள்ளையார்புரம் ‘ என்ற பகுதியில் இஸ்லாமிய அமைப்பு விதவைகள் , கணவன் இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக ஒரு விஷயம் வருகிறது .
தகுதி இல்லாத இடத்தில் அரசு மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து , மக்கள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களால் அல்லல் பட ,
அவர்களுக்கு இஸ்லாமிய அன்பர்கள் அமைப்பு ரீதியாக உதவுவதையும் சொல்கிறார்கள் .
வேற்று மதத்தில் இருந்து மதம் மாறி வருபவர்கள் பெண்களை ஏமாற்றி பிள்ளைகளை கொடுத்து விட்டு போய் விடுவதாக, அந்த அமைப்பில் இருக்கும் ஒருவர் சொல்கிறார் .
அப்படி மதம் மாறி வருபவர்களை ஏன் உள்ள விடறீங்க ? விடாதீங்க .
ஓர் இஸ்லாமிய இளம் ஜோடியில் தூங்கும் கணவனை ஒரு பெண் எழுப்பி … அப்படி காட்சிகள் வருகின்றன . எதற்கு என்றே தெரியவில்லை.
தண்ணீர் பிடிக்கும் இடத்தில் மெல்லிய குழாயில் நீர் வர, நாலைந்து குடங்கள் தண்ணீர் நிரம்பும் வரை நீளும் ஷாட் ,…
ஒரு பெரியவரும் இரண்டு பெண்களும் முழு டீயையும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து முடிப்பது,….
யாரவது நடந்து கொண்டே ஏ ஏ ஏ இருப்பது ..
இப்படி ஒவ்வொரு காட்சியும் ஒரு ஷாட் ஆக நிமிடக்கணக்கில் நீண்டு கொண்டே போகிறது .
இஸ்லாமிய மார்க்கத்தின் மாண்புகளை , உயரிய கருத்துகளை சொல்வதில் தவறு இல்லை .
ஆனால் திரை மொழி ? காட்சிகள்? இயக்கம்? நடிப்பு ?
நபிகள் நாயகம் , அபூபக்கருக்குப் பிறகு இஸ்லாமிய மார்க்கத்தை வலுவாக நெறிப்படுத்திய உமர் பற்றி உமர் என்ற பெயரிலேயே ஒரு படம் உண்டு .
சுமார் பதினைந்து மணி நேரத்துக்கு மேல் ஓடும் அப்படத்தை ஒன்பது மணி நேரமாக சுருக்கி தமிழில் மொழி மாற்றி இருந்தார்கள் .
மூன்று மணி நேரம் , அரை மணி நேர இடைவெளி மீண்டும் மூன்று மணி நேரம் , அரை மணி நேர இடைவெளி மீண்டும் மூன்று மணி நேரம் என்றுஅந்தப் படம் ஓடி முடித்த போது,
கொஞ்சம் கூட அலுப்பு இல்லாத நிறைவு கிடைத்தது.
அது இஸ்லாமிய மார்க்கத்தின் மேன்மை சொல்லும் ; திரைப்படம்’ !
இன்ஷா அல்லா… அல்லாஹு அக்பர் !