சிவ கார்த்திகேயன் புரடக்ஷன்ஸ் சார்பில் சிவ கார்த்திகேயன் மற்றும் கேஜே ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜெ ராஜேஷ் தயாரிக்க, சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்,யோகி பாபு, வினய் நடிப்பில் நெல்சன் இயக்கி இருக்கும் படம் டாக்டர்
அறிவுப்பூர்வமான ,யதார்த்தமான மிலிட்டரி டாக்டர் இளைஞன் ( சிவகார்த்திகேயன்) கல்யாணத்திக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில், எப்போதும் இனிமையான வார்த்தைகளை மட்டும் எதிர்பார்க்கிற மணப்பெண்ணுக்கு ( பிரியங்கா மோகன்) அவனைப் பிடிக்காமல் போகிறது
இந்த நிலையில் மணப்பெண்ணின் அண்ணன் மகளான சிறுமி கடத்தப்பட,அந்தக் குடும்பத்துக்கு உதவும் நாயகன், ஒரு நிலையில் ஒரு கொடூரமான இன்டர்நேஷனல் குழந்தைக் கடத்தல் கும்பலை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது .
வித்தியாசமான முறையில் ரூட் பிடித்து அவர்களை டாக்டர் நெருங்க , ரத்த வெறி பிடித்த அவர்களுக்கும் டாக்டருக்கும் இடையிலான பகையின் விளைவு என்ன என்பதே டாக்டர் .
கதை சீரியசான ஒன்றாக இருந்தாலும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்புகள் (சிவகார்த்திகேயன் உட்பட) ,தெறிக்க வைக்கும் காமெடி வசனங்கள் என்று முதல் பாதி களை கட்டுகிறது .
சீரியசாக சிவ கார்த்திகேயன் நடிக்க,யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா , சிவா அரவிந் போன்றவர்கள் அதிரடியான காமெடியில் படம் பார்ப்போரை கலகலக்க வைக்கிறார்கள் .
இரண்டாம் பகுதியில் ஆரம்பத்தில் கொஞ்சம் சுணங்கி ,பின்னர் கடத்தப்பட்ட மகளே பெற்றோருக்கு உணவு பரிமாற வரும் ஒரு நெகிழ்சசியான காட்சியில் நிமிர்கிறது படம். (அந்தக் காட்சியில் கலைஞர்களின் நடிப்பு, இயக்கம் ,படமாக்கல் , ஒளிப்பதிவு,பின்னணி இசை ,படத் தொகுப்பு அனைத்தும் அருமை . A COMPLETE SCENE !)
அதன் பின் படம் கடைசி வரை சுவாரஸ்யமாக போய் நிறைகிறது (மொட்டை பாஸ் வில்லன் எப்படி மெயின் வில்லனுக்கு எதிரியாகி ஹீரோவுக்கு ஆதரவாக இயங்குகிறான் என்பதற்கு மட்டும் , கோனார் நோட்ஸ் போட்டு விளக்கி இருக்கலாம் .)
தனக்கு மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன் . (இதில் தெரிகிறது நெல்சனின் இயக்க ஆளுமை )
இழைத்து இழைத்து உருவத் தோற்றம் சண்டைக் காட்சிகள் ,நடனம் இவற்றிலும் பின்னிப் பெடலெடுக்கிறார் சிவ கார்த்திகேயன்.
பாடல் ஆசிரியராகவும் மாறி இருக்கிறார் . விரைவில் இயக்குனர் ஆகவும் வாழ்த்துகள் !
அழகான அசட்டுத்தனமான தமிழ் சினிமா கதாநாயகியாக பளபளக்கிறார் பிரியங்கா மோகன்
சிறுமி சாரா வினீத் நெகிழ வைக்கிறார் .
விஜய் கார்த்திக் ஒளிப்பதிவில் கோவா .. பால்கோவாவாக இனிக்கிறது .
நிர்மலின் படத்தொகுப்பும் சிறப்பு .
காமெடிக்கு லாஜிக் தேவை இல்லைதான் .ஆனால் அதுக்கும் ஓர் அளவு வேண்டாமா நாட்டாமை? போலீசாக வரும் ரெடின் கிங்ஸ்லி தனது உயர் அதிகாரி உட்பட அனைவரையுமே மிரட்டும் தொனியில் பேசுகிறார் .
அனேகமாக படத்திலேயே அவர் தயாரிப்பாளர் கோட்டபாடி ராஜேஷை மட்டும்தான் மிரட்டாமல் விட்டிருப்பார் போலிருக்கிறது. பிரேம்ஜிக்கு வெங்கட் பிரபு கூட இப்படி ஒரு FREE WHEEL கேரக்டர் கொடுத்ததாக வரலாறு , பூகோளம் எதுவுமே இல்லையே .
எம் ஜி ஆரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்றான ‘சக்கரவர்த்தி திருமகள் ‘ படத்தில் முழுப் படமும் முடிந்த பிறகு காதல் எனும் சோலையிலே ராதே ராதே என்ற ஒரு முழு டூயட் பாடல் வரும் . அதன் பின் வேறு பல படங்களில் தத்துவப் பாடல் , சோகப்பாட்டு எல்லாம் படத்தின் கடைசியில் திரைக்கதையின் ஒரு பகுதியாகவே வரும் . அன்று படம் என்றால் பாட்டுதான் என்ற நிலையில் அது இயல்பான ஒன்றுதான் .
ஆனால் பாட்டு என்றாலே தம்மடிக்க , போன் பார்க்க, ஒரு எக்ஸ்ட் ரா சான்ஸ் என்று ஆகி விட்ட நிலையில் இன்று அப்படி ஒரு பாடல் வைத்து ரசிகர்களை உட்கார்ந்து பார்க்கவும் வைக்க, என்ன ஒரு திறமையும் தில்லும் வேண்டும் . இந்தப் படத்தில் அப்படி ஒரு பாடல் வைத்து ஜெயித்து இருக்கிறார்கள் .
இசை அமைப்பாளர் அனிருத் ,கடைசிவரை ரசிகர்களை காமெடியும் த்ரில்லும் கலந்து கட்டிப் போட்ட நெல்சன் இருவரின் கூட்டுச் சாதனை அது .

தவிர சிவகார்த்திகேயன் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு இதை இயக்குனரின் படமாக கொண்டு வந்திருக்கும் நெல்சனை எண்ணி வியந்து சபாஷ் சொல்லாமல் இருக்க முடியவில்லை .
டாக்டர் …. ஆப்பரேஷன் சக்ஸஸ்; ஆளும் ஹெல்த்தி .