எம் ஜி ஸ்டுடியோஸ் மற்றும் பைவ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் கணேஷ் கே பாபு, மற்றும் மாறன் தயாரிக்க, அஜய் கார்த்திக், அர்ச்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ் , கே. பாக்யராஜ், வி டி வி கணேஷ் நடிப்பில் கணேஷ் பாபுவின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி கல்யாண் ஜெகன் இயக்கி இருக்கும் படம்.
டிசைனிங் நிறுவனத்தில் வேலை செய்ய நகருக்கு வரும் ஓர் இளைஞன் (அஜய் கார்த்திக்), கருணாகரன் (கே.பாக்யராஜ்) என்பவரின் வீட்டு மாடியில் வாடகைக்கு தங்குகிறான். கருணாகரனுக்கு ஒரு மகள் (அர்ச்சனா நேத்ரன்)
கொஞ்ச நாளைக்கு முன்பு அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த மூன்று நபர்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் எரித்துக் கொண்டும் செத்த நிலையில், வீட்டுக்குள் அமானுஷ்ய நிகழ்வுகள்! சில கோர உருவங்களை அவன் பார்க்கிறான்.உயிர் பயம் வருகிறது.
வீட்டைக் காலி செய்யலாம் என்றால் பெரியவர் கருணாகரன் அந்த வீட்டை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த இளைஞன் ஒரு மூன்று மாதம் இருந்து விட்டு காலி செய்தால் பேய் இல்லை என்று உறுதி ஆகி அவர் வீடு விலை போய் விடும். இல்லாவிட்டால் விற்க முடியாது . அவருக்காக அவன் அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, என்ன நடந்தது என்பதே படம்
படத்தின் துவக்கத்தில் வரும் அந்த மூவர் கொலை, தற்கொலை , எரிப்பு காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் சிறப்பு. இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர் ரவி சக்திக்கும் பாராட்டுகள்.
பாக்யராஜ் தோன்றும் முதல் காட்சியிலேயே அவர் பிணமாக இருப்பது இந்த சமயத்தில், மனநிலையில் திக்கென்று இருக்கிறது.
ஆழமான அமைதி திடீர் சத்தங்கள், கோர உருவம் என்று அவ்வப்போது பயமுறுத்துகிறார் இயக்குனர், ஒரு பேய்க்கதையை சைக்கலாஜிக்கலாகவும் சொல்கிறார் . சில விஷயங்கள் கவனிக்க வைக்கின்றன. விஷுவலாக சில விஷயங்களை உணர்த்த முயல்வதும் சிறப்பு.
மனு ரமேசனின் பின்னணி இசைக்கும் ஒலி வடிவமைப்புக்குமான புரிதல் நன்றாக இருக்கிறது சண்முகராஜாவின் கலை இயக்கமும் பேய்ப்பட உணர்வுக்கு பலம் சேர்க்கிறது.
நாயகன் அஜய் கார்த்திக் உற்சாகமாக நடிக்கிறார் . பயம் குழப்பம், சோர்வு எல்லாவற்றையும் கண்களில் அழகாக காட்டுகிறார்.முகமும் ஒத்துழைக்கிறது. நல்ல திரைக்கதைகள் அமைந்தால் நன்றாக வருவார்.
விசாரணை அதிகாரியாக நட்டி நடராஜுக்கு உண்மையை கொண்டு வரும் கேரக்டர் . விடிவி கணேஷ் நடிகராக ஒரு சீனில் வந்து காமெடி பண்ண முயல்கிறார்
கனவு என்று சொல்லப்படும் சில விஷயங்கள் நிஜத்தில் நடக்கும் காட்சிகளாக வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
உள்ளுக்குள் ஒரு கதை இருக்கிறது. அதை கடைசி நேரத்தில் அவசர அவசரமாக சொல்ல முயன்றது பலன் தரவில்லை.