சத்தியவான் சாவித்ரி @ விமர்சனம்

டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் மற்றும் ஸீ ஸ்டுடியோஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி சக்திவேல் தயாரிக்க,கீர்த்தி சுரேஷ் , மிஸ்கின், சாருகேஷ், பால சரவணன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா சகா நடிப்பில் பிரவீன் எஸ் விஜய் எழுதி இயக்கி இருக்கும் படம். 

சத்தியவான் சாவித்திரி புராணக் கதையை வைத்து கமல் ஸ்ரீதேவி நடிப்பில் 1977 ஆம் ஆண்டு மலையாளத்தில் வந்த சத்தியவான் சாவித்திரி என்ற படம் அதே பெயரில் தமிழிலும் மொழி மாற்றப்பட்டு வந்தது. 
 
ஆயுள் முடிந்த சத்தியவானின் உயிரை மீட்க,  எமன் பாசக் கயிறோடு வந்து உயிரை மாய்த்து,  சத்தியவானை மேலோகத்துக்குக் கொண்டு போக , எளிய பெண்ணான சாவித்ரி கணவன் மேல் கொண்ட பாசத்தாலும் தனது பத்தினித் தன்மையாலும்,  எப்படி கணவனின் உயிரை மீட்டு அவனோடு  நீண்ட காலம் வாழ்ந்தாள்  என்பது பற்றிய கிராமத்துக் கூத்தை சிறுவயதில் பார்த்தவள் சாவித்ரி( கீர்த்தி சுரேஷ்)
 
ஆனால் அந்தக் கூத்தில் சத்தியவனாக நடிக்கும் நபர் தினமும் குடித்து விட்டு சாவித்ரியாக நடிக்கும் பெண்ணையும் (பிரிகிடா சகா) அவளது அப்பாவான- எமனாக நடிக்கும் நபரையும் ( ஜி எம் குமார்) கொடுமைப்படுத்துவான். 
 
ஒருமுறை அந்தப் பெண்ணிடம் , ”அவர்தான் தினமும் உங்களை அடிக்கிறாரே அப்புறம் ஏன் அவர் உயிரை காப்பாத்துறீங்க/”  என்று  சாவித்திரி கேட்க , ”ஒரு குறிப்பிட்ட வயசில்  உனக்கும் அது புரியும்” என்று சொல்லி இருப்பாள் அந்த கூத்து நடிகை. 
 
எமனிடம் வாதாடிய  பெண் பற்றிய  கூத்து பார்த்ததாலோ என்னவோ, பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சட்டம் படிக்கிறாள் சாவித்ரி.  சென்னைக்கு வந்து மிகப்பெரிய லாயரான மார்க்கண்டேயனிடம் (மிஸ்கின்) ஜூனியராக  சேர வேண்டும் என்று விரும்புகிறாள். 
 
ஆனால் அதை எல்லாம் விரும்பாத பெற்றோர் அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்ய, பெண் பார்க்க  வரும் நபரின் (சாருகேஷ்) உதவியை நாடுகிறாள் சாவித்ரி. ஆனால் உதவுவது போல நடித்துஉடனடி  திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விடுகிறான் அவன். 
 
கல்யாணம் நடக்கிறது. 
 
மணமகனின் அம்மாவுக்கும் மருமகள் வேலைக்கு போவதில் விருப்பம் இல்ல. அம்மாவுக்கு பயம் என்றாலும்  , சாவித்திரியை அம்மாவுக்கு தெரியாமல் மார்க்கண்டேயனிடம்  பணி புதிய அனுமதிக்கிறான் கணவன் .இருவருக்கும் இணக்கம் வருகிறது.கர்ப்பமாகிறாள் சாவித்ரி 
 
ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் மரணங்கள் நடந்த ஒரு விஷயத்தில் மருத்துவமனை டீன் மீது  லஞ்சம் வங்கியதாகப்  புகார் வர, அவருக்கு எதிராக  வாதாடும் மார்க்கண்டேயன்  கேசில் ஜெயிப்பதில் குறியாக இருக்கிறார். ஆனால் டீன் நல்லவர் என்பதை அறியும் சாவித்ரி மார்க்கண்டேயனிடம் அதைச்  சொல்ல 
 
