கே டி கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிக்க, சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகரன்,முத்துராமன், பசங்க சிவகுமார், நான் கடவுள் ராஜேந்திரன் நடிப்பில் பா. பாண்டியன் எழுதி இயக்கி இருக்கும் படம் கால் டாக்சி. ஏறலாமா ? பேசுவோம்.
கால் டாக்சி புக் செய்து, பயணிக்கும் வழியில் கால் டாக்சி டிரைவரைக் கொன்று விட்டு டாக்சியைத் திருடி விற்கிற-
கால் டாக்சி மூலம் போதைப் பொருள் கடத்தி , விஷயம் அறிந்த டிரைவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் டிரைவரைக் கொண்டு காரைத் திருடி விற்கிற-
ஒரு கூட்டத்தால் டாக்சி டிரைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் .
டாக்சி டிரைவரான நாயகனின்( சந்தோஷ் சரவணன்) பெற்றோருக்கு ( முத்துராமன்- அஞ்சலி தேவி) இதனால் பயம்.
டாக்டர் ஒருவரின் ( பசங்க சிவகுமார்) மகளான சட்டக் கல்லூரி மாணவிக்கு ( அஸ்வினி சந்திரசேகர்) நாயகன் மேல் திddddddடீர் காதல்.
ஆனால் பணக்கார பெண் வேண்டாம் என்று அவன் விலகிப் போக, அதனாலேயே நாயகிக்கு காதல் இறுகுகிறது.
பெண்ணின் அப்பாவும் கிட்டத்தட்ட ஒத்துக் கொள்ள, நாயகனுக்கு குறி வைக்கிறது கால் டாக்சிகளைக் கடத்தி விற்கும் கும்பல்.
சூழல் காரணமாக அந்த பயணத்தை நாயகன் தன் நண்பன் ஒருவனுக்கு மாற்றி விட , அந்த நண்பன் கொல்லப்படுகிறான்.நண்பனின் அம்மா, மனைவி, மகள் அநாதை ஆகின்றனர் .
கொலைக் கும்பலை பிடிக்கக் கிளம்பும் எளிய மனிதனாகிய நாயகனுக்கு நடந்தது என்ன ? என்பதே இந்த கால் டாக்சி .
கால் டாக்சி டிரைவர்களின் நிலமையை சொல்கிற படம் .
படத்தில் முதலில் கவர்வது எம் ஏ ராஜதுரையின் ஒளிப்பதிவு . குறிப்பாக அந்த இரவு நேர சாலைப் பயணங்கள். அடுத்து, பாடல்களும் எழுதி இருக்கும் பாணரின் பின்னணி இசை .
படத்தின் மிகப் பெரிய பிளஸ் நாயகி அஸ்வினி சந்திரசேகரன் . அழகான தோற்றம் கொண்ட அவரின் கிளாமரான டூயட் பாடல் ரசிக்க வைக்கிறது .
மிக இயல்பாக நடிக்க முயன்று வசனம் மட்டும் பேசி இருக்கிறார் நாயகன் சந்தோஷ் சரவணன் .
மொட்டை ராஜேந்திரன் காமெடி கடுப்பு.
காட்சிகளை நன்றாக சொல்லும் உத்தி இன்னும் கைவரப்பெறவில்லை இயக்குனருக்கு.
முதல் ஷாட்டிலும் கால் டாக்சி புக் செய்பவர் பேசும் முறையிலுமே நடக்கப் போவது தெரிந்து விட்டதால் , ” அதான் என்ன பண்ணப் போறீங்கன்னு புரியுதே. சீக்கிரம் டிரைவரைக் கொன்னுட்டு காரை கொள்ளை அடிங்கப்பா. டைம் ஆவுதுல்ல. அடுத்த மேட்டருக்குப் போங்க ” என்று மைன்ட் வாய்ஸ் ஓடுகிறது.
படம் முழுக்க இதுதான் சிக்கல் .
பட்ஜெட்டில் சின்னப் படம் பெரிய படம் உண்டு . ஆனால் நல்ல திரைக்கதை அமைப்பதில் என்ன சிரமம்?
கால் டாக்சி கொலைகள் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பிரச்னை . அதை வெகு ஜன சமூகத்தோடு சம்மந்தப்படுத்தி திரைக்கதை போயிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் கால் டாக்சி டிரைவர்களை மனதுக்கு நெருக்கமாக உணரும்படியாகவாவது திரைக்கதை பயணித்து இருக்க வேண்டும் . அது இல்லாதது பயணத்தின் பெரும் சிக்கல்.
இன்னொரு பக்கம் பசங்க சிவகுமார், முத்து ராமன் தவிர அஞ்சலி தேவி போன்ற சில நடிக நடிகையர் நடித்துக் குவிக்கிறார்கள் .
கிளைமாக்ஸ் திருப்பம் அட்டகாசமான விஷயம்.
ஆனால் வீட்டைப் பூட்டிக் கொண்டு அவசரமாக வெளிய கிளம்புகையில், சொல்லாமல் கொள்ளாமல் வந்த விருந்தாளி மாதிரி அந்த விசயம் வருகிறது.
கால் டாக்சி டிரைவர்களின் வாழ்க்கை,காதல் , சமூக அக்கறை என்று முன்பே ஒரு சின்ன இணைப்பு கொடுத்து பிறகு இந்தக் கிளைமாக்ஸ் வந்து இருந்தால் அசத்தி இருக்கும்
இன்னும் நன்றாக வந்திருக்க வேண்டிய படம் .
கால் டாக்சி .. ஆத்திர அவசரத்துக்கு ஏறலாம்
