மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரித்து, கதை வசனம் பாடல்கள் எழுதி இசையமைத்து எம் எஸ் மூர்த்தி இயக்க, சபரி, ரோகிந்த், ரக்ஷிதா மஹாலக்ஷ்மி , ஸ்வேதா , சாம்ஸ், நடிப்பில் வந்திருக்கும் படம்.
ஒரு புதிய அபார்ட்மெண்டில் வீடு வாங்கிக் குடி போகிறது குணா(சபரி)- சங்கீதா ( ரக்ஷிதா மஹாலக்ஷ்மி ) தம்பதி.
சபரியின் நடவடிக்கைகளில் ஏதோ தவறு இருக்கிறது.
பக்கத்து பிளாட்டில் உள்ள ரஞ்சிதா( ஸ்வேதா) என்ற பெண்ணோடு சங்கீதாவுக்கு நட்பு ஏற்படுகிறது. சங்கீதாவை பார்க்க ரஞ்சிதா வருகிறாள். ரஞ்சிதா வீட்டுக்கு சங்கீதா போகிறாள். பறவைகள், புத்தர் சிலை என்று வேறொரு உணர்வைக் கொடுக்கிறது ரஞ்சிதா வீடு .
கர்ப்பிணியாக இருக்கும் ரஞ்சிதாவை அவள் கணவனும் கணவனின் நண்பனும் வயிற்றில் மிதித்துக் கொல்வது போலவும் , அதே போல் தான் கணவன் தன்னை மிதித்துக் கொல்வது போலவும் சங்கீதாவுக்கு கனவு வருகிறது
விழித்தெழும் சங்கீதா வெளியே போய் ரஞ்சிதாவைக் காப்பாற்ற சொல்ல, அப்போதுதான் ரஞ்சிதா செத்து பல வருடம் ஆனது சங்கீதாவுக்கு தெரிய வருகிறது. அந்த பிளாட்களை கட்டிய ஓனரின் (எம் எஸ் மூர்த்தி) மகள்தான் ரஞ்சிதா என்பதும் சங்கீதாவுக்கு தெரிய வருகிறது.
பேயை விரட்ட வரும் பெண்மணி (கே ஆர் விஜயா)” அந்த ஆன்மா இங்கு இந்தப் பெண்ணுக்கும் கெடுதல் செய்ய விடாது. அது நல்ல ஆன்மா ” என்கிறது. அபார்ட்மெண்டில் உள்ள ஒரு மரத்தின் கீழ் உள்ள புத்தரை வணங்கியபடி இருக்கிறார் ஒரு சைவ துறவி( பி எல் தேனப்பன்)
சங்கீதாவின் கணவன் செய்யும் தவறான வேலை என்ன? சங்கீதாவுக்கு என்ன ஆனது என்பதே .99/66 ( 99 என்பது ரஞ்சிதாவின் பிளார் நம்பர்; 66 என்பது சங்கீதாவின் பிளாட் நம்பர்)
படம் ஆரம்பிக்கும்போது நல்லா இருக்குமோ என்று நம்ப வைத்தது என்னவோ நிஜம். அடிப்படைக் கதையும் மோசமில்லை. ஆனால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நம்மையும் படுத்துகிறார்கள்.
சும்மா நின்னாலே படம் ஓடி விடும் என்ற நிலையில் எல்லாம் ரக்ஷிதா இப்போது இல்லை. ஆனால் அது படக் குழுவினருக்கு தெரியவில்லை. . அவருக்கு கணவனாக நடிக்கும் சபரி கடைசித் தம்பி போல இருக்கிறார். ஸ்வேதா நடிப்பு பரவாயில்லை ரகம்.
காமெடி என்ற பெயரில் சாம்ஸ் , முல்லை, கோதண்டம் மூன்று பேரும் செய்வது மொத்தமாகவே தண்டம்.
கே ஆர் விஜயாவை எல்லாம் சும்மா நிக்க வைத்தால் போதாது.சரியான கேரக்டர் தர வேண்டும் இல்லையா?
சாகும்போது தன் கணவனை மன்னிக்க சொல்லி விட்டு சாகும் ரஞ்சிதா, அப்புறம் என் அவனை பழிவாங்க துடிக்கிறது.? அப்புறம் ஏன் குழம்புகிறது. . ஒரே குழப்பம் .
புத்தர், சிவ பக்தர் என்று இந்தப் படக் குழுவின் மனசில் ஏதோ கதை இருக்கு, ஆனால் அதை வெளியே சொல்ல முடியாத இதயம் முரளியாகவே முடிகிறது படம்.
மொத்தத்தில் 99/66….. 9/6
