கவி லயா கிரியேஷன்ஸ் சார்பில் ராம் கந்தசாமி தயாரித்து எழுதி இயக்க, பிரநிதி சிவசங்கரன், கார்த்திக் விஜய், லாவண்யா கண்மணி, வைத்தீஸ்வரி தேவசேனாபதி , கமல் குமார் , நக்கலைட்ஸ் ராம் குமார், நக்கலைட்ஸ் மீனா , வரதராஜன் ஆகி நடித்திருக்கும் படம் புஜ்ஜி அட் அனுப்பட்டி .
இப்படி தமிழில் மட்டும் எழுதினால் யாருக்கும் புரியாது. bujji at anupatti என்று ஆங்கிலத்திலும் எழுதினால்தான் எல்லாருக்கும் புரியும் .
உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் படங்களின் பெயர்களைக் கூட தமிழில் எழுதியே புரிய வைத்த நமக்கு இந்தப் படம் இப்படி ஒரு அனுபவத்தைக் கொடுத்து இருக்குது. ம்ஹும். எல்லாம் காலத்தின் கோலம்
ஏதோ ஆங்கிலப்படம் அல்லது ஐரோப்பிய வாழ்க்கையைப் பற்றிய படமாக இருக்கும் என்று பார்த்தால், பேரைத் தவிர இது பக்கா தமிழ்ப் படம்தான் .
கொங்கு மண்டல கிராமம் ஒன்றில் ஒரு வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு புஜ்ஜி என்று பெயர் வைத்து பாசத்தோடு வளர்க்கிறாள் அந்த வீட்டுச் சிறுமி ( பிரநிதி சிவசங்கரன்) . ஆனால் குடிகார அப்பன் குடிக்க காசு வேண்டும் என்பதற்காக அந்த ஆட்டை விற்று விடுகிறான் .

ஆட்டை மறக்க முடியாத சிறுமி , தன் அண்ணனோடு (கார்த்திக் விஜய்) ஆட்டைத் தேடுகிறாள் . ஆடு வாங்கியவர் அதை ஒரு கசாப்புக்கடை பாய்க்கு ( வரதராஜன்) விற்று விட்ட தகவல் தெரிகிறது .
அம்மா இறந்த நிலையில் உறவினரால் கொடுமைப்படுத்தப்படும் ஓர் இளம் பெண்ணின் (லாவண்யா கண்மணி) நட்பு இவர்களுக்குக் கிடைக்கிறது . அவளும் ஆட்டைத் தேடும் பணியில் இவர்களுக்கு உதவ, மூவரும் கசாப்புக்கடக்காரரைச் சந்திக்கிறார்கள். அவர் ”ஐயாயிரம் கொடுத்தால்தான் ஆட்டைத் தருவேன் ; அதுவும் மாலைக்குள் பணத்தைத் தர வேண்டும்” என்கிறார் .
பாசத்தோடு வளர்த்த ஆட்டைக் காப்பாற்ற பண உதவி செய்யக் கேட்டு கோரிக்கை எழுதி அதை பிரதிகள் எடுத்து மக்களிடம் கொடுத்து காசு சேர்க்கிறார்கள் மூவரும் . பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஒருவன் அதற்கு மனிதாபிமானத்தோடு உதவுகிறான் .
பணத்தைக் கொண்டு போவதற்குள் கசாப்புக் கடைக்காரர் மனைவியின் மருத்துவச் செலவுக்காக அதை வேறொருவருக்கு விற்கிறார் . அவரைத் மூவரும் தேடிப் போனால் அவர் அந்த ஆட்டை புது வீடு கட்டும் ஒருவருக்கு பலி கொடுக்க விற்று விடுகிறார்.

இடையில் இவர்களை ஒரு சமூக விரோதி கடத்த முயல்கிறான் . அப்போது அங்கே போலீஸ் வண்டி வருகிறது . சமூக விரோதி போய் விட, போலீஸ் அதிகாரி அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க திட்டமிடுகிறார். . ஓர் இளம் பெண் போலீஸ் (வைத்தீஸ்வரி தேவசேனாபதி) அந்த இளம்பெண்ணைக் காப்பாற்ற முயல்கிறாள் . அவளுக்கு ஓர் இளைஞன் ( கமல் குமார் உதவுகிறான்)
ஒரு நிலையில் சிறுமி, சிறுவன், இளம்பெண் மூவரும் ஆட்டைக் கண்டுபிடிக்க, அதை வாங்கியவர்கள் குடி போதையில் ஆட்டை வெட்ட முயல, இவர்கள் தடுக்க …
நடந்தது என்ன என்பதே படம்.
ஜீவகாருண்யம் பேணும் கதை.
கவிதை மாதிரி காட்சிகள்.
சிந்திக்க வைக்கும் வசனங்கள்.
கோரிக்கை நோட்டீஸ் பார்த்துக் காசு தரும் விதவிதமான நபர்கள் அவர்கள் சொல்லும் வார்த்தைகள் இந்த படத்தின் சிறப்பான தருணங்கள் .

திருநங்கைகள், தொலைந்து போன தனது நாயைத் தேடியபடி மட்டன் பிரியாணி ஆர்டர் பண்ணும் பெண்மணி, இது போன்றோரிடம் இவர்கள் ஆட்டை மீட்கக் காசு கேட்கும்போது நடக்கும் உரையாடல்கள் அர்த்தமுள்ளவை
ஆட்டுக்கு ஐயாயிரம் கேட்ட கசாப்புக்கடைக்காரர் ஆட்டை வேறு ஒருவருக்கு விற்று விட்ட பிறகும் தங்களுக்கு கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை கசாப்புக்கடைக்காரரின் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்குக் கொடுத்து விட்டு,
இப்போது ஆடு எவனிடம் இருக்கிறதோ அவனைத் தேடி இவர்கள் ஓடும் காட்சியில் , அபலைகள் மற்றும் குழந்தைகளின் மன உயரத்தைக் காட்டும் விதம், நெகிழ்வு
பல போதாமைகள் இருக்கும் அதே நேரம், அடிப்படைக் கதையை விட்டு விலகாமல் நூல் பிடித்த மாதிரி காட்சிகளை அமைத்து இருக்கும் இயக்குனர் ராம் கந்தசாமியைப் பாராட்டலாம்.
சிறுமியாக நடித்து இருக்கும் பிரநிதி சிவசங்கரன் ஒரு நாட்டுப் புறக் கவிதை மாதிரி நடித்து இருக்கிறார். ஈடு கொடுத்து இருக்கிறான் அண்ணனாக நடித்து இருக்கும் கார்த்திக் விஜய்.
உறவுகளால் வஞ்சிக்கப்பட்டு அதனாலேயே மற்றவரின் வேதனையை உணர்ந்து கொள்ளும் குணம் வந்து, சிறுவனுக்கும் சிறுமிக்கும் உதவியபடி உடன் வரும் அபலைப் பெண் கதாபாத்திரத்தில் ஒரு கண்ணீர்க் கவிதை போல நடித்திருக்கிறார் லாவண்யா கண்மணி. உணர்ந்து நடித்துள்ள விதம் சிறப்பு

பெண் போலீஸ் கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகு, கேமராவில் அழகாகத் தெரியும் முகம், ஈர்ப்பான இனிப்புக் குரல் என்று சிறப்பாக நடித்துள்ளார் வைத்தீஸ்வரி தேவசேனாபதி
கார்த்திக் ராஜாவின் இசை , அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவு , சரவணன் மாதேஸ்வரனின் படத் தொகுப்பு ஆகியவையும் ஒகே ரகம்.
எல்லா கதாபாத்திரங்களுக்கும் நல்ல நடிகர்கள், இன்னும் நறுக்கான தெறிப்பான திரைக்கதை , நல்ல மேக்கிங் இருந்திருந்தால் காவியமாகவே வந்திருக்க வேண்டிய படம் ,
இப்போது ஒரு சிறு கவிதையாக மட்டும் மனம் கவர்கிறது ..