கணேஷ் ட்ரீம் பேக்டரி தயாரிக்க, நகுல், ஆசனா சவேரி, கே.பாக்யராஜ் , சித்தார்த் விபின், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் பி எஸ் விஜயகுமார் இ இயக்கி இருக்கும் படம் பிரம்மா டாட் காம் .
தலை எழுத்து எப்படி ? பேசுவோம் .
ஒரு மீடியா நிறுவனத்தில் முதன்மை நிர்வாக அதிகாரியாக பணியாற்றும் ஒருவனும் (சித்தார்த் விபின்) , நிகழ்ச்சி தயாரிப்பாளராக அவனுக்கு கீழே பணியாற்றும் ஒருவனும் (நகுல்) பங்காளிப் பிள்ளைகள் .
அங்கே இருக்கும் அழகிய மாடல் பெண் ஒருத்தி (ஆசனா சவேரி) நிகழ்ச்சி தயாரிப்பாளரை காதலிக்கிறாள். அவனுக்கும் அவள் மீது காதல் .
இந்த நிலையில் அவன் ஒரு கோவிலுக்குப் போய் பிரம்மனை வணங்க , ஃபேஸ்புக் வழியாக வந்து ரிக்வெஸ்ட் கொடுக்கும் பிரம்மன் அதை அவன் அக்செப்ட் செய்ததும் ஒரு கிளிக்கில் முதன்மை நிர்வாக அதிகாரி இடத்துக்கு இவனை மாற்றி விடுகிறார் .
இப்போது அவன் அம்மா அப்பா தங்கை எல்லாம் வசதியாக வாழ்கிறார்கள் .
ஆனால் அவன் காதலித்த பெண் இப்போது நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறிவிட்ட முன்னாள் முதன்மை நிர்வாக அதிகாரியை காதலிக்கிறாள் . அது மட்டுமல்ல .. ..
நிறுவன உரிமையாளரின் (நான் கடவுள் ராஜேந்திரன் ) மகளான ஒரு குண்டான கருப்பான பெண்ணை (ஸ்மிதா ஹசரிகா) கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
இப்போது அவன் என்ன செய்தான் ? வசதியான வாழ்வுக்காக உரிமையாளர் பெண்ணை மணந்து காதலியைத் துறந்தானா ?
இல்லை காதலிக்கான வசதியான வாழ்வை துறந்தானா ? பிரம்மா அவன் வாழ்வில் ஃபேஸ்புக் வழியாக என்ன செய்தார் என்பதே இந்த பிரம்மா டாட் காம்
வித்தியாசமான கதை . மறுப்பதற்கில்லை .
ஆனால் ஃபேண்டசிக்கும் அளவு வேணாமா ? சும்மா எல்லாமும் ஒரு லாப் டாப் ஃபேஸ்புக் கிளிக்கில் நடப்பது சுவாரஸ்யமாக இல்லை .
ஒரு சில இடங்களில் கொஞ்சம் காமெடி இருக்கிறது . அது முழு படத்தையும் காப்பாற்றும்படி இல்லை .
சில கதாபாத்திரங்களை சீரியசாகக் கொண்டு போவதா இல்லை காமெடியா கொண்டு போவதா ?
இந்த இடத்தில் படம் சீரியசாக வேண்டுமா ? இல்லை காமெடியாக போக வேண்டுமா ? என்பதில் நிலவிய தெளிவில்லாத்தன்மை படத்தின் பெரிய பின்னடைவுக்கு காரணம் .
மொத்த படமாக்கலிலும் மெத்த குழந்தைத்தனம் .
இதில் நடிப்பை எல்லாம் விமர்சித்து என்ன பயன் ? பாவம்!
பிரம்மா டாட் காம்… டாட் !