எவர் கிரீன் மூவி இன்டர்நேஷனல் சார்பில் வி ஏ துரை தயாரிக்க, சிவபாலன் என்ற அப்புக்குட்டி , அறிமுக நாயகி தில்லிஜா , பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் நடிக்க ,
கதை திரைக்கதை வசனம் எழுதி சிவராமன் இயக்கும் படம் காகிதக் கப்பல் .
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர்கள் எஸ் பி முத்துராமன் , வெற்றி மாறன் , நடிகர் — ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜ் தயாரிப்பாளர் கதிரேசன்,
ஆகியோர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்கள் .
படத்தின் பாடல்களும் முன்னோட்டமும் திரையிடப்பட்டன.
ஒரு எளிய கிராமத்து மனிதனின் காதல், கனவுகள், வாழ்க்கை என்று படம் போகும் என்பது தெரிந்தது .
நிகழ்ச்சிக்காக நடிகர் அப்புக்குட்டி கேரளாவில் இருந்து சின்சியராக கிளம்பி வந்திருந்தார் .
நிகழ்ச்சியில் பேசிய எஸ் பி முத்துராமன் படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு கலைஞரையும் பேர் சொல்லி வாழ்த்தினார்.
வெற்றி மாறன் இயக்கிய விசாரணை படம் ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்க, அதற்காக தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் .
நட்டி பேசும்போது ” உங்களுக்கு எல்லாம் ஒன்று சொல்ல வேண்டும் .
நான் நிறைய இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும்போது பார்த்திருக்கிறேன் . பல இயக்குனர்கள் நம்ம எஸ் பி முத்துராமன் அவர்களின் இயக்கத் திறமையை பாராட்டிப் பேசுவார்கள்.
வெற்றி மாறனின் விசாரணை ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த காகிதக் கப்பல் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ” என்றார் .
தயாரிப்பாளர் கதிரேசன் தன் பேச்சில் ” தமிழ் சினிமாவின் பெருமை வெற்றி மாறன். அவரை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியமைக்காக பெருமைப் படுகிறேன்.
அவர் வந்து வாழ்த்தும் இந்த காகிதக் கப்பல் படம் வெற்றி பெற வாழ்த்துகள் ” என்றார் .
அப்புக்குட்டி பேசும்போது ” இவ்வளவு பெரிய சாதனையாளர்கள்
என்னை பாராட்ட வந்து இருப்பது சந்தோஷமாக இருக்கு .
மறக்க மாட்டேன் இந்த நாளை ” என்றார் .
சிறப்புரை ஆற்றிய வெற்றி மாறன் ” இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ. துரை பற்றி சொல்ல வேண்டும். எனது முதல் படமான பொல்லாதவன் தயாரிப்பில் அவரும் இருந்தார் .
ஒரு முறை கே.கே. நகர் சாலையில் தனுஷை வைத்து பயணக் காட்சி எடுக்க வேண்டும் . பெரும் கூட்டம் !
கேமராவுக்கு முன்னால் தூரத்தில் எனது உதவியாளர்கள் கஷ்டப்பட்டு கும்பலை விலக்கியபடி ஓட அவர்களுக்கும் முன்னால் கத்திக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தார் வி.ஏ துரை.
ஏன்னா அவர் இருந்த இடம் அப்படி . எஸ் பி முத்துராமன் சாரிடம் உதவியாளராக இருந்தவர் . அவர் கொடுத்த டிரைனிங் அப்படி .
பொல்லாதவன் படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் சார் இல்லை என்றால் நான் இல்லை . அதற்கு முன்பு அந்தப் படத்தை ஆறு பேர் தயாரிக்க ஆரம்பித்து ஆரம்பித்து அப்புறம் விட்டு விட்டுப் போனார்கள் .
வேறு ஒரு தயாரிப்பாளர் என்றால் அப்படி ஒரு படத்தை தொடவே மாட்டார்கள். ஆனால் என்னை நம்பி படத்தை தயாரித்தார் கதிரேசன்.
முந்தைய ஆறு தயாரிப்பாளர்களில் ஒருவர் கையில் படம் இருந்த போது நட்டியைதான் கேமரா மேனாக ஒப்பந்தம் செய்தேன். பின்னர் தயாரிப்பாளர் மாறியபோது அவர் பிசி ஆகி விட்டார் .
அவர் இப்போது நடிகராகவும் ஆகி இந்த மேடையில் இருப்பது சந்தோஷமான விஷயம்.
நடிகர் அப்புகுட்டிக்கு ஒரு ராசி உண்டு. அவர் இருக்கும் படம் நன்றாக ஓடும் அல்லது அங்கீகாரம் பெறும்.
இந்த காகிதக் கப்பல் படத்துக்கு இரண்டும் கிடைக்க வாழ்த்துகள் ” என்றார் .
படத்தின் இயக்குனர் சிவராமன் பேசும்போது “. எனது நாலாவது படம் இது . எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் எம் ஜி ஆருக்கு ஜோடியாக நடித்த ரத்னாவின் மகன் சுஜாதா இந்தப் படத்தில் நாயகிக்கு அம்மாவாக நடிக்கிறார் .
எங்களை வாழ்த்தி அங்கீகாரம் தர இங்கு வந்த இந்த சாதனையாளர்கள் அனைவருக்கும் நன்றி ” என்றார்