பெரிய நாயகி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராகுல், செல்வா, அனிதா, பகவதி பாலா, ஆர். சுந்தர்ராஜன், நளினி, மீரா கிருஷ்ணன், வையாபுரி, கொட்டாச்சி, பெஞ்சமின் நடிப்பில் கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து பகவதி பாலா இயக்கி இருக்கும் படம் ஆளில்லாத ஊரில் அண்ணன்தான் எம் எல் ஏ.
எம் எல் ஏ வாக பல முறை இருந்தும் நேர்மையாக வாழ்ந்த ஒருவரின் ( ஆர். சுந்தர்ராஜன்) மகள் (அனிதா) வட்டிக்குப் பணம் கொடுக்கிறாள். எம், எல் ஏ வுக்கு பதவி ஆசை போன நிலையில் அவரது தம்பிக்கு (வையாபுரி) அந்த ஆசை வருகிறது .
அதற்காக , தனது மனைவியின் நகைகள் வரை விற்று தம்பி செலவு செய்த நிலையில் , மாவட்டச் செயலாளர் தனது உறவினரான ரவுடி ஒருவரை வேட்பாளராக அறிவிக்கிறார் . மனம் உடைந்து போகிறார் எம் எல் ஏ வின் தம்பி .
வட்டிக்கு விடும் பெண்ணுக்கு, தன்னிடம் வட்டிக்குப் பணம் வாங்கிய போட்டோகிராபர் ஒருவன் (ராகுல்) மீது காதல் . மாவட்டச் செயலாளரின் உறவினரான ரவுடி புதிய எம் எல் ஏ ஆகிறார் . அவரிடம் போட்டோகிராபர் ஒரு விசயத்தில் வசமாக மாட்டிக் கொண்ட நிலையில், புதிய எம் எல் ஏ மரணம் அடைகிறார் .
ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளைக் கொண்ட அவரது பிணம், போட்டோ கிராபரின் உதவியால் ஒரு மனைவியால் கடத்தப்படுகிறது . அப்புறம் என்ன ஆச்சு என்பதே படம் .
உற்சாகமாகப் படம் எடுத்தும் நடித்தும் இருக்கிறார்கள் படக் குழுவினர் .
பகவதி பாலாவின் வசனம் நன்றாக இருக்கிறது . குறிப்பாக அந்த நல்லவன் கெட்டவன் வசனம் . அதே நேரம் “ஒரு பொம்பள அழுதா அதுக்கு நிறைய காரணம் இருக்கும் . ஆனா ஒரு ஆம்பள அழுதா அதுக்கு காரணம் ஒரு பொண்ணாதான் இருப்பா” என்ற வசனத்தை தமிழ் சினிமாவில் நூற்று முப்பத்து ஆறாவது தடவையாக இந்தப் படத்திலும் பயன்படுத்தி இருக்கிறார்கள்
தேவா இசையில் பாடல்கள் தெளிவாகப் புரிகிறது . கேட்கும் ரகம் .
சுந்தர்ராஜன் – மீரா கிருஷ்ணன் இருவரின் காமெடிகள் பரவாயில்லை .
சமூக அக்கறை விசயங்களைப் பேசிய வகையில் படத்தைப் பாராட்டலாம்