கோபப்படும் மார்க்கண்டேயன், ” அவன் நல்லவனா கெட்டவனா என்பது முக்கியம் இல்லை. எனக்கு  கேஸ்ல ஜெயிப்பதுதான் முக்கியம்” என்கிறார் 
 
எனவே டீனுக்கு ஆதரவாக தனது குருவான மார்கண்டேயனுக்கே எதிராக களம்  இறங்குகிறாள் சாவித்ரி. 
 
இந்த சமயத்தில் சாவித்ரியின் கர்ப்பம் கலைகிறது  
 
டீன் வழக்கில் சாவித்ரி ஜெயிக்கிறாள்.  மார்க்கண்டேயன் அவள் மீது வஞ்சம் வைக்கிறார் . 
 
இந்த நிலையில்  தான் பணிபுரியும் நிறுவனத்தின் சக பெண் அதிகாரியை( ஷில்பா  மஞ்சுநாத்)  கொன்ற காரணத்துக்காக சாவித்ரியின் கணவனை போலீஸ் கைது செய்கிறது.  ஆதாரங்கள் வலுவாக இருக்கிறது.சாவித்ரியின் கணவனுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று முனைப்போடு களம் இறங்குகிறார் மார்க்கண்டேயன்.
 
நடந்தது என்ன  என்பதற்கு மாத்தி யோசி பாணியில் ஒரு கிளைமாக்ஸ் சொல்கிறார்கள். 
 
சத்தியவான் சாவித்திரி புராணக் கதையை பயன்படுத்திய விதம் அருமை. குறிப்பாக கூத்துகாரப் பெண்ணிடம் சிறுமி கேட்கும் கேள்வி,   கூத்தில்  எமன் சத்தியவான் உயிரை வாங்க முயல , நிஜத்தில் சத்தியவானாக நடிப்பவர் எமனாக  நடிப்பவரின் உயிரை தினமும் வாங்குவது…இப்படி,  யோசித்தால் சில ரசிப்புக்குரிய விஷயங்கள் உண்டு.   
 
மாப்பிள்ளை திடீரென உடனே திருமணத்துக்கு சம்மதம் சொல்வது, கன்னத்தில் கொடுக்கும் அறைக்குப் பிறகு திடீர் முத்தம்.. இப்படி  படத்தின் ஆரம்பத்தில் வரும் சில  குட்டிக்குட்டி திருப்பங்கள் கவனிக்க வைக்கின்றன . 
 
”நீங்க கட் பண்ண கட்  பண்ண ஒருத்தர் கால் பண்ணா அது அவங்களுக்காக பண்ற கால் தான்னு அர்த்தம் இல்லை.உங்களுக்காக பண்ற போனாகவும் இருக்கலாம்” என்ற வசனம் நைஸ் 
 
 ‘யூகிக்க முடியாததை சாத்தியப்படுத்து’ என்ற ரீதியில் எழுதப்பட்ட கிளைமாக்ஸ் சிறப்பு. 
 
மார்க்கண்டேயனாக அதிரடியாக நடித்திருக்கிறார் மிஸ்கின் . டெம்போ ஏற்றுகிறார்.  
 
கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க இருக்கிறார் . 
 
அருள் வின்சென்டின் ஒளிப்பதிவு ஒரு கோர்ட் ரூம் டிராமாவுக்குள் என்ன செய்ய முடியுமோ அதை செய்து இருக்கிறது.
 
சாம் சி எஸ் சின் பின்னணி இசை கவனம் பெறுகிறது. 
 
ஆனால் இவற்றுக்காக எவ்வளவு தங்குவது?
 
ஒரு படம் போராடிக்கிறதா என்பது தெரிய பத்து நிமிடமாவது ஆகும் . ஆனால் எடுத்த உடனே போரடிக்கும் படங்கள் ரொம்ப குறைவு.
 
காமெடி என்ற பெயரில் பாலசரவணன் படுத்தி எடுக்கிறார்  . ஆனால் காரணம் அவரில்லை. அங்கே கீர்த்தி சுரேஷ் நசநசவென்று பேசும் விதமும் அப்படியே. 
 
டெம்ப்லேட் காட்சிகள் டெம்ப்லேட் வசனங்கள்… பொதுவாக ‘சினிமா கோர்ட்டுகளில் நடப்பது எல்லாம் நிஜக் கோர்ட்டுகளில் நடக்காது.சினிமாவில் லாஜிக் இல்லாமல் எதையாவது செய்வார்கள்’ என்று சொல்வார்கள் இல்லையா? 
 
ஆனால் இந்த சினிமாவின்  கோர்ட்டில்  நடக்கும் நம்ப முடியாத காட்சிகள் வேறு எந்த சினிமா கோர்ட்டுகளிலும் நடக்காதுடா சாமி. 
 
விசாரணை காட்சிகளும் சுவாரஸ்யமாக எழுதப்படவில்லை. 
 
விட்னஸ் இன்ட்ரஸ்ட் பற்றி முன்பே பேசி இருக்கும்   நிலையில் ,  ‘ஒரு வழக்கில் விட்னஸாக இருக்கும் ஒருவர் வழக்கறிஞராக வாதாட முடியாது’  என்பதை ஏதோ பெரிய  திருப்பம் மாதிரி,  பில்டப் கொடுத்து  காட்டுவது எல்லாம் எதுக்கு ?
 
அட்லீஸ்ட் ரைட்டிங் டேபிளில் வெட்டி  எறியாவிட்டாலும்  எடிட்டிங் டேபிளிலாலாவது வெட்டி குப்பையில் போட வேண்டாமா ? என்ன சிம்ரன் இதெல்லாம். 
 
குடும்பக் காட்சிகளில் நாடகத்தன்மை, வக்கீல் மருமகள்கள் பவர் தெரியாத காட்சிகள்,  ஆரஞ்சு ஜூஸ், அறியாத மாத்திரை என்று  பலமுறை கரைத்துக் குடித்து  பாத் ரூம் போய் அந்த தண்ணீரும் ஆவியாகி விட்ட அளவுக்கு பழைய காட்சிகள் ..
 
கிளைமாக்ஸ்  என்ன என்று சொல்லப்பட்ட பிறகும் அதை நீட்டி முழக்கி விலாவரியாக சொல்லி பொறுமையை சோதிக்கும் அளவுக்கு பக்குவமின்றி எழுதப்பட்ட  திரைக்கதை மற்றும் எடிட்டிங் பேட்டர்ன்…
 
இதுதான் விஷயம் எனில் அந்த புருஷன் மூதேவி  அவ்வளவு ஆர்வமாக ஏன்  உடனடி கல்யாணத்துக்கு ஓகே சொன்னது என்ற –அடிப்படையையே தகர்க்கும் -கேள்வி,  
 
– என்று படம் ரசிகர்கள் எனும் கோர்ட்டாரின் நேரத்தை வீணடிக்கிறது படம். 
 
ஆனால் திரையரங்கோ ரசிகர்களோ தேவை  இல்லை  என்று சொல்லும் அளவுக்கு” கீர்த்தி சுரேஷ் இருக்காக.. மிஸ்கின் இருக்காங்க.. ” என்று பொம்மை காட்டி, படத்தின் தயாரிப்பு செலவை விட அதிக விலைக்கு  ஓ டி டி யில் விற்று காசு பார்த்து விட்டார்கள் தயாரிப்பாளர்கள். 
 
இது போன்ற படங்கள் தயாரிப்பாளருக்கு பணம் சேர்க்கலாம். ஆனால் படைப்பாளிக்கு  பெரிதாக பலன் தராது.
 
மொத்தத்தில் சத்தியவான் சாவித்திரி… அப்ஜெக்ஷன் சஸ்டைன்ட் 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *