சபரி புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்து சதாசிவம் சின்னராஜ் என்பவர் இயக்க, சாய் தன்யா, இயக்குனர் பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ ஏ கே சுந்தர், நடிப்பில் வந்திருக்கும் படம் .
மாம்பழச் சாறு தயாரிப்புத் தனியார் நிறுவனம் ஒன்றில் வேதியியல் பிரிவில் பனி புரியும் இளைஞர் ஒருவர் ( சதாசிவம் சின்ன ராஜ்) அங்கு பணிக்கு வரும் பெண்ணை ( சாய் தன்யா) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .
மனைவியை சந்தோஷப்படுத்தவும் வசதிக்கு ஆசைப்பட்டும் பைக், செல்போன் , அடுத்து கார் ஆகியவற்றை வாங்க , மாம்பழ சீசன் முடிந்ததும் வேலை போக , கடன் கொடுத்தவர்கள் எல்லாவகையிலும் டார்ச்சர் கொடுக்க, கணவன் மனைவி நிம்மதி போய் வெறுப்பு வர , ஒரு நிலையில் அதனால் அம்மாவின் உயிருக்கே ஆபத்து வர நடந்தது என்ன என்பதே படம் .
ஈ எம் ஐ, தனிக்கடன் , அதிக வட்டிக்கு கடன் போன்ற விசயங்களால் ஏற்படும் ஆபத்தை சொல்லும் நல்ல நோக்கம் இந்தக் கதையில் இருக்கிறது .
அது பாராட்டப்பட வேண்டிய அம்சம் .
பேரு வச்சா போதுமா? சோறு வைக்க வேணாமா? வெதை போட்டா போதுமா? தண்ணி ஊத்த வேண்டாமா?
மாம்பழச் சாறு சீசன் வியாபாரம் என்பது நாயகனுக்கு தெரியாதா? அந்த நிறுவனத்தில் வேறு பழச்சாறு ஏதும் எடுக்க மாட்டார்களா? பெட்ரோமாக்ஸ் லைட் மட்டும்தான் இருக்குமா?
ஒரு கெமிஸ்ட்டுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை போனால் அடுத்த நிறுவனத்தில் வேலை கிடைக்காதா?
கிடைக்காது என்றால் எந்த நம்பிக்கையில் இவ்வளவு கடன்களை ஈ எம் ஐ கட்ட முடியும் என்று நம்பி வாங்கினார் ?
காலை எடுத்து வைக்கும்போதே கட்டையைப் போடுவது போல கதையின் ஆரம்பத்திலே இவ்வாளவு கோளாறு இருப்பதால் அப்புறம் நடக்கும் எதுவும் ஈர்க்கவில்லை.
தவிர கடன் வசூலிப்பு ஈ எம் ஐ விசயங்களில் பல கட்டுப்பாடுகள் வந்து விட்ட நிலையில் படம் முழுக்க பழைய பல்லவியே.
காமெடி, வசனம் , நடிப்பு , இயக்கம் , மேக்கிங் எல்லா வகையிலும் பக்குவமும் நேர்த்தியும் இல்லை.
சினிமாவில் நல்லது சொல்வது முக்கியம்தான் . ஆனால் அதை நல்லவிதமான சொல்வது அதை விட முக்கியம் .