வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ் தியாகராஜா மற்றும் ஆனந்த ஜோதி தயாரிக்க வெற்றி , ஷிவானி, ஹரீஷ் பெராடி , சீமா ஜி நாயர், கவிதா பாரதி நடிப்பில் செல்வகுமார் இயக்கி இருக்கும் படம்.
தந்தை இறந்த நிலையில் அம்மாவிடம் தவறாக நடக்க நினைப்பவர்களுக்கு எதிராக சிறுவயதிலேயே கத்தி தூக்கி, அப்படியே ரவுடியாகப் போன இளைஞன் புலிப்பாண்டி (வெற்றி ) . அவனை ஒத்த நண்பர்கள் சிலர் (தங்கதுரை ) . தாய்மாமன், அத்தை, அத்தைக்கு ஒரு மகள் ( ஷிவானி) இருந்தும் ‘ஏழ்மை காரணமாக யாரும் தன் மகனைக் கண்டு கொள்வதில்லை என்பது அவனின் விதவைத் தாயின் வருத்தம் .
போலீஸ் ஸ்டேஷனில் அயோக்கிய போலீஸ்காரர் ஒருவரின் ( கவிதா பாரதி) நட்பு வேறு . சின்னச் சின்ன அடிதடிகள், பிளாக்கில் மது விற்பது என்று இருக்கும் அவனை , ஒரு பணக்காரரைக் கொலை செய்யச் சொல்கிறார் அந்த போலீஸ்காரர் . அது முடியாமல் வேறு மாதிரி ஒரு கொலை விழ, புதிதாக வரும் உயர் போலீஸ் அதிகாரி லோக்கல் குற்றவாளிகள் அனைவரையும் வேட்டையாடுகிறார்
அவரிடம் இருந்து தப்பிக்க , நாயகனும் நண்பர்களும் ஐயப்பனுக்கு மாலை போடுகின்றனர். சபரிமலைக்குப் போய் சாமி தரிசனம் செய்து ஓய்வாகப் படுத்திருக்கும் நிலையில் ஒரு இஸ்லாமியரிடம் கேரள லாட்டரிச் சீட்டு ஒன்றை வாங்குகிறான் நாயகன்
கிளம்பும்போது தூக்கக் கலக்கத்தில் அதை அங்கேயே விட்டு விட்டு வந்து விடுகிறான். அதை அந்த சில்லறை வியாபாரி எடுத்து வைக்க , அதற்கு பத்து கோடி பரிசு விழுகிறது .
வாங்கிய நாயகன் பற்றி எந்த விவரமும் அவரிடம் இல்லாத நிலையில் , மிகவும் வறுமையிலும் கடன் மற்றும் அதனால் வந்த அவமானத்தாலும் வாழும் – பெண் பிள்ளைகள் நிறைந்த – அவரது குடும்பம் லாட்டரி சீட்டுக்கான பணத்தை நாமே எடுத்துக் கொள்ளலாம் என்கிறது.
ஆனால் அல்லா மன்னிக்க மாட்டான் என்று சொல்லும் அவர் குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி யாரென்றே தெரியாத நாயகனை சந்திக்க தூத்துக்குடி வருகிறார் . விஷயம் அயோக்கிய போலீசுக்கு தெரியவர, அவர் குறுக்கே கட்டையைப் போட முயல, பணத்தை வாங்கிப் பங்கு போட்டுக் கொள்ள இஸ்லாமியரின் குடும்பம் முயல, நடந்தது என்ன என்பதே படம்.
ஒரு மனிதன் , ஆயிரம் தடைகள் துன்பங்கள் வந்தாலும் எந்த அளவு நேர்மையின் உச்சமாக வாழ முடியும் என்ற அற்புதமான விஷயத்தை சொல்லும் தங்கமான படம் இது. அதற்காகவே எழுதி இயக்கி இருக்கும் எம் செல்வகுமாரைக் கொண்டாடலாம்.
ஒருவன் ஏழையாக இருக்கும் போது நல்லவனா கெட்டவனா என்று பார்க்கும் உறவுகள் அவனிடம் பணம் வந்து விட்டால் மட்டும் எப்படி கண் மூடித்தனமாக கொண்டாடும் என்ற யதார்த்த அவலத்தையும் சொல்கிறது
படத்தில் தூத்துக்குடியின் மண் மொழியும் சிறு சிறு கதாபாத்திரங்களுக்கு அந்த ஊர் முகங்களும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்ட விதம் அழகு.
வெற்றி பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
வறுமையிலும் நேர்மையான ஏழை இஸ்லாமியர் பாத்திரத்தில் ஹரீஷ் பெராடி சிகரம் தொடுகிறார் . நெகிழவும் மகிழவும் வைக்கும் நடிப்பு. அவரது மனைவியாக நடித்துள்ள மீரா நாயர் , நடிப்பு என்பதே தெரியாமல் மயிலிறகின் வருடல் போல அழகாக நடித்துள்ளார்
நாயகனின் தாய்மாமன் மனைவியாக வரும் சவுந்தர்யா அட்டகாசமாக நடித்துள்ளார் .
மற்றவர்கள் சினிமா நடிப்பு நடித்துள்ளனர் அல்லது வசனம் பேசி விட்டுப் போயிருக்கிறார்கள்.
வினோத் ராமசாமியின் ஒளிப்பதிவு கடல்புரத்தில் வெற்றிக் கையெழுத்துப் போடுகிறது . கோவிந்த் வசந்தாவின் இனிய இசைக்கு அற்புதமான பாடல்களை எழுதி உள்ளார் கார்த்திக் நேத்தா .
காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் சிறப்பு .
சபரிமலை என்பது பெரும்பாலான மலையாளிகளுக்கு ஒரு சாதாரண கோவில். அனால் பெரும்பாலான தமிழ் பக்தர்களுக்கு மாபெரும் புண்ணியத்தலம் . அப்படி இருக்க சபரி மலைக்குப் போக ஏங்கும் மலையாளச் சிறுமி , அவளை ஐயப்ப பக்தராக வந்து கற்பழிக்க முயலும் தமிழர் என்று மனசாட்சி இல்லாமல் மாளிகைப்புரம் என்ற படத்தை எடுத்த சிறுமதியாளர்கள் வெட்கித் தலைகுனியும்படியாக எந்த இனத் துவேஷம் காட்டாமல் படத்தை எழுதி இயக்கி இருக்கும் செல்வகுமாரின் படைப்பு நேர்மைக்கு அன்பு முத்தம் .
ஒரு மலையாள இஸ்லாமியரை நேர்மையின் உச்சமாகக் காட்டி இருக்கும் படம் இது . 2018 போன்ற இயற்கைப் பேரிடர் படங்களிலும் மன சாட்சியே இல்லாமல் தமிழர் இனத் துவேஷத்தைக் காட்டும் மலையாள படைப்பாளிகள் இனிமேலாவது திருந்தட்டும்.
முக்கிய நிகழ்வுக்கு வருவதற்கு முன்பு ஆரம்பத்தில் நிறைய நேரம் எடுத்துக் கொண்டு சுற்றுவது… லாட்டரி சீட்டு வியாபாரி நாயகன் சந்திப்புக்குப் பிறகும் தேவை இன்றி நீளும் காட்சிகள் , இவை திரைக்கதை ரீதியாக பின்னடைவாக இருக்கின்றன
லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்த உடன் இதன் திரைக்கதை எப்படிப் போயிருக்க வேண்டும்?
அந்த இஸ்லாமியரின் குடும்பத்தினர் லாட்டரி சீட்டைப் பறித்து, பரிசுப் பணத்தைப் பெற பெற அவரை வீட்டுக்குள் அடைக்கும் காட்சியை அடுத்து அவர் வீட்டில் இருந்து தப்பித்து யாரென்றே தெரியாத நாயகனை தூத்துக்குடி வந்து தேட,
அவரைக் கண்டு பிடித்து லாட்டரி சீட்டைப் பறித்து பணம் பெற அவரது குடும்பத்தினர் வர, தெரியாதவனைக் கண்டு பிடித்துப் பத்து கோடி கொடுக்க அவர் தேட, தெரிந்த தன் தந்தையை பிடித்து பணத்தைப் பறித்துக் கொள்ள இவர்கள் தேட , பரபரப்பும் திகைப்புமான இந்த வித்தியாசத் தேடலில்
ஒரு நிலையில் நாயகன் – லாட்டரிகாரர் சந்திப்பு… அதைத் தொடர்ந்து இப்போது கிளைமாக்சில் வரும் காட்சிகள் ஜஸ்ட் பத்தே நிமிஷம் என்று இந்த படம் முடிந்து இருந்தால் இன்னும் சிறப்பான வகையில் திரையரங்க வெற்றிக்கு உகந்த படமாக இருந்திருக்கும்
எனினும் …
‘யாருமே நல்லவனா இல்ல . நீ மட்டும் ஏன் நல்லவனா இருக்கணும்?’
‘உன் குழந்தைக்கு மருத்துவம் பாக்கணும்னா அடுத்தவன் குழந்தையை கடத்து . தப்பே இல்ல. ‘
‘அயோக்கியத்தனம் பண்ண உன் மகனை அல்லது தம்பியை நல்லவன் ஒருத்தன் கண்டிச்சா உன் மகன் அல்லது தம்பி திருப்பி அடிச்ச நிலையில் அவன் உன் தம்பியை வச்சு வெளுத்தா, அதுக்காக யோக்கிய சிகாமணி மாதிரி ஒப்பாரி வச்சிட்டு அந்த நல்லவனை வெட்டிப் போடு . உன் கண்ணீருக்கும் நான் சோக மியூசிக் போட்டு நியாயம் சொல்றேன்’
– என்று தமிழ் சினிமாவில் அயோக்கியக் கதைகளை நியாயப்படுத்திக் கொண்டு இருக்கும் சில கேடுகெட்ட படைப்புகளின் முகத்தில் சாணியில் முக்கின.. ஊற வச்ச பிஞ்ச செருப்பை வச்சு இந்த படம் சப்பு சப்புன்னு அடிக்குதே… அதற்காகவே போற்றப்பட வேண்டிய படம் இது.
