அவள்@ விமர்சனம்

எடாகி என்டர்டைன்மென்ட் சார்பில் நடிகர் சித்தார்த் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் வழங்க,

ஆண்ட்ரியா , அதுல் குல்கர்னி, சுரேஷ் , அனிஷா விக்டர் நடிப்பில் 

மிலிந்த் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரின் எழுத்தில்  மிலிந்த் இயக்கி இருக்கும் படம் அவள் .  ரசனைகாரியா இவள்? பார்க்கலாம் . 
 
இந்தியாவின் வடகிழக்குப் பள்ளத்தாக்குப் பகுதி நகரம் ஒன்றில் உள்ள மருத்துவ மனையில் ,  பர்கின்சன் நோய்க்காக – மூளைக்குள் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும், 
 
அறுவை சிகிச்சை செய்யும் பணியில் உள்ள மருத்துவன்  கிரிஷ் (சித்தார்த்) . அவனது காதல் மனைவி லக்ஷ்மி (ஆண்ட்ரியா) . 
 
மருத்துவமனையில் அவனது சீனியர் மருத்துவர் பிரசாத் (சுரேஷ்) 
 
கிரிஷ்ஷின் பக்கத்து  வீட்டுக்குக் குடி வருகிறது பால்  டிகோஸ்டா என்ற எஞ்சினியரின் (அதுல் குல்கர்னி ) குடும்பம் .
 
அவருடன் அவரது அப்பா கர்னல் டிகோஸ் டா (யூசுஃப் ஹுசைன்), மனைவி லிச்சி (பாவனா அனோஜா),
 
பாலின் இறந்து போன முதல் மனைவிக்குப் பிறந்த இளம் வயது மகள் ஜென்னி (அனிஷா விக்டர்) ,
 
லிச்சிக்கு பிறந்த மகளான சிறுமி சாரா (குஷி ஹசாரே) ஆகியோரே அந்த குடும்பம் .  உடன்  ஒரு வேலைக்காரி நீலிமா (மந்தாகினி கோஸ்வாமி) 
 
விருந்து ஒன்றில் இரண்டு வீட்டாரும் சந்தித்துப் பழகுகின்றனர் 
 
ஒரு நிலையில் ஜென்னிக்குப் பேய் பிடிகிறது. . அவள் கிணற்றுக்குள் குதிக்க அவளை காப்பாற்ற, 
 
குதிக்கும் கிரிஷும் கிணற்றுக்குள் எதிர்பாராத அதிர்வுக்கு ஆளாகிறான். எனினும் காப்பாற்றுகிறான் . 
 
ஒரு நிலையில் பேயின் உருவத்தை ஒவ்வொருவரும் பார்த்தும் நம்ப மறுக்கின்றனர் . ஆனாலும் ஒவ்வொருவருக்கும்  நம்பும் சூழ்நிலை ஏற்படுகிறது . 
 
விசாரித்துப் பார்க்கையில் பாலின் குடும்பம் வசிக்க்கும் அந்த வீட்டில்  1935 ஆம் ஆண்டு  வாழ்ந்த, 
 
 ஒரு சீனத்துப் பட்டு வியாபாரியின் குடும்பம் கொடூரமாகக் கொலையான தகவல் கிடைக்கிறது . 
 
அந்த   சீனப் பெண்ணின் ஆவிதான்  பால் குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி மிரட்டுவது தெரிகிறது . 
 
ஒரு நிலையில் கிரிஷ் அந்தக் குடும்பத்துக்கு உதவுவதால் கிரிஷ் அவனது மனைவி ஆகியோரையும் மிரட்டி தீங்கு செய்கிறது ஆவிகள் . 
 
வேறு வழி இல்லாமல்  பாலின் குடும்பம் அந்த வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்கையில் நிலைமை கை மீறிப் போய் விடுகிறது .
 
சீன வியாபாரியின் ஆவி சிறுமி சாராவை கொன்று தனது எண்பதாண்டு ஆசை ஒன்றை  நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது . 
 
அந்த ஆவி யார் மூலம் அதை சாதிக்க முயன்றது?  நடந்தது என்ன ? என்பதை,  ஓர் அட்டகாசமான சமூக அக்கறை விஷயத்தோடு சொல்லும்  படம்தான் அவள் . 
 
படத்தின் துவக்கத்தில்  மங்கலான கருப்பு வெள்ளை பழைய பிரின்ட் பாணியில்  வரும் அந்த, 
 
ஒரு நிமிட சீனத்துத் தாய் மற்றும் மகளின் காட்சியே இது வழக்கமான படம் அல்ல என்பதை உணர்த்தி விடுகிறது. 
 
