அக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்க, ஜி வி பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, பக்ஸ், முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கி இருக்கும் படம் பேச்சிலர் .
அம்மா அக்காவுக்கு பயப்படுகிற, பெண் சுகத்துக்கு ஏங்குகிற- கோபக்கார – கோவை இளைஞன் ஒருவனுக்கு (ஜி வி பிரகாஷ் குமார்) ஐ டி வேலை கிடைத்து பெங்களூர் போகிறான் . அங்கு அழகழகான பெண்களும் இளைஞர்களும் மது , சிகரட் , செக்ஸ் என்று ஜாலியாக வாழ்வதை பார்த்து நமக்கு யாரும் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறான் .
இந்த நிலையில் நண்பன் ஒருவன் நடத்தும் பார்ட்டியில் தனக்கு மிக அழகாக செக்சியாகத் தெரியும் ஒரு பெண்ணை (திவய பாரதி ) சந்திக்கிறான் . நண்பனின் உதவியோடு அந்தப் பெண்ணின் வீட்டிலேயே தங்குகிறான்.
யாரும் இல்லாத் தனிமையில் காமம் தலைக்கேறி இருவரும் உடல் உறவு கொள்ள, அது பின்னர் அடிக்கடி நடக்கிறது . அவள் கர்ப்பம் ஆகிறாள் . விஷயத்தை இரண்டு குடும்பத்திலும் சொல்லி கல்யாணம் செய்து கொண்டு பிள்ளை பெற்று வளர்க்கலாம் என்று அவள் சொல்கிறாள்
விஷயம் தெரிந்தால் என் அம்மாவும் அக்காவும் செருப்பால் அடிப்பார்கள் என்று சொல்லும் அவன் கருக்கலைப்பு செய்யச் சொல்கிறான்.
அவள் மறுக்க, சண்டை வந்து பிரச்னை பெரிதாகிறது .
ஒரு நிலையில் பெண்ணின் வக்கீல் மாமா பிரச்னையை கையில் எடுக்க, ஒரு தரப்பை இன்னொரு தரப்பு பழி வாங்க நினைக்க, அதே நேரம் தான் தப்பிக்க எந்த எல்லைக்கும் போக இரு தரப்பும் தயார் ஆக, கடைசியில் என்ன நடந்தது என்பதே இந்தப், படம்.
கதையைப் படித்து முடித்ததும் இதுதான் படத்தின் முடிவாக இருக்கும் என்று ஒன்று தோன்றுகிறதே, அது இல்லை என்பதுதான் படத்தின் பலம் .
எடுத்துக் கொண்ட கதையை – அமைத்த காட்சிகளை நிதானமாக அழுத்தமாக முடிந்தவரை யதார்த்தமாக , ஒரு வித்தியாசமான திரை மொழியில் சொல்கிறார் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கும் ஜி வி பிரகாஷ் குமார் படத்தில் சிறப்பான தோற்றப் பொலிவில் வருகிறார் .
கதாநாயகி திவ்ய பாரதி இளமை மற்றும் நடிப்பு .
வித்தியாசமான சூழல்களில் வரும் கிராமியப் பாடல்கள் கவனம் கவர்கின்றன . ஒளிப்பதிவும் சிறப்பு
உண்மையாக நடக்கும் நிகழ்வில் நாமும் உள்ளே இருக்கிறோம் என்ற உணர்வை தருவது படத்தின் பிளஸ்
அம்மா அக்காவுக்கு பயம் ஆனால் வெளி இடத்தில் மூர்க்கம் , மீண்டும் மீண்டும் உடல் உறவு கொண்டு கர்ப்பமாக்கும் தைரியம் ஆனால் கல்யாணம் செய்து கொள்ள பயம் , நாயகியின் மேல் வந்தது காமம் மட்டுமா இல்லை காதலுமா என்ற குழப்பம் உட்பட நாயகனின் பல வித்தியாசமான குணாதிசயங்களை ஏற்றுக் கொள்ளும்படி சொல்லத் தவறியதால் அவை லாஜிக் குறை போல ஆகி விட்டது .
எனினும் படம் மனசுக்குள் பாதிப்பை ஏற்படுத்துவதில் ஜெயிக்கிறது
பேச்சிலர்… வழக்கத்துக்கு மாறான வேறுபட்ட முயற்சி