அப்பா குட்டி @ விமர்சனம்

மீரா விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க,  விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து இசை அமைத்து படத் தொகுப்பு செய்ய, 

பிரீத்தி அஸ்ராணி , சிறுமி லிதன்யா , ஜென்சன் திவாகர், முருகானந்தம் , அருவி மதன், ஹரி பிரியா இசை, மூணார் ரமேஷ், ஹரி பிரியா, ஹரிதா நடிப்பில் புதிய பரிதியின் கூடுதல் எழுத்தில்   மு. மாறன் எழுதி இயக்கி இருக்கும் படம். 

 
சென்னை கோயம்பேட்டில் கையில் குழந்தையுடன் பேருந்தில் ஏறும் சூர்யாவை ( விஜய் ஆண்டனி),  ரவுடிகள் கும்பல் ஒன்று தாக்குகிறது. அவர்களை அடித்து நொறுக்கி விட்டு பஸ் ஏறி ஊட்டியில் இறங்குகிறான் சூர்யா . அங்கே சினிமா ஷூட்டிங் லோக்கல் மேனேஜர் வேலை பார்த்துக் கொண்டு குழந்தையை வளர்த்து தியா என்று பெயர் வைத்து ( சிறுமி லிதன்யா ) பள்ளிக்கு அனுப்புகிறான் . 
 
மனைவி இறந்துவிட்ட  நிலையில் தந்தையாக மட்டுமின்றி தாயாகவும் இருந்து அவன் மகளை வளர்ப்பது கண்டு ,  தியாவின் பள்ளி ஆசிரியை அனிதா ( பிரீத்தி அஸ்ராணி ) சூர்யாவை திருமணம் செய்து கொண்டு தியாவுக்கு அம்மாவாகவும் இருக்க விரும்புகிறாள். . சூர்யாவுக்கு அதில் சம்மதமில்லை.
 
தியாவின் விருப்பப்படி அவளது அம்மாவின்  புகைப்படத்தை பெரிய அளவில் வரைந்து கொடுக்கிறாள் அனிதா . ஒரு நிலையில் சூர்யாவின் விருப்பமும் அனிதா நோக்கி திரும்பும் வேளையில்  இறந்து போனதாக சொல்லப்பட்ட  தியாவின் அம்மா ரேவதியை ( ஹரி பிரியா)  நேரில் பார்க்கிறாள் அனிதா. 
 
அது பற்றி அனிதா சூர்யாவிடம் விசாரிக்க, ரேவதி தியாவின் அம்மா இல்லை என்கிறான் சூர்யா 
 
 ரேவதியம் சூர்யாவும்  காதலிக்க,  அந்த காதலை அவளது பெற்றோர் விரும்பாத  நிலையில் அவளுக்கு உறவினர் ஒருவரை திருமணம் செய்து வைக்க திட்டமிட, காதலியை காப்பாற்ற  வேண்டிய  சமயம் , குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் கும்பலின் கையில் இருந்த ஒரு குழந்தையை (அந்த   கடற்கரை சுண்டல் பையன் காட்சி அபாரம்)  சூர்யா காக்க முயல, 
 
அந்த கும்பலுக்கு போலீஸ் உடந்தையாக இருக்க, இது தெரிந்து ரேவதிக்கு வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவர் சூர்யாவை  ஸ்டேஷனிலேயே முடக்க, ரேவதிக்கு  வேறு மாப்பிள்ளையோடு திருமணம் நடந்து விடுகிறது 
 
— என்பதை சூர்யா அனிதாவுக்கு சொல்கிறான் 
 
இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுகிறாள் தியா. தலசீமியா என்ற–  நோயால் அவள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறும் மருத்துவர், தியாவின்  உடன் பிறந்த சகோதர உறவின் உடலில் இருந்து ஸ்டெம் செல்களை எடுத்து தியாவின் உடலுக்குள் செலுத்தினால்தான் அவளை காப்பாற்ற முடியும் என்கிறார் 
 
சரி தியாவின் உண்மையான அம்மா யாரென்று தெரிந்தால் அடுத்த கட்டம் பற்றி யோசிக்க முடியும் என்று அனிதா சொல்ல , அப்போதுதான் ‘தியாவின் அப்பா(வும்) நானில்லை’ என்கிறான் சூர்யா. 
 
எந்த குழந்தையை காப்பாற்ற நினைத்ததால் ரேவதியை சூர்யா இழந்தானோ,  அந்த  குழந்தையை மீண்டும்  அந்த சமூக விரோத கும்பல்  கைப்பற்ற முயல, அவர்களிடம் சண்டை போட்டு  சூர்யா காப்பாற்றிய  அந்த குழந்தைதான்  தியா என்பது அனிதாவுக்கு தெரிய வருகிறது. 
 
இப்போது  தியாவை காப்பாற்ற வேண்டும் என்றால் அவளது உண்மையான அப்பா அம்மா யாரென்று தெரிய வேண்டும் . அது தெரிய வேண்டும் என்றால்,  குழந்தை தியாவை வைத்து சிறு வயதில் பிச்சை எடுத்த– அதாவது  யாரிடம் இருந்து  சூர்யா  குழந்தையை காப்பாற்றிக்கொண்டு வந்தானோ, அவர்களிடமே அவன் போக வேண்டிய நிலை. 
 
அப்படிப் போனால்  அந்த கொடூர கும்பலால் சூர்யாவுக்கு என்ன நடக்கும் என்பதே ஒரு கமர்ஷியல் திரைப்படத்துக்கு போதுமான திரைக்கதை என்ற நிலையில்… 
 
அதெல்லாம் சும்மா டிரைலர்தான் கண்ணா…அப்புறம்தான் இருக்கு மெயின் பிக்சர்  என்று சொல்கிற மாதிரி,…
 
அம்மா யார்? அப்பா யார்? அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?,என்ன மாதிரியான  சூழலில் இருக்கிறார்கள்? அவர்கள் மீண்டும் ஒரு குழந்தை பெறுவது சாத்தியமா? யார் ஒத்துக் கொள்வார்? யார் மறுப்பார்? மறுப்பார்  மாற வாய்ப்புண்டா, சம்மதிப்பரை கெடுப்பார் யாரும் உண்டா . இப்படி.. இப்படி   
 
இரவு வானத்தில்  பளீர் பளீர் என மின்னும் மின்னல் கிளைகளைப்  போல அடுத்தடுத்து புதுப் புது கதாபாத்திரங்கள் என்று திரைக்கதை ,  கிளை பிரித்துப் பரப்பிக் கொண்டு போய், 
 
மகளை காக்க போராடும் அப்பாகுட்டி சூர்யாவால் தியாவை காப்பாற்ற என்ன எல்லாம் செய்யவேண்டி இருந்தது,? அது  எவரெவர் வாழ்வில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? மகளைக் காப்பாற்றுவதில்  சூர்யா ஜெயித்தானா இல்லையா என்பதை விறுவிறுப்பாகவும் கனமாகவும்  சொல்லி படத்தை முடிக்கிறார் இயக்குனர் மு மாறன்.
 
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த  புனே நகரைச் சேர்ந்த சிறுமியின் உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்து இந்தப் படத்தை எடுத்து இருக்கிறார்கள். 
 
ஒருவகையில் இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு இன்னொரு பிச்சைக்காரன் என்றே சொல்லலாம். 
 
பிச்சைக்காரன் படத்தைப் போலவே அமைந்த கனமான அர்த்தமுள்ள நெகிழ்ச்சியான பாடல்கள் இந்தப் படத்திலும் இருக்கின்றன.உருக்கும் கிளைமாக்ஸ் இருக்கிறது 
 
பிச்சைக்காரன் படத்தைப் போலவே எந்த சூழலிலும் எந்த கஷ்டத்திலும் எவ்வளவு ஆபத்து வந்தாலும் தன் நிலையில் இருந்து மாறாத நங்கூரக்  கதாபாத்திரம் விஜய் ஆண்டனிக்கு.  நிதானமாக சிறப்பாக நின்று நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. கடைசி வரி கேரக்டரின் தன்மையின் ரிதம் மாறாத நடிப்பு.  
 
எடுத்த உடன் ஒரு சண்டைக்காட்சி, அப்புறம் ஊட்டி, அப்பா- மகள் வாழ்க்கை , ஸ்கூல் , பாசம் , நேசம், என்று படத்தின் முக்கிய திருப்பத்துக்கான முன்னேற்பாடுகளை முதல் பாதியில் ஆற அமர நிதானமாக வடிவமைக்கும் இயக்குனர் மாறன் , இடைவேளைக்கு பிறகு எழுத்திலும் இயக்கத்திலும் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார். 
 
மகளைக் காப்பாற்ற சூர்யா  சந்திக்கும் மனிதர்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள் , அடுத்தடுத்து அலையென மலையென வரும் தடைகள்  என்று சிறப்பான எழுத்தும் இயக்கமும். 
 
அதுவும் அருவி மதன் கேரக்டரிடம் சூர்யா அடி வாங்கும் இடம், அதற்கும் ஹரி ப்ரியா கேரக்டருக்கும் இடையில்  சூர்யா  கேரக்டர் சிக்கிப் படும் பாடு, இதற்கு மேல் என்னதான் செய்ய முடியும் என்ற நிலை, மற்ற யாருக்கும் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்று நினைப்பதாலே சூர்யாவுக்கு  வரும் பிரச்னைகள், இறுதியில் அவன் எடுக்கும் முடிவு  என்று திரைக்கதையின் போக்கு அபாரமாக இருக்கிறது 
 
அதிலும் ஸ்பெஷல் பாராட்டாக , அவ்வளவு கனமான இரண்டாம் பகுதிக் காட்சிகளுக்குள் பட்டாசு காமெடிகள் படார் படார் என்று வெடித்து கலகலக்க வைக்கிறது. 
 
 இரண்டாம் பாதையில் முன் கதைகளை சுவாரசியமாக சொல்லும் வகையில்  விஜய் ஆன்டனியின் எடிட்டிங்கும் மாறனின் திரைக்கதையும் அபாரமாக இணைந்து செயல்பட்டிருக்கிறது. 
 
உள்ளம்  உருக்கும்  பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் கனம் கூட்டுகிறார் விஜய் ஆண்டனி. 
 
ஊட்டியின் அழகைக் காட்டி ரிலாக்ஸ் செய்வதிலும் சரி, உணர்ச்சிகரமான காட்சிகளை  சிறப்பாக பதிவதிலும் சரி, சிறப்பாக பங்காற்றி இருக்கிறது ராஜீவ் ராஜேந்திரனின் ஒளிப்பதிவு. 
 
தனது சிறப்பான மழலை நடிப்பால் படத்தை அற்புதமாக தங்குகிறாள் சிறுமி லிதான்யா. பளீர் சிறப்பு, சரியான மாடுலேஷனில் நீண்ட வசனங்களையும் இயல்பாக பேசுவது , குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்கள் என்று  உள்ளம் கொள்ளை கொள்கிறாள். 
 
முன்திக் கொண்டு முன்னே வந்து சிரிக்கும் முந்திரிக்கொட்டை உதடுகள், அழகான கண்கள் , லாங் ஷாட்களில்  வழக்கமாக பார்க்கிற பெண் போலவும் குளோஸப்களில் ஸ்பெஷலாகவும்  தெரியும்  தோற்றம்… இவற்றோடு கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் பிரீத்தி அஸ்ராணி . 
 
காமெடி காட்சிகளில்   முருகானந்தம் சிறப்பு. 
 
சிக்கலான கேரக்டரில் சிறப்பாக செய்து இருக்கிறார் ஹரிபிரியா இசை.  வித்தியாசமான தோற்றம்  காட்டுகிறார் இன்னொரு ஹரி பிரியா 
 
 அருவி மதன், பக்ஸ்  குமார் நடராஜன் ஆகியோரும் சிறப்பு. 
 
காதலித்த பெண்ணை காப்பாற்ற போகாமல் யாராவது ஒருவன் ஓர் அனாதைக் குழந்தைக்காக  நிற்பானா என்றெல்லாம் கேட்கத் தேவை இல்லை. அதுதான் அவனது கேரக்டர் . அது எம்பதி சம்மந்தப்பட்ட விஷயம். அப்படிப்பட்ட ஒருவன்தான் இவ்வளவு இடர்களையும் தாங்கும் நபராக இருப்பான் 
 
முதல் பாதியில் பல  காமெடி வசனங்கள்  எந்த பயனும் இல்லாமல் ஃபில்லர்களாக வருகின்றன. அவற்றை எல்லாம் நீக்கி இருக்கலாம் . கனமான இரண்டாம் பகுதியை இன்னும் ஃபிரஷ்ஷாக எதிர்கொள்ள ஆடியன்ஸுக்கு அது உதவி இருக்கும் . 
 
குழந்தையைக் காப்பது சரி . அதற்காக இவ்வளவு  உடைப்புகள் , இழப்புகள் நடப்பது போல காட்ட வேண்டுமா என்ற கேள்வி வருகிறது. கடைசியில் அதே கதைப்போக்கு எல்லைக்குள்தான் கிளைமாக்ஸ் வருகிறது எனும்போது, 
 
சில விஷயங்கள் சில கேரக்டர்களுக்கு தெரியாமலே நடக்கிறது; அல்லது சொல்லப்படவில்லை ; சொல்லும் தரத்தில் அவர்கள் இல்லை என்ற ரீதியில்  . பொய்மையும் வாய்மை உடைத்து என்ற பாணியில்… இன்னும் கொஞ்சம்   மவுனமாக ஒரு கவிதை போல கிளாஸ் ஆக சில விஷயங்கள் சொல்லி இருக்கலாம். 
 
எனினும் விதவிதமான ஆயுதங்கள், துப்பாக்கிகள் ,  ரத்தம், சதைச்  சிதறல், அழுக்கு, வியர்வை, போதைப் பொருட்கள் , கெட்ட வார்த்தை இவை ஏதும் இல்லாமல், அன்பு , பாசம், தியாகம், சரியான சமயங்களில் காமெடி என்று உணர்வுகளுக்கு மகுடம் சூட்டும் படமாக வந்திருக்கிறது அப்பா குட்டி  
 
மொத்தத்தில் அப்பா குட்டி… தெய்வத் தகப்பன். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *