ஸ்ரீவாரி பிக்சர்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்க யோகிபாபு நாயகனாக நடிக்க முத்துக்குமரன் இயக்கும் தர்ம பிரபு படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் , திரையிடப்பட்ட டிரைலரும் பாடல்களும் அட்டகாசம் .
படத்தில் எம தர்மன் பதவியை வாரிசு என்ற அடிப்படையில் பெறும் யோகிபாபு அடிக்கும் லூட்டி படத்தின் சிறப்பம்சம் இதை சாக்காக வைத்து சமகால அரசியல் கோமாளித்தனங்களை போட்டு வெளுக்கும் படம் இது என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது . கட்சியும் வேணாம் கொடியும் வேணாம் நு பாட்டுப் பாடி மக்களைக் கவர்ந்தவரே இப்போ அரசியலுக்கு வர்றாரு .. ” என்ற ரீதியிலும் வசனங்கள் ! முன்னோட்டத்தில் திருவள்ளுவர் கூட வருகிறார் .
சிவாஜி நடித்த எமனுக்கு எமன் என்ற படம் எமனாக இருக்கும் சிவாஜிக்கும் பூமியில் இருந்து எம லோகம் போகும் இன்னொரு சிவாஜிக்கும் நடக்கும் சம்பவங்களை கொண்ட படம்தான் . ஆனால் அது ஓடவில்லை . ஆனால் இந்தப் படத்தில் ஓடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து இருக்கிறார்கள் .
எம லோகத்தில் எம் எஸ் வி இசைக்கு வாலி பாடல் எழுத டி எம் எஸ் பாடுவது போல ஒரு பாடலை வைத்துள்ளனர் . பாடலை டி எம் எஸ் சின் மகனே பாடி இருக்கிறார் .

நிகழ்ச்சியில் யுகபாரதி பேசும்போது,”என் நண்பர் தயாரிப்பாளராக ஆகியிருப்பது மகிழ்ச்சி. நகைச்சுவைக்கு இவரைத் தவிர ஆள் இல்லை என்பதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் யோகிபாபு. தமிழ் சினிமாவில் பெரும்பாலான இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், என் நண்பன் முத்துகுமாருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி” என்றார்.

எடிட்டர் சான் லோகேஷ் தன் பேச்சில் ,”முத்துக்குமரன் எனக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்கு விடாமுயற்சி எடுத்துக் கொண்டே இருப்பார். இந்த படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. டிரெய்லரில் பல விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறோம். படம் முழுக்க சிரித்துக் கொண்டே இருக்கலாம். நிச்சயம் இப்படம் வெற்றிபெறும்” என்றார்.

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் பேசுகையில் , “என்னுடைய முதல் படத்திற்கு எக்ஸ்க்யூட்டிவ் தயாரிப்பாளராக இருந்தார். இப்படம் பிரம்மாண்டமாக வந்திருப்பதற்கு தயாரிப்பாளர் தான் காரணம் என்றார்.

படத்தின் இயக்குநர் முத்துகுமரன் பேசும்போது,”நானும் யோகிபாபுவும் நண்பர்கள். ஒரே அறையில் தங்கியிருந்தோம். அப்போது நாங்கள் இருவரும் இந்த கதையைப் பற்றி பேசினோம். யாராவது தவறு செய்தால் தண்டனை கொடுப்பது எமதர்மன் தான். அதை மையமாக வைத்து நகைச்சுவையாக எடுத்திருக்கிறோம்.
ராதாரவி யோகிபாபுவிற்கு தந்தையாக நடித்திருப்பார். அவரைத் தவிர வேறு யாரும் இந்த பாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்திருக்கமாட்டார்கள். தயாரிப்பாளரிடம் இக்கதையைக் கூறி, தயாரிப்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்றேன். கதையைக் கேட்டதும் நானே தயாரிக்கிறேன் என்றார்.

கலை இயக்குநர் நான் நினைத்ததைவிட பிரம்மாண்டமாக செட் அமைத்துக் கொடுத்தார். அதுதான் படத்திற்கு முக்கியம். அதேபோல், ஆடை வடிவமைப்பு முருகன் சிறப்பாக செய்துக் கொடுத்தார். ‘கன்னிராசி’ படத்தை 45 நாட்களில் இயக்கி முடித்தேன். இசைக்கு ‘கன்னிராசி’ படத்திற்கே ஜஸ்டினை அழைக்க நினைத்தேன். ஆனால், சில காரணங்களால் அவரை அழைக்கமுடியவில்லை. இந்த படத்தில் ஜஸ்டின் இசையமைத்ததில் மகிழ்ச்சி.
யோகிபாபுவை பற்றி நான் பேசிக் கொண்டே போகலாம். அவரை நடிகனாகும் முன்பிருந்தே தெரியும். ஒரு காலகட்டத்தில் அவர் சம்பாதித்துக் கொண்டு வரும் 300 ரூபாய் தொகையில்தான் நாங்கள் சாப்பிடுவோம். அவர் இந்தளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இயக்குநர் மூர்த்தி தனது பேச்சில், ‘‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி‘ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். அப்படம் மாபெரும் வெற்றியடையும் என்று நினைத்தேன். அபோல் இப்படமும் வெற்றியடையும் என்ற தோன்றுகிறது. ஆன்லைனில் பதிவு செய்யப்படும் திரையரங்க டிக்கெட் விலை அதிகரித்திருக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. அதை பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.” என்றார்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா அதற்கு பதில் சொல்லும் விதமாக, “இயக்குநர் மூர்த்தி கேட்ட கேள்வி சரியானது தான். டிக்கெட் விலையில் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. கோரிக்கை விடுத்தாலே போதும். ஆனால், யாரை அழைத்துக் கொண்டு பேசுவது என்று தெரியாமல் தயாரிப்பாளர்கள் அனாதையாக நிற்கிறோம். இந்நிலைமைக்கு முறையான முயற்சி செய்யாமல் இருப்பதுதான் காரணம். தமிழ் ராக்கர்ஸ், டிக்கெட் விலை ஏற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்போம்.

‘தர்ம பிரபு’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்ததும் இப்படத்தை இழந்துவிட்டோம் என்று அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பொறாமை ஏற்பட்டிருக்கும். யோகிபாபுவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இயக்குநர் முத்துகுமாரின் முகபாவனை நன்றாக இருக்கிறது. அவரும் நடிக்கலாம்.
இதுவரை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நகைச்சுவை நடிகர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஏன் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளவில்லை என்பதை புரிந்துக் கொண்டு இனிமேல் வருபவர்கள் அந்த தவறை சரிசெய்து கொள்ள வேண்டும்.” என்றார் .

“இப்படத்திற்காக பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன்.
யோகிபாபு தனது பேச்சில் , “இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான், பூலோகத்தில் சாம். நானும், முத்துக்குமரனும் 15 வருட நண்பர்கள். அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா’வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில்தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். அப்போது பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது. நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘கூர்கா’ படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன். யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று சிலர் கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள். வெற்றி பெறுகிறார்கள்.. என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் இப்படமும் அமையும்.
நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள் “என்றார்.
