திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ எல் அழகப்பன், அம்ரிதா ஸ்டுடியோஸ் சார்பில் மங்கையர்க்கரசி மற்றும் zee ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ஏ எல் விஜய் கதை எழுதி வழங்க,
சமுத்திரக்கனி, பூஜா கண்ணன் , ரீமா கல்லிங்கல் நடிப்பில் திரைக்கதை வசனம் எழுதி ஸ்டன்ட் மாஸ்டர் செல்வா முதன் முதலில் இயக்கி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் சித்திரைச் செவ்வானம் ..
மருத்துவ வசதி இல்லாத கிராமத்து விவசாயியான முத்துப்பாண்டியின் (சமுத்திரக்கனி) மனைவி (வித்யா பிரதீப்) , ஒரு கைக்குழந்தையான மகள் இருக்கும் நிலையில் மின்சாரம் தாக்கி இறந்து விட, மகளை டாக்டராக்கிப் பார்ப்பதையே லட்சியமாகக் கொண்டு வாழ்கிறார் முத்துப்பாண்டி.
பிளஸ் டூவில் மகள் (பூஜா கண்ணன்) நல்ல மதிப்பெண் பெற்று இருந்தும், அயோக்கியத்தனமான நீட் தேர்வு காரணமாக, நிலத்தின் ஒரு பகுதியை விற்று லட்ச லட்சமாகப் பணம் கட்டி, மகளை மாநகரில் உள்ள நீட் கோச்சிங் சென்டரில் படிக்க வைக்கிறார் . மகள் அங்கே இருக்கும் ஒரு ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறார் .
நீட் தேர்வு தரும் சலுகையில் எப்படியாவது ஜஸ்ட் பாஸ் செய்து விட எண்ணி படிக்க வந்த இடத்தில் மது மாது என்று வாழும் சில அயோக்கிய பாலியல் வெறி பிடித்த இளைஞர்கள், சக ஹாஸ்டல் தோழியிடம் வம்புக்குப் போக, அதை முத்துப் பாண்டியின் மகள் தட்டிக்கேட்க,

ஒரு நிலையில் முத்துப் பாண்டியை இளைஞர்கள் அவமானப்படுத்த , வெகுண்டு எழும் மகள் அவர்களை செருப்பால் அடிக்க,
பதிலுக்கு மகள் குளிக்கும் ஹாஸ்டல் பாத்ரூமில் கேமரா வைத்து அவளை நிர்வாணமாகப் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பகிர்கிறார்கள்.
அடுத்து நடக்கும் சம்பவங்களால் முத்துப் பாண்டியின் வாழ்க்கையே நொறுங்கிப் போக , முத்துப் பாண்டி என்ன செய்கிறார் என்பதே சித்திரைச் செவ்வானம்
அதிரடி ஸ்டன்ட் மாஸ்டரான சில்வா அப்பா அம்மா மகள் என்று பாசம் வழியும் கதாபாத்திரங்களை வைத்து பாலியல் வக்கிரங்களுக்கு எதிராக எடுத்து இருக்கும் படம் .
ஹாஸ்டல் மற்றும் வெளியிடங்களில் படிக்கப் போகும் பெண்களை சூறையாட பணம் பதவி வக்கிரம் நிறைந்த இளைஞர்கள் எப்படிக் காத்து இருக்கிறார்கள் என்பதை சொல்லும் படம் .
அப்பா மகள் பாசம்தான் படத்தின் ஜீவா நாடி .
மனைவி இறந்த நிலையில் சிறுமியான மகள் தனது அம்மாவின் ஸ்தானத்துக்கு வந்து அப்பா மேல் பாசம் காட்டுவது…
மகளைக் கண்ணுக்குள் வைத்து காக்கும் அப்பா அவளை நகரில் ஹாஸ்டலில் விட்டு விட்டு கனத்த மனதோடு கிளம்புவது போன்ற காட்சிகளில் வாழ்வியல் யதார்த்தம் கொட்டிக் கிடக்கிறது.

சமுத்திரக்கனியும் பூஜா கண்ணனும் கனமான நடிப்பைக் கொட்டி நடித்துள்ளார்கள். ரிமா கல்லிங்கல் தோற்றப் பொலிவு .
சாம் சி எஸ் கொடுத்து இருக்கும் ஆழமான இசை அருமை. மனோஜ் பரஹம்சா மற்றும் கே ஜி வெங்கடேஷின் சிறப்பான ஒளிப்பதிவு படத்துக்கு பலம் .
உலகெங்கும் விதம் விதமான கேமராக்கள் மலிந்து விட்ட நிலையில் யாரையும் நிர்வாணமாகப் படம் எடுப்பது பெரிய விசயமே அல்ல. அப்படி எடுக்கப்படும் படங்களை அவமானமாகக் கருதி உடைந்து போய் படம் எடுத்தவரகளை தேடிப் போய் காலில் விழுந்து கதறுவது தப்பு என்று சொல்ல வேண்டிய கால கட்டம் .
இந்தப் படத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி – உடல் உறுப்புகளை அனாடமி, செல் , திசு, நரம்பு, எலும்பு , ரத்தக் குழாய் என்று பார்க்க வேண்டிய ஒரு பெண், அந்தத் தவறை செய்கிறாள் என்பதுதான் சொல்லப் படக் கூடாத விஷயம்.
அதையே இந்தப் படமும் சொல்கிறது என்பதுதான் வருத்தம் .
அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் , மனம் கனக்கச் செய்கிறது படம்.