பயோவன் கிரியேஷ்யனிசம் சார்பில் லோகேஸ்வரன் தயாரிக்க, ஆதர்ஷ் மதிகாந்த் , ஜோவிதா லிவிங்ஸ்டன் இருவரும் நாயகன் நாயகியாக நடிக்க, கவுரவ வேடத்தில் பாக்கியராஜ், சோனியா அகர்வால், லிவிங்ஸ்டன், அயலி மதன்,அமுதவாணன் ஆகியோர் நடிப்பில் கே எஸ் கிஷான் எழுதி இயக்கி இருக்கும் படம்.
முன் கதையாக , கிராமத்து நபர் ஒருவர் (அயலி மதன்) கஷ்டங்களில் இருந்து மீள , ஒரு சாத்தானை வணங்குகிறார். அதை வணங்க ஆரம்பித்தால் அது தொடர்ந்து உயிர்பலி கேட்டு பரம்பரையையே இல்லாமல் செய்து விடும் என்பது அப்போது அவருக்கு தெரியாது .
நிகழ்காலக் கதையில், பிரச்னையில் இருக்கும் ஒருவன் ( அமுதவாணன்) தனது நண்பனுக்கு கொடுத்த கடனை கேட்க அவனைத் தேடி அலைகிறான்.
பணப் பிரச்னையில் இருக்கும் அந்த நண்பன் ( ஆதர்ஷ் மதிகாந்த் ), கிராமத்தில் அவனது அம்மா வழித் ‘தாத்தாவின் சொத்துகள் தனக்கு கிடைக்கும்; அதை வைத்து தொழில் செய்து பிழைக்கலாம்’ என்று கிராமத்துக்கு அவனது மனைவி (ஜோவிதா) மற்றும் தங்கையுடன் தாத்தாவை பார்க்கப் போகிறான்.
கிராமத்தில் உள்ள பிரம்மாண்டமான பெரிய பராமரிப்பு இல்லாத வீட்டில் படுத்த படுக்கையாக மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கிறார் தாத்தா,
அந்த வீட்டில் அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றன. பேரனின் மனநிலை பாதிக்கப்படுவதும் நடக்கிறது.
கடன் கொடுத்த நண்பனை தேடி வரும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் ,வீட்டுக்குள் நுழைந்து பெண்களிடம் தவறாக நடக்கிறார் .
இவை எல்லாம் ஏன்? எதற்கு? என்ன நடந்தது ? என்பதே படம் .
ஒரு கிராமத்து பங்களாவிலும் கொஞ்சம் கிராமத்து வயல்கள் மற்றும் தெருக்களிலும் ஒரு சில அறைகளிலும் நடக்கும் படம்.
அந்த பங்களா மிரட்டுகிறது.
பகல் நேராக காட்சிகளிலும் பயமுறுத்த முயலும் இயக்குனர் சில சமயம் வெற்றியும் பெறுகிறார்.
ஆதர்ஷ் மதிகாந்த் நடிப்பில் கவனிக்க வைக்கிறார். உற்சாகமாக நடிக்கிறார் .ஜோவிதா லிவிங்ஸ்டனும் தங்கையாக வரும் பெண்ணும் பயந்த நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் மற்றவர்கள் ஓகே ரகம்.
விக்னேஷ் ராஜாவின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. சங்கீத் மணிகோபாலின் ஒளிப்பதிவு ஜஸ்ட் ஓகே .
நரபலி , கருத்தில் உள்ள குழந்தை என்று கதை போகிறது .சிறப்பாக ஒன்றும் சிக்கவில்லை. பாக்கியராஜ், சோனியா அகர்வால், லிவிங்ஸ்டன், அயலி மதன்,அமுதவாணன் ஆகியோர் சிறு சிறு கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள்.
போலீஸ் ஏன் கடன் கொடுத்த நண்பனை தேடுகிறார்? புதிதாக ஊருக்கு வரும் தங்கைக்கு முன்னரே தெரிந்த ஒரு பையன் இருப்பது எப்படி? இப்படியாக பல கேள்விகள்
இப்படி கதாபாத்திர வடிவமைப்பில் நேர்த்தி இல்லாததால் எதிர்பார்த்த பலன் இல்லை
டார்க் ஜெயண்ட் ….டார்க் இருக்கிறது ; ஜெயண்ட் இல்லை