அருள்வான் @ விமர்சனம்

90 பிக்சர்ஸ்  புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ் ஜி சரவணன் தயாரிக்க, அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், சிறுமி கிருத்திகா, ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ் நடிப்பில் கணேஷ் விநாயக ன்   கதை திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.

மலைப்பகுதியில் வாழும் காடர் இன மக்களின் குடியிருப்பு. 
 
கந்தன் – அமரவல்லி தம்பதியின் ( ஆரவ்- ரம்யா பாண்டியன்) மகள் குறிஞ்சி ( சிறுமி கிருத்திகா) . காலகாலமாக அங்கு வாழும் மக்களுக்கு,  எல்லா விதமான தொல்லைகளும் கொடுக்கும் வனத்துறை அதிகாரி ஒருவர் ( ஜான் விஜய்)
 
மலைப்பகுதிகளை வெளிநாட்டுக்காரர்ளுக்கு  வேலி போட்டுக் கொடுத்து, அங்கே போதை காளான் வளர்க்க அனுமதி கொடுத்து  விட்டு, அங்கு வாழும்  மக்களை அவர்கள் குடியிருப்பில் இருந்து காலி செய்து நிலமற்றவர்களாக்க,  எல்லா வேலைகளும் செய்கிறார். அவர். 
 
அந்த மக்களின் கிராமத் தலைவரும் அமரவல்லியின் தந்தையுமான மூப்பனிடம் ஏமாற்றிக் கைநாட்டு வாங்கி , எல்லா இடத்தையும் வாங்கி விட்டதாக அடாவடித்தனம் செய்கிறார் அந்த வன அதிகாரி. 
 
அதிர்ந்து போன மூப்பன் பேத்தி குறிஞ்சியிடம், ” நீ பெரிய மனுஷி ஆனதும் உனக்கு கல்யாணம் செய்து  வைத்து முடக்கி விடுவார்கள்; எப்படியாவது படித்து விடு ” என்று சொல்லிவிட்டு, முட்டாள்தனமாக கைநாட்டு போட்ட தனது கட்டை விரலை , வெட்டி எறிந்து விட்டு செத்துப் போகிறார். 
 
‘கலெக்டரை (அருள்நிதி) பார்த்தால் நாமும் படிக்கலாம்; நம்ம ஊருக்கு பள்ளிக்கூடம் கொண்டு வந்து மற்றவர்களையும் படிக்க வைக்கலாம்” என்று முடிவு செய்கிறாள் குறிஞ்சி  
 
ஆனால் பெற்றோரும் ஊரும் அவள் விருப்பத்துக்கு மாறாக அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க முயல, அந்தக் காடு தவிர ஏதும் அறியாத அந்தச்  சிறுமி,  யாரிடமும் சொல்லாமல் கலெக்டரைப் பார்த்து பள்ளிக்கூடம் கேட்க,   இறங்கி வருகிறாள். 
 
காட்டில் பெரிய மிருகங்களை பார்த்தும் அஞ்சாத அவள், நாட்டில் கொடூர மனித மிருகங்களை பார்த்து நடுங்குகிறாள் . மலைவாழ்  மக்களின் மொழி மட்டும் பேசும் அவளுக்கு   நடந்தது என்ன? கலெக்டரை சந்தித்தாளா?  படித்தாளா? பள்ளிக்கூடம் அவள் ஊருக்கு வந்ததா? என்பதே அருள்வான்.
 
கண்ணுக்கும் மனதுக்கும் இதமும் ஏகாந்தமும் அளிக்கும் அந்த லொக்கேஷன்!  காலுக்கு கீழே மிதக்கும் மேகங்கள், ஓங்கி உயர்ந்த மரங்கள், ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகள், விதம்விதமான வண்ண வானம், மாசு படாத ஒளிக்கதிர்கள், என்று காட்டை கவிதையாகக் கொடுத்து ஆரம்பிக்கிறது படம். அற்புதமான ஒளிப்பதிவில் படம் பார்ப்பவரை மயக்குகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். 
 
காடர் மக்களின் வாழ்க்கையை சிறப்பாக ரசிக்கும்படி படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர் கணேஷ் விநாயக். படப்பிடிப்பு நடத்த சிரமமான இடங்களில் எல்லாம் படத்தை எடுத்து சிறப்பான காட்சி அனுபவம் தருகிறார். 
 
ஜி வி பிரகாஷ் குமாரின் பின்னணி இசை,  இயற்கையின்  மொழியை மனசுக்குள் கம்பீரமாக சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கிறது. பாடல்களும் இனிமை . லால்குடி இளையராஜாவின் கலை இயக்கம் வன வாழ்க்கைச் சூழலை  உணர்த்துகிறது. லீலாவதியின் மலைவாழ் நடனங்கள் கவனிக்க வைக்கிறது.
 
யுகபாரதியின் வசனங்கள் மற்றும் பாடல்கள்,  லாரன்ஸ் கிஷோரின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தி. 
 
கலெக்டர் கேரக்டரில் மிக இயல்பாக சிறப்பாக நடித்துள்ளார் அருள்நிதி. தோற்றப் பொருத்தம் சிறப்பு. பெரிய இடைவெளி  விடாமல் தொடர்ந்து படங்கள் தரலாம் அருள்நிதி  
 
வேலன் வெறியாட்டம் ஆடும் காட்சிகளில் பாராட்டுப் பெறுகிறார் ஆரவ். மிக இயல்பாக வளைய வருகிறார் ரம்யா  பாண்டியன். 
 
தனது அற்புதமான உணர்வுப்பூர்வமான ஆழமான சிறப்பான  நடிப்பால்,  உலக உருண்டையை சுமந்த ஹெர்குலிஸ் மாதிரி, படத்தை தூக்கி சுமக்கிறார் சிறுமி கிருத்திகா, 
 
கல்வி குறித்த கனவு  மனதில் விதைக்கப்படும் இடம், பள்ளிக்கூடத்தைப் பார்த்து ஏங்கி நின்று ஆசிரியரிடம் தனது ஏக்கத்தை  சொல்லும் இடம்,  பூப்பெய்தி கல்யாண ஏற்பாடு நடக்கும்   சூழலில் படிக்க வைப்பார்களா இல்லையா என்ற பதட்டம்,  கலெக்டர் மாளிகை,  வீடு ஆகியவற்றை பார்த்து பிரமிக்கும் இடம், உண்மைகள் அறிந்து உடையும் இடம் என்று  பிரம்மிக்க வைக்கும் நடிப்பை கொடுத்து முதலிடத்துக்குப் போகிறார் கிருத்திகா.. விருதுக்குரிய நடிப்பு. வாழ்த்துகள்; பாராட்டுக்கள். 
 
கொடூர வனத்துறை அதிகாரியாக ஜான் விஜய்,  மலைவாழ் மக்களுக்காக உழைக்கும் பத்திரிகையாளராக காளி வெங்கட், கலெக்டர் பி ஏ வாக வி டி  வி கணேஷ் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். 
 
கீழே இறங்கி வந்தால் மக்களிடம் தமிழில் கூட பேசத் தெரியாத சிறுமி ,  எப்படி இங்கே வந்து கல்விக்கு போராடினாள்  என்பதுதான் படத்தின்  அடிநாதம். ஆனால் அவள் மலையிலேயே  பல காட்சிகள் தமிழில் பேசுவதை குளோசப் எல்லாம் வைத்து எடுத்திருக்கிறார் இயக்குனர். அதனால் அந்த முக்கியமான விஷயம் பலவீனமாகிறது . அநியாயம் . மலைவாழ் மக்கள்  மொழியிலேயே பேச வைத்து மேலே தமிழ் வசனங்களை ஒலிக்க விட்டிருக்கலாம். 
 
அங்கு வாழும் மக்கள் மலையாளமும் தமிழும் கலந்த மொழியில் பேசுகிறார்கள் என்று ஒரு வசனம் . உண்மையில் ‘தமிழும் மலையாளமும் கலந்த மொழி என்றுதானே சொல்ல வேண்டும்? தவிர காட்டிலாக அதிகாரிக்கு பாண்டியன் என்று எல்லாம் பெயர் வைத்திருப்பது ஏஹோ உள்குத்து இருப்பது போல தோண்றுகிறது)
 
பொதுவாக நம் மாநில மலைவாழ் மக்கள் மொழியில் தமிழ் , நசுக்கப்பட்ட தமிழ் வார்த்தைகள் , சமஸ்கிருதம் கலக்காத தமிழில் இருந்து போன மலையாள வார்த்தைகள் ஆகியவைதான்  இருக்கும் ஆக அந்த மலையாள வார்த்தைகளும் தமிழ் தான்.அதே போல அந்த மொழிகளில் சம்ஸ்கிருத வார்த்தைகள் பெரிதாக இருக்காது. ஆனால் படத்தின் பாடல்கள் நிறைய வடமொழி வார்த்தைகள். 
 
வேல் வழிபாடு, வெறியாட்ட வழிபாடு என்று நேர்த்தியாக செய்தவர்கள் இதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். 
 
படத்தின் சில பகுதிகளில் பிரச்சார நெடியை தவிர்த்து உணர்வுப்பூர்வத்தை அதிகப்படுத்தி இருக்கலாம். 
 
எனினும்  கல்வி, அதிலும் பெண் கல்வி, அதிலும் மலைவாழ் பெண்களின் கல்வி என்ற உயர்ந்த விஷயத்தை படம் பேசுவதால் அந்தக் குறைகள் எல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *