ஸ்ரீ கோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்க, ஹரீஷ் கல்யான், டிகங்கனா சூரியவன்ஷி, ரெபா மோனிகா ஜான் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கி இருக்கும் படம் தனுசு ராசி நேயர்களே .
அப்பாவின் அகால மரணத்துக்கு காரணம் ஜாதகத்தில் இருந்த தோஷத்துக்கு பரிகாரம் செய்யாததுதான் என்று சிறு வயதில் நம்ப வைக்கப்படும் சிறுவன் ஒருவன், வளர்ந்து இளைஞன் ஆன பிறகு (ஹரீஷ் கல்யான்) அதிலேயே ஊறிப் போகிறான் .
அவனது தனுசு ராசிக்கு கன்னி ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதுதான் பொருத்தம் என குடும்ப ஜோசியர் ( பாண்டிய ராஜன்) சொல்கிறார்.
தேடி வந்து நேசிக்கும் பெண்ணை கன்னி ராசி இல்லாத பெண் என்று ஒதுக்கி விட்டு, கன்னி ராசி உள்ள பெண்களாக பார்த்து காதல் சோழ முயலும் அவன் , அதே கன்னி ராசியைச் சேர்ந்த , செவ்வாய் கிரகத்தில் செட்டில் ஆகத் திட்டமிடும் ஒரு வானியல் நிபுணப் பெண்ணை நேசிக்க , அப்புறம் என்ன ஆனது என்பதே படம்.
படம் முழுக்க பெண்கள் …. யப்பா யப்பா ..பெண்கள் பெண்கள் .. விதம் விதமான பெண்கள்.. வெள்ளை வெள்ளையான பெண்கள் … நடிகைகள் தேர்வில் மிக கவனமாக இருந்து அசத்தி இருக்கிறார் இயக்குனர் சஞ்சய் .
பிகே வர்மாவின் வண்ணமயமான ஒளிப்பதிவு , உடைகள், இரண்டும் கண்ணுக்கு குளிர்ச்சி .
ஜிப்ரானின் இசையில் ”யாரு மேல குத்தமுன்னு… ” பாடல் முணுமுணுக்க வைக்கிறது . இசை , நடனம், நாயகி டிகங்கனாவின் பங்களிப்பு எல்லாம் அந்த பாடலை ரசிக்க வைக்கிறது .
ஹரீஷ் கல்யான் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் . உற்சாகமாக நடிக்கிறார் .
சிறு வயது முதல் நடிப்பில் அனுபவம் வாய்ந்த நாயகி டிகங்கனா சூர்யவன்ஷி மிக சிறப்பாக நடிக்கிறார் . திருத்தமான முகம் . அழகாக சிரிப்பு .
அடிப்படைக் கதையே பழசு . அப்படி இருக்க திரைக்கதையில் முக்கியமாக இரண்டாம் பகுதியில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் .
அக்கா மகனுக்காகவே வாழ்வதாக சொல்லும் முனீஸ்காந்த் முக்கியமான காட்சியில் அக்காவையும் அக்கா மகனையும் பார்த்து எப்படியோ போங்க என்று கும்பிடு போட்டு விட்டு போகிறார் . கேரக்டரைசேஷன் குறைபாடுகள் !
சகலகலா வல்லவன் , நல்லவனுக்கு நல்லவன் படங்களில் வந்த மாதிரியான செட்கள், பாடல்கள் இன்னும் தேவையா ?
தனுசு ராசி நேயர்களே … புதுசா அட்டை போட்ட – செல்லரித்த பழைய பஞ்சாங்கம் !