கிரிஷ் – லக்ஷ்மியின் காதல் , காமம்,  கட்டிலறைக் காட்சிகள் , அசால்ட்டாக அடுத்தடுத்து உதட்டு முத்தம் என்று சில காட்சிகள் !
 
பிறகு வெகு நேர்த்தியாக பேய்ப் படம் ஆகிறது . 
 
தற்காலப் பேய்ப் படங்களில் காமெடி என்ற பெயரில் நடக்கும் எந்த ஒரு கந்தரகோலமும் இல்லாத – சொல்லப் போனால் காமெடியே இல்லாத –
 
அதே நேரம் துளியும் போரடிக்காத பேய்ப்படம் என்பதே இந்தப் படத்தின் மீது ஒரு மரியாதையை தருகிறது 
 
ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் பனி படர்ந்த மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் ,
 
இருண்ட அரைகுறை வெளிச்ச வீடுகள் , ஈரச் சிகப்பு நிறப் பின்னணிகள் எல்லாம் பிரம்மிக்க வைக்கின்றன . 
 
லாரன்ஸ் கிஷோரின் படத் தொகுப்பு நிதானமான இடத்தில் நிதானமாகவும் வேகமாகப் போக வேண்டிய இடத்தில் வேகமாகவும போக, படத்தை அனுமதிக்கிறது . 
 
சிவ சங்கரின் கலை இயக்கம் படத்துக்கு எக்ஸ்ட்ரா அமானுஷ்யம் சேர்க்கிறது . 
 
கிரிஷின் பின்னணி இசை பேய்களுக்கு இணையாக பயமுறுத்துகிறது .  
 
விஷ்ணு கோவிந்த் , ஸ்ரீ சங்கர், விஜய் ரத்தினம் ஆகியோரின் ஒலி வடிவமைப்பு அபாரம் . பல இடங்களில் பய புள்ளைக,  மயிர்க் கூச்செறிய வைக்கிறார்கள் . 
 
ஷிவா மல்லேஸ்வர ராவின் ஒப்பனை மற்றும் வரைகலையில் பேய்களின் தோற்றங்கள் அசத்துகின்றன. 
 
மிக அட்டகாசமான படமாக்கலில் பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மிலிந்த் .
 
சித்தார்த், ஆண்ட்ரியா சிறப்பாக நடித்துள்ளனர் ( ஆண்ட்ரியாவை ‘ ஆண்ட்டி’ ரியா ஆக்கியதற்கு கோடானு கோடி நன்றிகள் ஏசப்பா !)
 
ஜென்னியாக நடிக்கும் அனிஷா விக்டர் தேர்ந்த நடிப்பு . நல்ல முகபாவனைகள். , சாராவாக நடிக்கும் குஷி ஹசாரே  நெகிழ்விக்கிறார் .
 
இப்படி எல்லா விசயங்களும்  சிறப்பாக இருந்தும்……
 
 இவை எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கிறது திரைக்கதை . 
 
இதுதான் ஒரு நல்ல படத்துக்கு இலக்கணம் ! 
 
படத்தின் அடிப்படை விசயத்தை ஜஸ்ட் லைக் தட் முதல் காட்சியாக சொல்லி , பின்னர் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, இயல்பாக காட்சிகள் அமைத்த விதம சிறப்பு என்றால் , 
 
அப்படி அமைகிற காட்சிகளில் இருந்தே அடுத்ததடுத்து வரும் காட்சிகளை சிறப்பாக உருவாக்கி இருக்கும் விதம் அபாரம் . 
 
படத்தின் மெயின் கதைக்கு பொருத்தமாக படம் முழுக்க பூடகமாக வரும் காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன.
 
கிரிஷ் செய்யும் மூளை ஆப்பரேஷனை பேய் தொந்தரவு செய்வதை ஒரு  காட்சியாக முடித்துக் கொள்ளாமல் அங்கே இருந்து, 
 
ஒரு முக்கிய விசயத்தை டெவலப் செய்து பேயை அங்கே இருந்து எழுப்பி இருந்தால் படம் இன்னும் ஒரு உயரத்தை தொட்டு இருக்கும் .
 
எனினும் கூட கிளைமாக்ஸ்  ஏரியாவில் வரும்  திடீர்த் திருப்பங்கள்  மற்றும் காட்சிகள் சற்றும்  யூகிக்க முடியாதவை . ஆனால் அட்டகாசமானவை . பயமும் நெகிழ்வும் தருபவை . 
 
படத்தின் கிளைமாக்சில் சொல்லும் அந்த சமூக அக்கறை செய்தி மனதை உருக்குகிறது . சூப்பர் 
 
அவள் .. ரசிப்புக்குரிய ராட்சஷி !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *