ஆண்டவன் கட்டளை @ விமர்சனம்

anda-777

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ஜி என் அன்புச் செழியன் தயாரிக்க, , ஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் எம் எஸ் ஷரவணன் வெளியிட, 

விஜய் சேதுபதி, இறுதிச் சுற்று புகழ் ரித்திகா சிங், நாசர், பூஜா தேவரியா , யோகி பாபு ஆகியோர் நடிக்க , 
டி. அருள்செழியன் கதை எழுதி திரைக்கதையில் பங்கு பெற , இயக்குனர் அணு சரண் திரைக்கதையில் ஒத்துழைக்க , 
காக்கா முட்டை  மணிகண்டன் திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம் ஆண்டவன் கட்டளை . 
இந்த  கட்டளை சாசனமா ? இல்லை பூசனமா ? பார்க்கலாம் . 
அக்காவைக் கட்டிக் கொடுக்க வாங்கிய கடனுக்காக , ஒரு நிலையில் அக்கா கணவரிடமே கடன் பட்டு, 
அதை  வெளிநாடு போய் சம்பாதித்தால்தான் அடைக்க முடியும் என்ற நிலைமைக்கு வருகிறான் காந்தி (விஜய் சேதுபதி ) . 
anda-9
உடன் வெளிநாடு போகும் கனவில் நண்பன் ஒருவன் (யோகி பாபு)
அதற்காக சென்னைக்கு வரும் இருவரிடமும் ” போலி விவரங்களுடன் பாஸ் போர்ட் எடுத்து டூரிஸ்ட் விசாவில் லண்டன் போய் , 
லண்டன் ஏர்போர்ட்டிலேயே  இந்த பாஸ் போர்ட் மற்றும் விசாவை கிழித்து எறிந்து விட்டு இலங்கை அகதி என்று  சொல்லிட்டா போதும்.
 கேம்ப்ல வச்சிருந்து கொஞ்ச நாள்ல வேலை பர்மிட் கொடுத்துடுவாங்க . மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கும் வேலை கிடைக்கும் ” என்று சொல்கிறார் போலி பாஸ்போர்ட் புரோக்கர்  (எஸ் எஸ் ஸ்டான்லி)
போலி விவரங்களுடன் பாஸ்போர்ட் தயாரிக்கும் வேலை துவங்குகிறது . 
பேச்சிலர் என்று சொன்னால் அங்கேயே இருந்து விடுவாய் என்று பயந்து விசா தரமாட்டர்கள். எனவே மனைவி என்று ஒரு பெயரைப் போடுவோம் என்று,
 anda-999
கார்மேக குழலி என்ற பெயரை காந்தியின் மனைவி என்று போடுகிறார்கள். 
ஈழப் போரின் போது காணாமல் போன தன் மனைவி மகளை தமிழ்நாட்டில் தேடி அலைந்தபடி ,
 பிழைப்புக்காக இந்தபோலி பாஸ்போர்ட் தயாரிப்பு வேலையில் ஈடுபடும் நேசன் ஈழத் தமிழனும் அங்கே இருக்கிறான்.  .
பாஸ்போர்ட் ரெடியாகிறது. 
விசாவுக்கான நேரடித் தேர்வில் காந்திக்கு விசா மறுக்கப் படுகிறது . நண்பனுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு அவன் லண்டன் போய் விடுகிறான் . 
காந்திக்கு நவீன  தீவிர நாடகக் குழு ஒன்றில்  வேலை கிடைக்கிறது .அதன் தலைவர்  (நாசர் ) மிக நேர்மையான அதை மீறுவோர் மீது கோபப்படுகிற மனிதர். 
காந்தியின் புரட்டுகள் அவருக்கு தெரியாது .அவர் அவனை முழுக்க நம்புகிறார் 
anda-99
இந்நிலையில் அவரது நாடகக் குழுவுக்கு லண்டனில் நாடகம் நடத்த அனுமதி கிடைக்கிறது . அதற்கு மேனேஜர் என்ற நிலையில் காந்தியையும் அழைத்துப் போக  முடிவு செய்கிறார் . 
காந்தி பேச்சிலர் என்பது அவருக்கு தெரியும் . விசா வாங்க அவர் பாஸ் போர்ட் கேட்க ,  
அதில்  மனைவி என்று ஒரு பெயர் இருப்பது தெரிந்தால் அவர் வேலையை விட்டு துரத்தி விடலாம் என்று பயப்படுகிறான் காந்தி . 
மீண்டும் பாஸ் போர்ட் ஆபீஸ் புரோக்கர்களை தேடிப் போக , கார்மேகக் குழலி என்ற பெயர் உள்ள ஒரு பெண்ணை பிடித்து அவளது ஒரிஜினல் சர்டிபிகேட்களை கோர்ட்டில் சமர்ப்பித்து 
விவாகரத்து வாங்கி விட்டால் பாஸ்போர்ட்டில் மாற்றி விடலாம்  என்று புரோக்கர்கள் கை காட்டும் வக்கீல்கள் சொல்ல, 
தமிழ் செய்திகள் என்ற தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் நேர்மையான நிருபர் கார்மேகக் குழலி  (ரித்திகா சிங்) பற்றி  தெரிய வருகிறது. 
anda-77
தனக்கு  சரி என்று பட்ட விசயத்தை தயங்காமல் செய்யும் சுபாவம் உள்ள அவள், காந்தியின்  மிகுந்த போராட்டத்துக்குப்  பிறகு ஒரு உதவியாக மனைவியாக நடித்து
விவாகரத்து வாங்கி அதன் மூலம் பாஸ் போர்ட்டை சரி செய்து  தர சம்மதிக்கிறாள் . 
கோர்ட்டுக்குப் போனால்,  குடும்ப நலக் கோர்ட்டில் ஒரு நல்ல பெண் நீதிபதி கவுன்சிலிங் போக சொல்கிறார். கவுன்சிலிங்கில் சேர்ந்து  வாழச் சொல்கிறார்கள் . 
பெண் நிருபர் விவாகரத்து முயற்சி என்று இது அடையாளப் படுத்தப்படுகிறது . 
இந்த நேரத்தில் அவளை பெண் பார்க்க வருகிறது ஒரு குடும்பம் 
கடன்கார மாமா காந்தியை நெருக்குகிறார் .  நாடகக் குழு தலைவரை காந்தியால் சமாளிக்க  முடியவில்லை 
இப்படி  பொய் விவரம் கொடுத்து பாஸ்போர்ட்  எடுக்க காந்தி சம்மதிக்கும் ஒரு சிறிய தவறு … 
எலித் தொல்லையை ஒழிக்க பூனை வளர்க்க ஆசைப்பட்ட சாமியார் , துறவறம் மறந்து சம்சாரி ஆகிய கதையாக நீள்வதால் 
anda-8
ஏற்பட்ட பிரச்னைகள் என்னென்ன …
மேலே உள்ள மனிதர்களுக்கு என்ன ஆனது .. சிக்கல்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே .. இந்த ஆண்டவன் கட்டளை . 
முதலில் மணிகண்டனுக்கு நிபந்தனை இல்லாத முழு மனசோடு கூடிய பலத்த கைதட்டல்கள் . 
நிலத்துக்கு பட்டா வாங்குவது , சமூக சான்றிதழ் பெறுவது , இவைகளில் திருத்தம்  செய்வது போன்ற  சிறிய வேலைகளுக்குக் கூட, 
 சிரமம் பாராமல் ஒரு  எட்டு சம்மந்தப்பட்ட அரசு  அலுவல்களுக்கு நடந்து ஒரு நாளோ இரண்டு நாளோ காத்திருந்து  பெற்று விட்டால் நேரமும் மிச்சம் செலவும் மிச்சம் . 
ஆனால் அதனால் ஏற்படும  சிறு செலவுகள் சிரமங்களை ஏற்க தயங்கும் சாதாரண பொது ஜனம் புரோக்கர்களை நம்பி , 
anda-6
அவர்கள் சொன்ன தவறான  வழிகளில் எல்லாம் செயல்பட்டு பெரும் காலத்தையும் பணத்தையும் இழந்து , பல குற்றங்களிலும் சிக்கிக்  மடைமையை….
பாஸ் போர்ட் எடுப்பது என்ற  பின் புலத்தை  மிக சரியான நியாயமான காரணத்துக்காக வைத்து ….
நாட்டுக்கு மிக அவசியமான படத்தைக் கொடுத்துள்ளார் மணிகண்டன் . 
ஆனால் இது மட்டும்தான் இந்த படத்தின் சிறப்பு என்றால் மணிகண்டனை   ஜஸ்ட் லைக் தட் பாராட்டி விட்டுப் போய்விடலாம். 
அப்படி மட்டும் விட்டு விடாமல், 
 இந்தக் கதை பயணிக்கும் ஒவ்வொரு களத்தையும் தளத்தையும் நின்று நிதானித்து சமூக அக்கறையோடு கூடிய பார்வை பார்த்து
 அதற்கேற்ப தனது கோபத்தை வருத்தத்தை கிண்டலை துள்ளலை சிந்தனையை பதிவு செய்து விட்டுப் போகிறார் .
anda-4
அந்த இடத்தில்தான் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாளி ஆகிறார் மணி கண்டன் . 
உதாரணமாக கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒரு  சராசரி கிராமத்து இளைஞனுக்கு  பணம் ஏன் அதிகம் வேண்டும்  ? சகோதரி கல்யாணம் . அதில் உள்ள வரதட்சனை விஷயம் . அதை படம் பேசுகிறது . 
வெளிநாடு போய் சீக்கரம்  சம்பாதிக்க ஏன் ஆசைப் படுகிறான் .  கடன் . 
முறையற்ற பாஸ்போர்ட்டில் ஏன் போக நினைக்கிறான் ? சுயநல உறவுகள் தரும் அழுத்தம் 
சென்னைக்கு வரும் அப்படிப்பட்ட இளைஞனுக்கு  மனைவி வாடகைக்கு வீடு தேவை . 
அப்படி வாடகைக்கு வரும் நபர்களை வீட்டு உரிமையாளர்கள் என்ற பெயரில் உள்ள பணப் பேய்கள் எப்படி கொடுமைப் படுத்துகின்றன . அந்த கொடுமைக்கு எதிராக  வாள் எடுக்கிறார்.மணி . 
முறையற்ற பாஸ்போர்ட் வாங்கித் தரும் புரோக்கர்கள் தன்னை நம்பி வரும் பலியாடுகளை எப்படி எல்லாம் மனசாட்சி இன்றி ஏய்த்து, 
anda-66
குற்றவாளி ஆக்கி விட்டு  தான் மட்டும்  தப்பிக்கிறார்கள். அதை பேசுகிறது படம் . 
 நடக்காத கல்யாணத்துக்கு விவாகரத்து  வாங்கித் தரேன் என்ற பெயரில் வழக்கறிஞர்கள் செய்யும் பித்தலாட்டமா ? அதை புட்டு வைக்கிறது படம் . 
போலி விவாகரத்து பெற போராடும் இடத்தில் இன்றைய இளம் ஜோடிகள் அவசர காதல் அவசர திருமணம் செய்து கொண்டு 
அதே சூட்டில் விவாகரத்துக் கோர்ட்டில் நின்று வாழ்க்கையை தொலைக்கும்  அவலத்தை பார்த்து கண்ணீர் வடிக்கிறது படம் . 
இப்படியாக … 
சூரியனை  மிக சரியாக சுற்றி வரும் பூமி அதே நேரம் தன்னைத் தானும் கச்சிதமாக சுற்றிக் கொள்வது போல …
வித்தியாசமான கதை – மிக ஒழுங்கோட்டம் உள்ள திரைக்கதையின் ஒவ்வொரு பகுதியும் கூட  முழுக்க முழுக்க ஆழமாக அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளது . 
anda-7
ஒரு நார்மலான இதயத்தின் ஈ சி ஜி கிராப்பில் உள்ள ஜிக்ஜாக் நெளிவுகளிலும்கூட  கூட ஒரு  ரிதம் இருக்குமே . அப்படி …!  அப்படி !! 
மணிகண்டன் , கதாசிரியர் டி. அருள்செழியன், திரைக்கதை ஒத்துழைப்பாளர் அணு சரண் ஆகியோருக்கு உள்ளங்கை சிவக்க சிவக்க  உற்சாக கை குலுக்கல்!
இது மட்டுமா ?
தாய்த் தமிழ்நாட்டு  மண்ணில் தன் பேச்சு  வழக்கு காட்டிக் கொடுத்து விடுமே என்ற பயத்தில் நம் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழன் ஊமையாக நடிக்க வேண்டிய அவலம் …
(‘ஆக , தமிழ் நாட்டில் தமிழ் பேசினாலே பிரச்னைதான்” என்ற வசனம் சிகரம் )
ஈழத் தமிழன் என்று சொல்லி இலங்கையில் இறங்கிய ஒரு தமிழ்நாட்டுத் தமிழன் மீது சிங்கள போலீசார் காட்டும் வெறி , 
anda-2
இந்தியாவில் ஈழத் தமிழர்களை வேட்டை ஆடுவதில் மலையாளிகளுக்கு இருக்கும்  வஞ்சக தீவிரம் … 
இவற்றை  கனமான உணர்வுகளாக நமக்குக் கடத்தும் இடத்தில் ஒரு கை தேர்ந்த இயக்குனராக ஜொலிக்கிறார் மணி(யான)கண்டன் . 
எனில் இந்தப் படம் எவ்வளவு ஒரு சோக கீதமாக இருக்க வேண்டும். ?
அதுதான் இல்லை .படத்தின் முதல் காட்சியில் துவங்கும் சிரிப்பு மேளா கடைசி வரை நீளும் வகையில் இயக்குனரின் கில்லாடித்தனமான செய் நேர்த்தி வியக்க வைக்கிறது 
படம் முழுக்கவே வசனங்கள் அவ்வளவு எளிமையாக அதே நேரம் அவ்வளவு சரியான வார்த்தைகளோடு இருக்கிறது , கவியரசு கண்ணதாசனின் பாடல் மாதிரி!
anda-1
“இங்க உள்ள தஞ்சைப் பெரிய கோவில் , ஆக்ரா போன்ற அற்புதங்களை இது வரை ஒரு முறை கூட பார்க்காத நீ, எங்க லண்டன்ல உள்ள அற்புதங்களை பார்த்து என்ன கிழிக்கப் போற ?”
-என்ற ரீதியில் , இங்கிலாந்து விசா அலுவலக வெள்ளைக்கார அதிகாரி தமிழில் கேட்டு விசா மறுப்பு செய்யும் வசனம் மாணிக்க மகுடம் . 
படத்தின் ஆரம்பமான  கிராமத்து  வனாந்திரக் குளுமைக் காட்சியின் மூலம் எடுத்த எடுப்பிலேயே கவனம் அசத்துகிறது சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு . 
பல களங்களில் பயணிக்கும் திரைக்கதையை சரியான கயிறு போட்டு கட்டி இழுத்து நேர்க்கோட்டில் பயணிக்க வைப்பதில் அனுசரணின் படத் தொகுப்பு சிறந்து நிற்கிறது 
பாடல்களும் இசையும்தான் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாமோ என்ற உணர்வை தருகிறது . 
anda-3
காந்தி கேரக்டரில் மண்ணும் மணமுமாக அவ்வளவு இயல்பாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி . மிக சோகமான காட்சிகளில் கூட  உள்ளுக்குள் உணர்ந்து கட்டுப்பாடான நடிப்பை வழங்கும் விதம் அருமை . 
ரித்திகா சிங் மிக சிறப்பான உடல் மொழிகள்,  முக பாவனைகள் என்று அசத்தி இருக்கிறார் . 
நாடக வாத்தியாராக வாழ்ந்து இருக்கிறார் நாசர் . நடிகை கேரக்டரில் உற்சாக ஊற்றாகவும் இயல்பில் அம்மாஞ்சியாகவும் பூஜா  தேவரியா !
இலங்கைத் தமிழரான நேசன் நெகிழ வைக்கிறார் . அவர் கைது செய்யப்படும் காட்சியில்  மனசு நிஜமாகவே வலிக்கிறது.
 anda-88
நண்பனாக வரும் யோகி பாபு , வக்கீலாக வரும் லாரன்ஸ் , அவரது உதவியாளராக வரும் வினோதினி எல்லோரும் காமெடி ஏரியாவுக்கு கட்டியம் சொல்கிறார்கள் . 
வீட்டு ஓனரைப் பார்த்து யோகி பாபு  சொல்லும் ”இந்த மூஞ்சிக்கு இப்படி ஒரு  (சூப்பர்) பொண்டாட்டியா ?” மெட்ராஸ்ல சொந்த வீடு இருந்தா என்ன  வேண்ணா கிடைக்கும் போல ” என்ற காமெடி பன்ச்சில்
திரையரங்கில் நகைச்சுவை பூகம்பம் !
என்னதான் கதைப்போக்குக்குப்  பொருத்தமாக இருந்தாலும் ஓர் ஈழத் தமிழனை இப்படி போலி பாஸ்போர்ட் மோசடிக்கு உடந்தையாக காட்ட வேண்டுமா என்ற கேள்வி வரத்தான் செய்கிறது .
எனினும் அதை கடைசிக்கட்ட  நெகிழ்வில் மிக அழகாக சமன் செய்கிறது படம் . 
அதே போல ஒரு நிலையில்  காந்தி — கார் மேகக் குழலி பிரச்னை என்ன  ஆகும் என்பதை முன்பே யூகிக்கவும் முடிகிறது . அதே நேரம் அது நடக்கும் போது வரும் சந்தோசம் அந்தக் குறையையும் சரி செய்கிறது . 
anda-5
மொத்தப் படத்தில் வரும் பிரச்னையும் , நேர்மையாக அரசு அலுவலகத்தை அணுகும்போது  சில நிமிடங்களில்   தீரும் அழகு ஒரு  பிரம்மிப்பைத் தருகிறதே .. அதுதான் இந்தப் படத்தின் அடி நாதம் . 
 
விளைவு ?
இது ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய  படம் என்று நம்மையும் அறியாமல் சொல்ல வைக்கிறது . 
ஆண்டவன் கட்டளை … அற்புதத் தீர்ப்பு 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
————————————————-
மணி கண்டன் , அனுசரண்,  டி. அருட்செழியன்,  விஜய் சேதுபதி, சண்முக சுந்தரம், நாசர், ரித்திகா  சிங் , ஜி. என் அன்புச்  செழியன், எம் எஸ் சரவணன் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *