ஒண்டிமுனியும் நல்லபாடனும் @ விமர்சனம்

 திருமலை புரொடக்ஷன்ஸ் சார்பில் கருப்பசாமி தயாரிக்க, பரோட்டா முருகேசன், கார்த்திகேயன்,முருகன், விஜயன்,சேனாபதி, சித்ரா, கௌஷிகா, தமிழினியன் விகடன் நடிப்பில் ஜே  டி விமல் ஒளிப்பதிவில், என் டி ஆர் இசையில்,  சதீஷ் குரோசோவாவின் படத்தொகுப்பில் ஜேகே ஆண்டனியின் கலை இயக்கத்தில் சுகவனம் எழுதி இயக்கி இருக்கும் படம் .ஒண்டிமுனியும் நல்லபாடனும். 

 
முனி என்பது சுடலை மாடன், கருப்பசாமி போல துடியான கிராமிய தெய்வங்களில்  ஒன்று.  ஒண்டி என்பது தனித்து இயங்குதலைக் குறிக்கும் சொல். பாடன்  என்பது கொங்குப் பகுதியில் பாட்டாளி என்ற சொல்லின் மண்மொழி . பாட்டாளி என்ற சொல் பாடுபடுபவர் என்பதில் இருந்து வந்த சொல்,  நல்ல பாடன்  என்றால் நல்ல உழைப்பாளி என்று பொருள் .
 
கொங்கு  பகுதியில் மலை,  கற்குன்றுகள். பசிய நிலங்கள்  அடங்கிய ஒரு உள்ளடங்கிய பகுதி கிராமம்.   நிலம் நீச்சு என்று வாழும் பண்ணாடிகள். அதாவது , பண்ணையம் வைத்து இருப்பவர்கள். பண்ணை என்பது உணவுப் பொருள் விளைவிக்கப்படும் இடம். (கோழிப்பண்ணை). பண்ணையம் என்பது விவசாய நிலம்  பண்ணாடி என்றால் விவசாய நில உரிமைதாரர். பண்ணாடிச்சி என்றால் விவசாய நில உரிமைதாரரின் மனைவி  அல்லது விவசாய நிலம் வைத்து அதில் விவசாயம் செய்யும் பெண் என்று பொருள். (படத்துக்குள் இவ்வளவு இருக்கு)
 
கிராமத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட சமூக கூலியாள் நல்லபாடன் .  அவனது மகனான சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து விட , கிணற்றில் இருந்து தூக்கப்பட்டும்  உயிர் ஆபத்து நிலைக்குப் போய் விட , நல்லபாடன் தங்கள் காவல் தெய்வமான துடியான ஒண்டிமுனியிடம் . “என் மவன காப்பாத்து . உனக்கு கெடா  வெட்டறேன் “என்று வேண்டிக் கொள்கிறான். பையன் பிழைத்துக் கொள்கிறான். 
 
 ஆதிக்க சாதி பண்ணாடிகள்  இருவருக்கு இடையில்  யாருக்கு கோவில் உரிமை அதிகம் என்ற சண்டையில் சுற்றுச்சுவர் கூட இல்லாமல் காட்டில் வீற்றிருக்கும்,  அந்த ஒண்டி முனி கோவிலில் பூஜை எதுவும் செய்யக் கூடாது என்று பலகாலமாக தடை இருக்கிறது என்ற விஷயம் அப்புறம்தான் நல்லபாடனுக்கு ஞாபகம் வருகிறது.
 
பையன் வளர்ந்து இளைஞன் ஆகிறான்.ஆடும் வளர்ந்து கன்றுக் குட்டி சைஸில் நிற்கிறது. 
 
ஒண்டி முனி நடையாக நடந்து இரண்டு பண்ணாடிகளையும் பார்த்து ஒண்டிமுனி  கோவில் தடையை நீக்க கெஞ்சுகிறான் . 
 
அதில் ஒரு பண்ணாடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்காமல் செய்து, வறுமையை உருவாக்கி கடன் கொடுத்து அதிக வட்டி வாங்கி கசக்கிப் பிழிபவர். 
 
இன்னொரு பண்ணாடி தாழ்த்தப்பட்ட மக்கள் ஏதாவது சின்ன கோரிக்கையோடு போனால் அங்கே இருக்கும் வீட்டு வேலைகள் விவசாய வேலைகள்…. இவற்றை எல்லாம் செய்ய வைத்து வபெரும் உழைப்பை வாங்கி கொண்டு, அதன் பிறகு.  கேட்டுப்  போன  உதவியை செய்ய முடியாது என்று சொல்வதோடு செய்த வேலைக்கு கூலியும் கொடுக்காமல் அனுப்பி வைப்பவர். 
 
நல்லபாடனின்  மகளை அவளது புருஷன் நகை வாங்கி வரச்  சொல்லி அடித்து அப்பன் வீட்டுக்கு அனுப்புகிறான்.  அவ்வப்போது இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து மனைவியோடு சந்தோஷமாக இருந்து விட்டு காலையில் மனைவி மற்றும் மாமனாரை அடிப்பது அவனது வழக்கம். 
 
நல்லபாடனின்  மகன் ஒரு ஆதிக்க சாதி பெண்ணைக்  காதலிக்கிறான். அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால்  அவன்  தினசரி ஒரு நண்பனின் பைக்கை வாங்கி கொண்டு தன்னைப் பார்க்க வருவதை விரும்பாத அவள் அவனை விட்டு விலக முயல்கிறாள். 
 
உடனே ஒரு பைக் வாங்க வேண்டும் என்ற நிலை நல்லபாடன் மகனுக்கு. தன்னைக் காப்பாற்றியதற்காக ஒண்டி முனி கோவிலில் வெட்ட அப்பா வைத்திருந்த அந்த ஆட்டை கசாப்புக் கடைக்காரனிடம் விற்று பைக் வாங்குகிறான் மகன். . 
 
விஷயம் அறிந்த நல்லபாடன் கசாப்புக் கடைக்காரனிடம் கெஞ்சி  ”பணத்தை திருப்பித் தருகிறேன்  ‘ என்று சொல்லி ஆட்டை மீட்டு வருகிறான். 
 
நல்லபாடன்  மகனின் காதலி,  இரவோடு இரவாக நல்லபாடன்  வீட்டுக்கு ஓடி வருகிறாள். 
 
ஊருக்குள் மழைநீர்க்  குட்டை அமைப்பதற்காக அரசாங்கம்  ஐந்து ஏக்கர் நிலம் கேட்டு, பல நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும்   கந்து வட்டி பண்ணாடியிடம் வர , அவன் அவர்களை சரிக்கட்டி ….
 
ஊரிலேயே தாழ்த்தப்பட்ட  மக்களின் நிலமாக இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தை   நீர்க்குட்டை வெட்ட  அபகரிக்கச்  சொல்கிறான் . சம்மதம் என்று நீங்களே கையெழுத்து வாங்கி கொடுங்கள் என்று அரசாங்க ஊழியர்கள் சொல்கின்றனர். 
 
தாழ்த்தப்பட்ட மக்களை அழைக்கும்  கந்து வட்டிப் பண்ணாடி , ” ஒண்டிமுனி  கோவிலில் திருவிழா நடத்த நாங்கள் அனைவரும் விரும்புகிறோம் என்று எழுதி கையெழுத்தோ கைநாட்டோ (இடது கை  கட்டை விரல்  ரேகைப் பதிவு) வையுங்கள் என்று சொல்லி அவர்களை நம்பவைத்து அந்த கைய கைநாட்டு மூலம் அவர்கள் நிலத்தை நீர்க்குட்டை அமைக்க எழுதிக் கொடுப்பது போல கையெழுத்து வாங்கி விடுகிறான்.  ஒண்டிமுனி  திருவிழா முன்பு அந்த விஷயம் நல்லபாடனுக்கு தெரிய வருகிறது
 
இந்த நிலையில் ஆடு காணாமல் போகிறது 
 
கிடா வெட்டு என்ன ஆனது? நல்ல பாடனுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் என்ன ஆனது? நல்ல பாடன் மகன் காதல் என்ன ஆனது என்பதே இந்த ஒண்டிமுனியும் நல்ல பாடனும்  படம். 
 
படத்தின் துவக்கத்தில் அந்த கிராமிய பகுதி மலைகள் வயல்வெளிகள்  என்று காட்டும் காட்சியில்,   வானத்தில் இருக்கும் வெண் மேகங்களின் வித விதமான வடிவங்களைக் காட்டும்போதே மனதை ஈர்க்கிறது படம். இயக்குனர் சுகவனமும் ஒளிப்பதிவாளர் விமலும் அங்கேயே  படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  விடுகிறார்கள். 
 
நீண்டு  பரந்த இயற்கை வெளிகள் , பசுமையான மற்றும் காய்ந்து பறந்து கிடக்கும்  நிலங்கள் அங்கங்கே மேயும் ஆடுகள் , அங்கொன்றும் இங்கொன்றுமாய் மட்டும் கண்ணுக்குத் தெரியும் மனிதர்கள் , கொங்கு மண்ணின் தேனினும் இனிய மணிமொழி மற்றும் பேச்சில் வரும் ராக இழுப்பு என்று கண்ணுக்கும் கருத்துக்கும் இதமாக விரிகிறது படம். 
 
இயக்குனரின் திரை மொழி வழியிலான காட்சிகளை சிறப்பாகத் தொகுத்துகே கொடுத்து,  தரக்  கூட்டல் செய்கிறது  சதீஷ் குரோசோவாவின் படத் தொகுப்பு.
 
கிடா வெட்டக்  கிளம்பும்போது எடுத்து வைக்கும் பாத்திர பண்டங்கள், ஒண்டி முனி சிலை , நல்ல பாடனின்  வீடு இவற்றில் ஜேகே ஆண்டனியின் காலை இயக்கம் ஜொலிக்கிறது. 
 
என் டி ஆரின் இசை படத்துக்கு தொந்தரவாக இல்லை என்பதே  பாராட்ட வேண்டிய விஷயம்தான். 
 
பக்கம் பக்கமாக  வசனம் பேசினால் கூட தப்பு இல்லை என்கிற  காட்சிகளைக் கூட ஒரு வார்த்தை இல்லாமல்  அசைவுகளால் அழுத்தமாகப் புரிய வைக்கிறார் இயக்குனர் ( நல்ல பாடன்  வீட்டு வாசலில் அவனது மகன் காதலிக்கும் ஆதிக்க சாதிப்  பெண் வந்து நிற்கும் காட்சி)
 
ஆர்ப்பாட்டம் , கலக  மனோபாவம், வெற்றுக் கூச்சல்,  வெறியேற்றும் பசப்பல்தனம் .. இதெல்லாம் சற்றும்  இல்லாமல் தாழ்த்தப்பட்டு ஏமாற்றப்பட்ட மக்களின் வலியை,  இழப்பை,  வாதையை, உயிர் வேதனையை. ஆதிக்க சாதி ஆட்களே  கூனிக் குறுகி கூசும் அளவுக்கு அழுத்தமாக சொல்கிறது படம். 
 
அதுவும் இப்போது பண்ணாடிகளிடம் இருக்கும் நிலம் எல்லாம் ஒரு காலத்தில் அந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் , இப்போது உள்ள நிலத்தையும் அவர்கள் இழப்பது போல அதுவும் அவர்கள் இழந்த நிலம்தான் என்பதை,  தாங்கள் இழந்த நிலத்தில் நின்றே அவர்கள் சொல்லும் காட்சி  அடிவயிற்றைக் கலக்குகிறது. 
 
நல்ல பாடனாக  மிக சிறப்பாக நடித்துள்ளார் பரோட்டா முருகேசன். முதல்மரியாதை படத்தில் ”எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி…” என்று  சொல்வதன் மூலம் கலங்க வைத்த மாபெரும் நடிகர் வீராச்சாமியை நினைவு படுத்தும் முகம் முருகேசனுக்கு.  
 
முதுமை,  அதை மீறிய வைராக்கியம், பண்ணாடிகளிடம் கெஞ்சல் , மகனிடம் வரும் கோபம், மருமகன் அடித்தாலும் மறுநாள் மறந்து வரவேற்கும்  குணம் , ஆடு காணாமல் போன நிலையில்  நடக்க முடியாமல் இடுப்பை வளைத்து நெளித்து வேக நடை  நடந்து அலையும் யதார்த்தம் என்று அசத்தி இருக்கிறார் . 
 
வெற்றி எந்த வயதிலும் வரும் . லைட் மேன், போட்டோ ஃபிளட்  ஊழியர் என்று உழைத்து இப்போது இந்த நிலைக்கு வந்திருக்கும் பரோட்டா முருகேசனுக்கு இன்னும் நல்ல படங்கள் கிடைக்கட்டும் . 
 
மற்ற கேரக்டர்களிலும் வரும் எளிய முகங்கள்,  இயல்பான நடிப்பு யாவும் அருமை.  ரெண்டு பண்ணாடிச்சிகளும் பின்னி எடுக்கிறார்கள். பல கேரக்டர்களுக்கு அங்கே வாழும் முகங்களையே போட்டு அவர்கள் நடித்தவரை எடுத்துக் கொண்டு வந்து  டப்பிங்கில் அதை தரக்  கூட்டல்  செய்திருக்கும் படக் குழுவின் தொழில் நுட்ப நேர்த்தி பாராட்டுக்குரியது .
 
கிளைமாக்ஸ் அருமை.
 
இப்படி எல்லாம் பாராட்ட பல விஷயங்கள் இருந்தும் திரையரங்கில் வெளியிடப்படும்  இந்தப் படம் வணிக ரீதியாக வெற்றி  பெறுமா என்றால் கனத்த மவுனம்தான் அதற்கு பதில். 
 
மிக மெதுவாக , ஆங்காங்கே தடைகளுடன் நின்று நின்று போகிறது படம். சில முக்கியக் காட்சிகளில் சில நடிகர்களின் பங்களிப்பும் காட்சிகளை எடுத்த விதமும் செயற்கையாக இருக்கிறது  
 
மிக மெதுவாக பதவிசாக சீரியசாக நல்ல பிள்ளையாக  காட்சிகள் போய்க் கொண்டே இருக்கின்றன.  தியேட்டரிகல்   வெற்றிக்கான   விஷயங்கள் படத்தில் இல்லை. இந்தப் படத்துக்கு இப்போது தியேட்டர் ஆடியன்ஸ் இருக்கிறார்களா என்பது பெரிய கேள்வி 
 
எப்படி இருந்தாலும் ஆட்டை வெட்டத்தான்  நல்ல பாடன்  வளர்க்கிறான் . அதில் இருந்து அவன் கடைசி வரை  மாறவில்லை. ஆனால் ஆடு காணாமல் போய்க் கண்டு பிடிக்கும்போது எல்லாம் நல்லபாடன் நெகிழ்ந்து போய் ஆட்டைக்  கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கண்ணீர் வடிக்கிறான்.  இப்படி எல்லாம் பாசம் காட்டப்படும் ஆட்டை எப்படி வெட்ட மனம் வரும் அவனுக்கு? 
 
சாதிய வெறியை கண்டிப்பது சரி.  ஆனால் பண்ணாடி ஒருவரால்  அவர் மனைவிக்கு குழந்தை கொடுக்க முடியவில்லை என்ற காட்சி  எல்லாம் வக்கிரம்  . வன்ம குடோன். 
 
நல்ல கிளைமாக்ஸ்தான் என்றாலும் அதற்கும் அளவு இருக்கே.
 
 தங்க ஊசி என்பதால் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா என்ன?
 
‘ எல்லாம் நடந்து’ கடைசியில் ஒண்டிமாடன் சிலை காட்டப்பட முன்னால் ‘அது’ நிற்கிறது என்று சொல்லி வ உடனே படத்தை முடித்திருக்க வேண்டும். 
 
ஆனால் வருவது,  அதுவும் ஸ்லோ மோஷன் என்று இழுக்கிறார்கள் . 
 
எனினும் இது மிக நல்ல படம் . ஆனால் இந்தப் படத்துக்கு இப்போது தியேட்டர் ஆடியன்ஸ் இல்லை என்று அறிவு சொல்கிறது. 
 
இதையும் மீறி இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது . 
 
ஆண்டிமுனியும் நல்ல பாடனும் …  கருத்தும் காட்சியும்  
 
மகுடம் சூடும் கலைஞர்கள் 
*************************************
சுகவனம் 
 ஜே  டி விமல் 
பரோட்டா முருகேசன்
கருப்பசாமி

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *