தி பொயட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கதிர், ரோஷினி பிரகாஷ், யோகி பாபு, கிஷோர் , ஏ பி ஸ்ரீதர் நடிப்பில் குமரன் இயக்கி இருக்கும் படம் ஜடா .
போரில் தோற்ற மன்னர்கள், தளபதிகள் போன்றோரின் தலைகளை , மண்டை ஓடுகளை உதைத்து விளையாடும் பழக்கம் , பின்னர் தலைகளுக்கு பதிலாக கனமான உருண்டையாக மாறி, பின்னர் பந்தாக வந்தது.
இப்படி உருவான கால்பந்து விளையாட்டு ஆரம்பத்தில் விதிகள் வரைமுறைகள் இல்லாத விளையாட்டாக ஆடப்பட்டு, பதினோரு பேர் கொண்ட ஏழு பேர் கொண்ட அணி என்று இரண்டு வகையில் ஆடும் விளையாட்டாக இருந்தது .
தவிர அணிகள் மீது பணம் கட்டும் சூதாட்டமாகவும் ஜெயிப்பதற்காக கொலைகள் வர போகும் ஆட்டமாகவும் இருந்தது . பதினோரு பேர் கொண்ட அணிகள் ஆடும் விளையாட்டு இவற்றில் இருந்து எல்லாம் முற்றிலும் விடுபட்டு ஓர் ஒழுங்குக்குள் வந்து விட்டது .
ஆனால் ஏழு பேர் கொண்ட அணிகள் ஆடும் செவன்ஸ் கால் பந்தாட்டம் உலகின் பல பகுதிகளில் இன்னும் சூதாட்டமாக –ஜெயிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; நன்றாக ஆடும் நபரை அடித்து கை கால் உடைக்கலாம் என்ற அளவில் இன்னும் சூதாட்டமாகவே இருக்கிறது .
தமிழ் நாட்டிலும் அப்படி நடக்கிறது என்பதை வைத்து அமைகிறது இந்தப் படத்தின் கதை.
சென்னையின் எளிய மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் கால் பந்து ஆர்வம் …. அதை முறைப்படுத்தி அவர்களை விளையாட்டு வீரர்கள் ஆக்கி ஜெயிக்க வைத்து நல்ல வேலைக்கு அனுப்பி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உழைக்கும் சில கால் பந்து பயிற்சியாளர்கள்….
இன்னொரு பக்கம் அவர்களை வைத்து சூதாட்டம் நடத்தி சம்பாதிக்கும் நபர்கள்….. அவர்களால் பாதிக்கப்பட்டு உடல் உறுப்புகளை இழந்து வாடும் வீரர்கள்…..
அங்கீகரிக்கப்பட பதினொருவர் அணியின் தேர்வுகளில் உள்ள ஊழலால் விரக்தி அடைந்து ஆபத்து என்று தெரிந்தும் சட்டவிரோத எழுவர் அணி கால் பந்து ஆடப் போகும் நபர்கள்….
இவர்களைப்பற்றிய படம் இது .
சூதாட்டக் குழுவுக்கும் நல்ல பயிற்சியாளர்கள் குழுவுக்கும் வந்த மோதல் பிறகு நடக்கும் பேச்சு வார்த்தையில் ஒருமுறை செவன்ஸ் ஆடுவது , சூதாட்டக் குழுவின் அணி ஜெயித்தால் , தொடர்ந்து சட்ட விரோத எழுவர் அணி ஆட்டம் நடை பெறும் . நல்ல பயிற்சியாளர் அணி ஜெயித்தால், இனி செவன்ஸ் இல்லை என்ற ஒப்பந்தத்துடன் போட்டி நடக்கிறது .
நல்ல பயிற்சியாளர் அணி சார்பில், அணியின் தலைவனாக ஜடா ( கதிர் )
என்ன ஆச்சு என்பதே இந்த படம் .
மிக வித்தியாசமான- இதுவரை சொல்லப் படாத கதை . பாராட்டுகள் .
கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக துலங்குகிறார் நாயகன் கதிர் .
நல்ல பயிற்சியாளராக வந்து செவன்ஸ் ஆடி உயிரை இழக்கும் கதா பத்திரத்தில் கவனம் கவர்கிறார் கிஷோர் .
அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.
தாதாவாக கவனிக்க வைக்கிறார் ஓவியர் ஏபி ஸ்ரீதர் .
சாம் சி எஸ் சின் பின்னணி இசை படத்துக்கு பலம் சேர்க்கிறது .
மக்களின் வாழ்வியலை சொல்லும் விதம் யதார்த்தத்தோடு இருக்கிறது .
இரண்டாம் பாதி ஆவி பேய் என்று மடை மாற்றுவதை ஒரு காட்சியோடு நிறுத்திக் கொண்டு அடிப்படைக் கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
முக்கியக் கதையின் நோக்கத்தை நிறுவும், சாதிக்கும் வகையில் இறுதிக் காட்சிகளை அமைத்து இருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.
வித்தியாசமான கதை விரும்பிகளுக்கு ஜடா பிடிக்கும்
