BP 180 @ விமர்சனம்

ரேடியன்ட் இண்டர்னேஷன் பிலிம்ஸ் ,அதுல்  இந்தியா  மூவிஸ், உத்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில், பிரதிக் D  சத்பார், அதுல்  எம் போசாமியா, ராஜேஷ் தாகூர், ப்ரெஷ் ஜெகதா , கிரண் படேல் ஆகியோர் தயாரிக்க, தான்யா ரவிச்சந்திரன்,மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி, கே.பாக்யராஜ், அருள் தாஸ்,தமிழ் ஆகியோர் நடிப்பில்,ஜேபி என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம். 

லிங்கா என்ற பிரமுகரின்  ( கே, பாக்யராஜ்) நம்பிக்கையான,  ரத்த வெறி பிடித்த தாதா ஒருவன் ( டேனியல் பாலாஜி). போலீஸ் , அரசியல்வாதிகள், அதிகாரிகள் எல்லாம் தாதா சொன்னதை செய்வார்கள். தாதாவுக்கு நெருங்கிய நண்பன் ஒருவன் ( அருள்தாஸ்)
 
பெரியவரின் மகள் அப்பாவுக்கு தெரியாமல் ஒருவனைக் காதலித்து அவனோடு இருசக்கர வாகனத்தில் போகும் போது விபத்தில் சிக்கி இறந்து விடுகிறாள். அவளது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட ,  விஷயம் தெரிந்து அங்கே வரும் பெரியவர் தனது மகள் உடலை அறுக்காமல் (போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் ) தேர்ச்சி சொல்கிறார். அங்கே இருக்கும் நேர்மையான தைரியமான ஸ்ட்ரிக்ட்டான டாக்டர் தங்கம் ( தான்யா ரவிச்சந்திரன்)  போஸ்ட் மார்ட்டம் செய்தால்தான் மரணத்தின் உண்மைக் காரணம் தெரியும் என்று மறுக்கிறார். 
 
லிங்கா தாதாவிடம் மகளின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் வாங்கும் வேலையை முடிக்கச் சொல்ல, தாதாவும்  அவனது நண்பனும்  காவல்துறை,  உயர் அதிகாரிகள் , அரசியல்வாதிகள் மூலம் முயன்ரும் டாக்டர் தங்கம் சம்மதிக்க மறுக்கிறார். 
 
தாதா போனில் டாக்டரை கேவலமாகத் திட்டி மிரட்ட, பதிலுக்கு கொந்தளிக்கும் டாக்டர் போஸ்ட்மார்ட்டம் செய்து முடிக்கிறார். 
 
மீண்டும் போனில் தாதா  மிரட்ட , பதிலுக்கு டாக்டரும் அவனிடம் சவால் விடுகிறார். 
 
ஒரு நிலையில் லிங்காவே ”பிரச்னையை இதோட விட்டுடு வளர்க்க வேண்டாம் ” என்று சொல்ல , தாதா அதை தனது தனிப்பட்ட அவமானமாகக் கருதி டாக்டரை பழிவாங்க நினைக்கிறான். 
 
டாக்டரின் புகாரை எடுத்துக் கொள்ளும் கமிஷனரை கொல்கிறான்.
 
டாக்டரின் தங்கையான ஒரு காவலரை நிர்வாணப் படுத்தி அவமானப்படுத்துகிறான் . 
 
டாக்டர் என்ன செய்தார் . என்ன ஆனது என்பதே படம் . 
 
மிக மிக அட்டகாசமான சிறப்பான பிரமாதமான கதை . மறைந்த டேனியல் பாலாஜி நிஜ தாதாவை கண்முன் கொண்டு வருகிறார். தான்யா ரவிச்சந்திரன், பெண் சிங்கம் என ஜொலிக்கிறார். 
 
அவருக்கு தங்கையாக வருவபவர் , மருத்துவமனை  சீனியர் பெண் டாக்டர் , சக டாக்டராக நடித்து இருக்கும் பெண் , அருள்தாஸ் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் . 
 
ஜிப்ரானின் பின்னணி இசை  சபாஷ் .  ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் சராசரிக்கு மேல். 
 
சீரியஸ் கேரக்டரில்  பாக்கியராஜ் நடிப்பு ஆரம்பத்தில் படு சொதப்பல் . அவர் அதிரும் போதும் திடுக்கிடும் போதும் கூட அவரது பாடி லாங்குவேஜ் காமெடியாக இருக்கிறது . பின்னால் வரும் காட்சிகளில் ஓகே என்று சொல்லும்படி நடிக்கிறார். 
 
படத்தின் கதை என்று  நீங்கள் படித்ததில் முதல் இரண்டு பாரா இருக்கே, பெரிய அல்ஜீப்ரா நாலேஜ் இருந்தால்தான் அதை புரிந்து கொள்ள முடியும் . அவ்வளவு குழப்பு குழப்புகிறார்கள். இயக்குனர் மிஷ்கின் உதவியாளராக சில மாதங்கள் போஸ்ட் புரடக்ஷனில் வேலை பார்த்தவராம் . அதற்காக கதாபாத்திரங்களின் கால்களை மட்டும் காட்டி  நடப்பதும் திரும்புவதுமாக ஆரம்பக்  காட்சி  போய்க் கொண்டே இருக்கும்போது  தலை சுத்துதுங்க. 
 
மிஷ்கின் நந்தலாலா படத்தில் வைத்தார் என்றால் அந்தப் படத்துக்கு அது பொருத்தம். இந்தப் படத்துக்கு அது வேண்டாத  வம்பு. சொல்லப் போனால் வீம்பு. 
 
அரசியல்வாதிகள் , உயர் அதிகாரிகள் இவர்களையே கதற வைக்கும் தாதாவையும் அவன் நண்பனையும் ஆபீசில் ஒரு மினி பரேட்  நடத்தி நடுங்க வைக்கும் கமிஷனர் , அவன் வரச்  சொன்னதற்காக  தனியே பீச்சுக்குப் போய் , அவன் கொடுக்கும் காபியையும் குடுத்து விட்டு , அப்புறமும் கேர்லெஸ்  ஆக  இருந்து சாவது (மரணத்துக்குக்  காரணம் அந்த காபி அல்ல) அர்த்தமில்லாத காட்சி எனினும்  அந்த பலூன் ஐடியா நேர்த்தி. (ஆனா அதுக்கு எதுக்கு பீச்சுக்கு  தாதா வராகி சொல்லணும்?)
 
தாதாவின் கத்தியை விட , டாக்டர்கள் பிடிக்கும் கத்தி என்பது பெரியது என்று சொல்ல வரும் விஷயம் அபாரம் . ஆனால்  அதைக் காட்ட இயக்குனர் கிளைமாக்சில் தேர்ந்தெடுத்த உத்தி குழந்தைத்தனம் . இதை விட நல்ல கிளைமாக்ஸ் உள்ளேயே இருக்கிறது . ஆனால்  இயக்குனர் வித்தியாசமா பண்றேன் என்று விபரீதம் செய்து விட்டார். 
 
BP  180 .. படமாக நார்மல்தான் . ஆனால்  நல்ல திரைக்கதை என்னும்  ஆரோக்கியம் இல்லை 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *